எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – சேலம் கிழக்கு தொடர் பரப்புரைக் கூட்டங்கள்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
முதலில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் மட்டும் நடத்துவதற்காக காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்தும், ஒரு மாத காலத்திற்கு எந்த நிகழ்ச்சிகளுக்குமே அனுமதி இல்லை என்றும் கடிதம் கொடுத்தார். (ஆனால் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியது)
மாவட்ட கழக பொறுப்பாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்ட பின்னால், நாள் ஒன்றிற்கு ஒரு கூட்டம் வீதம் பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் எழுதி கொடுக்கப்பட்டது. முதலில் மனுவை பெற மறுத்த உதவி ஆய்வாளர், உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் கூட்டங்களின் எண்னிக்கையை அல்லது நாட்களை குறைத்து கொள்ள வேண்டினார். அதை ஏற்க மறுத்த தோழர்கள் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 11 ஆம் நாள் பெருமாகவுண்டம்பட்டி, 12 – கோழிப்பூர், 13 – ஊஞ்சக்காடு, 14 – மகுடஞ்சாவடி, 15 – அழகப்பம்பாளையம், செப்டம்பர் 18 – எட்டிக்குட்டைமேடு, 19 – காட்டூர், 20 – கே.கே.நகர் ஆகிய பகுதிகள் இதுவரை எட்டு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன; 21 – காடையாம்பட்டியிலும், 22 – சித்தர் கோவிலிலும் பின்னர் நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் மாலை 6-00 மணி முதல் இரவு 8-00 மணி வரை நடைபெறும் இக்கூட்டங்களில், தோழர் புளியம்பட்டி இரமேசு ஜாதி ஒழிப்பு பாடல் பாட, தோழர்கள் தனசேகர், தங்கதுரை, மோகன்ராஜ், தப்பகுட்டை கோபிநாத், குமார், முருங்கப்பட்டி இரமேசு, லோகவர்மன் முதலானோர் சிற்றுரை ஆற்ற, தோழர் கோகுலகண்ணன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தி விளக்க உரை ஆற்றி வருகிறார். கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஒரு கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.
அனைத்து கூட்டங்களிலும் தோழர்கள் மணிகண்டன், மோகன்ராஜ் ஆகியோர் ஒலிபெருக்கி அமைக்கும் பணியையும், முருங்கப்பட்டி இரமேசு, தங்கதுரை ஆகியோர் துண்டறிக்கை வினியோகம் செய்யும் பணியையும், தோழர் விஜி பரப்புரை வாகனம் ஓட்டும் பணியையும் செய்து வருகிறார்கள். தோழர் முத்துமாணிக்கம் அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து நின்று அவர்கள் பேசும் கருத்துகளை அறிந்து வருகிறார். கழக செயல்பாடுகள் சரியானது – நியாமானது என்ற கருத்தையே பெரும்பாலும் தெரிவிக்கிறார்கள்.
அனைத்து ஊர்களிலும் புதிய ஆதரவாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். அழகப்பம்பாளையம் என்ற ஊரில் மட்டும் ஒருவர் (குடிபோதையில்) எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதே ஊரைச் சார்ந்த புதிய ஆதரவாளர்கள் அந்த பகுதியில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
செய்தி : சி.மோகன்ராஜ்

11950150_414708892058244_5306671673317342739_o 11999799_416682195194247_3097949829404338879_o 11113436_417059878489812_7513782277197824657_o 11032420_414709252058208_3437766792481583161_o

You may also like...