கோழைகளின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: பகுத்தறிவாளர்கள் உறுதி
“எங்கள் உயிரைப் பறித்தாலும், பகுத்தறிவு கொள்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது” என்று பகுத்தறிவாளர்கள் உறுதியுடன் பதிலடி தந்தள்ளனர்.
கருநாடக மாநிலத்தின் தலைசிறந்த சிந்தனை யாளர், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர், முன்னாள் துணைவேந்தர் எம்.எம். கல்புர்கி, தார்வாரில் அவரது இல்லத்தில் மதவெறி சக்திகளால் சுட்டுக் கொல்லப் பட்டவுடன் அடுத்த சில மணி நேரங்களிலேயே புவித் ஷெட்டி என்ற பஜ்ரங் தளத்தைச் சார்ந்த ஒரு மதவெறியன், “இந்து மதத்தை எதிர்த்தால் அதற்கு இதுதான் தண்டனை. இனி அடுத்த இலக்கு – மைசூர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர், கே.எஸ்.பகவான்” என்று ‘டிவிட்டர்’ தளத்தில் பதிவேற்றினான். அந்த ஆசாமியை கைது செய்து, கருநாடக சிறையில் அடைத்த அதே நாளில், நீதிமன்றம் பிணை வழங்கிவிட்டது.
இந்த மிரட்டலுக்கு கே.எஸ். பகவான் அளித்த பேட்டி, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடுகளில் வெளி வந்திருக்கிறது. “அந்த இளைஞர் தவறாக வழி நடத்தப்படுகிறார். ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அவரை சரியாக வழி நடத்தவில்லை. அவருக்காக நான் மிகவும் வருந்து கிறேன். நான் அந்த இளைஞரை சந்தித்து விவாதிக்க விரும்புகிறேன். என்னால் நெடுந்தூரம் பயணிக்க முடியாது. எனவே அவரே எனது மைசூர் இல்லம் வந்து என்னை சந்தித்து விவாதிக்கட்டும். நான் மகிழ்ச்சியோடு கருத்து மாறுபாடுகளை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால், என்னைக் கொன்று விடுவேன் என்பதற்கெல்லாம் அஞ்சி, என் பணிகளை நிறுத்திக் கொள்ள மாட்டேன். கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் என்ற மூவரையும் சுட்டுக் கொலை செய்தவர்களுக்கு நான் ஒன்றைத் தெரி விக்கிறேன் – எங்களை அழிக்கலாம்; சுக்குநூறாகக் கிழித்தெறியவும் செய்யலாம்; ஆனால் எங்கள் எழுத்துகள், சிந்தனைகள் வாழ்வாங்கு வாழும். என்னைக் கொலை செய்வதால் – எனது கொள்கை உறுதியை மாற்றிவிட முடியாது. நான் அவர்களைக் கண்டு அஞ்சி ஓடி ஒளியவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். ‘சங்கராச்சாரியும் பிற் போக்குத் தத்துவமும்’ என்ற நூலை முதன்முதலாக எழுதியபோது முதல் மிரட்டலை சந்தித்தேன். ‘சங்கராச்சாரி சமூகத்தை சீர்திருத்த வந்தவரல்ல; ஜாதி அமைப்பை பாதுகாக்க வந்தவர்’ என்று – அந்த நூலில் ஆதாரத்துடன் மெய்ப்பித்திருந்தேன். சம°கிருத மொழியிலுள்ள அவரது கருத்துகளை முழுமையாகப் படித்தபோது, அவர் ‘தலித்’ மக்களுக்கும் பெண்களுக்கும் விரோதி என்பதை என்னால் நிரூபிக்க முடிந்தது” என்று கே.எ°. பகவான் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
சனல் இடமருகு
கேரளத்தைச் சார்ந்த சனல் இடமருகு , ‘இந்தியப் பகுத்தறிவாளர் சங்கம்’ என்ற அமைப்பின் தலைவர். ஏராளமான நூல்களை பகுத்தறிவு பார்ப்பன எதிர்ப்புப் பார்வையில் ஆதாரங்களோடு எழுதியவர். இந்தியாவில் எங்கெல்லாம் மூடநம்பிக்கைகள் கொழுந்துவிட்டு எரிந்தனவோ, அங்கெல்லாம் சென்று அவற்றைத் தாக்கித் தகர்த்தவர். சோதிடத்தை எதிர்த்தார்; அன்னை தெரசாவை விமர்சித்தார்; விபூதி வரவழைக்கும் பொய்மையைத் தோலுரித்தார். ஒரு கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த இவர், கிறித்துவத்தை மறுத்து நாத்திகர் ஆனார். உலகின் தலைசிறந்த நாத்திகப் பிரச்சாரகர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
2012 மார்ச் மாதத்தில், ‘மும்பையிலுள்ள அன்னை வேளாங்கன்னி தேவாலயத்திலுள்ள சிலுவையில் தொங்கும் ஏசுவின் பாதங்களில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது’ என்ற செய்தி நாடெங்கும் தீயாய்ப் பரவியது. (பிள்ளையார் பால் குடித்தார் என்பதைப்போல) இதைத் தொடர்ந்து, மும்பை சென்ற இடமருகு, அந்தச் சிலுவையைப் பரிசோதித்தார். ‘சிலுவையுடன் இணைக்கப்பட் டிருந்த தண்ணீர்க் குழாயில் இருந்து நீர்க் கசிவு மூலம், ஏசுவின் பாதங்களில் இருந்து நீர் சொட்டுகிறது’ என்று உண்மையைக் கண்டறிந்து ஏசுவின் அருள் என்ற மோசடியை அம்பலப்படுத் தினார். அப்போது அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இப்போது பின்லாந்து நாட்டில் தஞ்சமடைந் துள்ளார்.
இப்போது ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வின் ஞாயிறு மலரான ‘சண்டே டைம்ஸ்’ இதழ் (செப்.6, 2015) அவரது சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதில் பகுத்தறிவாளர்கள், மூட நம்பிக்கைகளை எதிர்த்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத் தும் சுதந்திரம், இப்போது பறிக்கப்பட் டுள்ளது என்று வேதனையை வெளிப் படுத்தியுள்ளார். அது தொடர்பாக தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“பிரபல பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராபர்ட் ஈகிள் எங்களோடு, பல வாரங்கள் சுற்றுப் பயணம் செய்து, நாங்கள் மக்களிடையே மூடநம்பிக்கைகளை எதிர்த்து நடத்திய இயக்கங்களை கருத்துகளை பதிவு செய்து, ‘சாமியார்களின் மோசடி’ என்ற தலைப்பில் தொடர்ந்து, 18 மாதங்கள் ஒளிபரப்பியது, அதற்கு மக்களிடம் பேராதரவு இருந்தது. இது 20 ஆண்டு களுக்கு முன் நடந்தது.
ஒரு பிரபலமான சாமியார், தனது மந்திர சக்தியினால் என்னைக் கொலை செய்துவிடுவதாக தொலைக்காட்சி வழியாக சவால் விட்டார். நான் சவாலை ஏற்றுக் கொண்டேன். தொலைக்காட்சி யிலேயே இது நேரடியாக ஒளி பரப்பானது. என்னை அமர வைத்து, எதிரே அந்த சாமியார் ஒரு மணி நேரம், ஏதேதோ மந்திரங்களை ஓதினார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தனது மந்திரப் பூஜையை நிறுத்திக் கொண்டு, “உன்னை சில சக்தி வாய்ந்த கடவுள்கள் காப்பாற்ற முயற்சிக்கின்றன” என்றார். கடவுளே இல்லை என்று கூறும் என்னைக் காப்பாற்ற சக்தி வாய்ந்த கடவுள்கள் வந்து விட்டார்களாம். பிறகு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கேட்டார். இப்போது தொலைக்காட்சி காமிராவுக்குப் பின்னால் தனது சீடர்களுடன் நெருப்பை வளர்த்தார். பொம்மை ஒன்றை வைத்து, நெருப்பில் சில சிவப்பு வண்ணப் பொடிகளைத் தூவி, ஏதேதோ மந்திரங்களை ஓதினார். அந்தப் பொம்மையை நானாக உருவகித்துக் கொண்டு, சாகடிக்க முயற்சிப்பதாகக் கூறினார். கடைசியில் தோல்வியடைந்தனர். நான் சிரித்துக் கொண்டிருந்தேன். பல கோடி மக்கள் உலகம் முழுதும் அதைப் பார்த்தார்கள். அப்போதுகூட எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. அந்தக் காலத்தில் நாடு முழுதுமிருந்தும் ஏராளமான பகுத்தறி வாளர்கள் உருவானார்கள். இணையதளங்கள் வழியாக மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தினர்.
அன்னை தெரசாவுக்கு பெருமை சேர்க்க, சில கிறிஸ்தவ நிறுவனங்கள் ஒரு பொய்யை பரப்பின. மோனிக்கா பெசரா என்ற பெண்ணுக்கு வயிற்றில் புற்று நோய் வந்தபோது அந்தப் பெண் தனது வயிற்றில் தெரசாவின் படத்தை வைத்துக் கொண்டிருந்தார். நோய் குணமாகி விட்டது என்று கூறினார்கள். அந்தப் பெண் ஏற்கெனவே புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதை நான் விசாரணை நடத்தி அம்பலப்படுத்தினேன். புட்டபர்த்தி சாய்பாபா இறந்தபோது அவருக்கு வயது 80. ஆனால், தனக்கு 96ஆம் வயதில்தான் மரணம் என்று அறிவித்த புட்டபர்த்தி, ஏன் 80-லேயே மரணமடைந்தார் என்று கேட்டேன். அவரது சீடர்களுக்கு என் மீது கோபம் வந்துவிட்டது. இப்போது இந்தியா மிகவும் ஆபத்தான பழைமையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது” என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் சனல் இடமருகு. ‘ஆனாலும் பகுத்தறிவு சிந்தனைகளை மிரட்டல்களால் பணிய வைக்க முடியாது’ என்று அவர் உறுதிபடக் கூறினார்.
பெரியார் முழக்கம் 10092015 இதழ்