தேசியப் பாதுகாப்புச் சட்டம் தகர்ந்தது 8 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கழகத் தோழர்கள் விடுதலை: உற்சாக வரவேற்பு

இராஜபக்சே, கொழும்பில் முன்னின்று நடத்திய நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று நாடு முழுதும் எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்தன. அப்போது சென்னை மயிலாப்பூர், மந்தை வெளியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான அஞ்சலகம் மீது வெடி பொருள் வீசியதாக கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், தமிழக அரசு, தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்டத்தை ஏவியது.
2013, அக்டோபர் 29 ஆம் தேதி கைது செய்யப் பட்ட தோழர்கள் புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை.அருண் ஆகியோர் வழக்கிற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இறுதியாக 2014, ஜூன் 24 ஆம் தேதி நீதிபதி வி.தனபாலன், எம்.சொக்க லிங்கம் முன் விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், கழகத் தோழர் களுக்காக வாதிட்டார். தேசியப் பாதுகாப்புச் சட்டம் முறை கேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி நீதிபதிகள் தடுப்புக் காவலை நீக்கம் செய்தனர். 8 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கழகத் தோழர்கள் ஜூன் 25 மாலை தோழர்கள் விடுதலையானார்கள்.
மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டிலிருந்து இராயப்பேட்டை பெரியார் படிப்பகம் வரை தோழர்கள் எழுச்சியான வரவேற்பு தந்து, ஊர்வலமாக அழைத்து வந்தனர். படிப்பக வாயிலில் சிறை மீண்ட தோழர்களுக்கும் கழக வழக்கறிஞர் களுக்கும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கருப்பு உடை போர்த்தி வரவேற்றார். தோழர்களை வரவேற்க லோகு. அய்யப்பன் தலைமை யில் புதுச்சேரி கழகத் தோழர்களும் திரண்டிருந்தனர்.
அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஈழத் தமிழர் பிரச்சினைக்காக 4 கழகத் தோழர்கள் 8 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்
தக்கது.

பெரியார் முழக்கம் 03072014 இதழ்

You may also like...

Leave a Reply