கழக செயலவையின் முடிவுகள்

‘இந்துத்துவ சக்தி’களை எப்போதுமே எதிர்த்து வரும் சி.பி.அய். – சி.பி.எம். – இஸ்லாமிய கட்சிகள் – ‘விடுதலை சிறுத்தை’களை ஆதரிக்க வாக்காளர்களுக்கு ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ வேண்டுகோள்

ஜாதி வெறியின் குறியீட்டு அடையாளமாக தர்மபுரியில் பா.ம.க. வேட்பாளரை தோற்கடிப்பீர்!

கழக செயலவையின் முடிவுகள்

மயிலாடுதுறையில் மார்ச் 29, 2014 இல் கூடிய கழக செயலவையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விவாதித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தேர்தல் நிலைப்பாடு

ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும் அதன் அரசியல் முகமான பா.ஜ.க.வும், இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பெரும் தொழில் நிறுவனங்களின் பின்பலத்தோடு நாடாளுமன்ற தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளன. பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்களையும், பல்வேறு பண்பாடுகளையும் கொண்ட நாட்டில் “ஒரே நாடு-ஒரே பண்பாடு” என்ற ஒற்றை அடையாளத்தைத் திணிப்பதே இவர்களின் இலட்சியம் என்பதை கடந்தகால வரலாறுகள் மெய்ப்பிக்கின்றன. தங்களின் பாசிச அடையாளத்தை மறைத்துக் கொண்டு ‘வளர்ச்சி’ என்ற பொய் முழக்கத்தோடு அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் முயற்சியை முறியடிக்கும் கடமையும் பொறுப்பும் தமிழர்களுக்கு இருப்பதை சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம். குறிப்பாக மதவெறி தலைதூக்கிடமால், சமூக நீதி, மதசார்பின்மைக்கான நெகிழ்ச்சியோடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கிடும் பெரியாரின் தமிழ் மண்ணில் இத்தகைய சக்திகள் வளர்வதை முறியடிப்பதற்காக வரவிருக்கும் நாடளு மன்ற தேர்தலில் தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள் கிறோம். அதன் அடிப்படையில் இந்துத்துவ சக்திகளை எதிர்ப்பதில் எப்போதும் உறுதியாக நிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய சமூக ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சி களின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என தமிழக வாக்காளப் பெருமக்களை திராவிடர் விடுதலைக் கழகம் அறைகூவி அழைக்கின்றது.

அண்மைக் காலமாக தமிழகத்தில் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, அரசியலுக்கு அணிதிரட்டும் ஆபத்துகள் தலைதூக்கி வருவதை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. தருமபுரியில் நடந்தேறிய வன்முறை வெறியாட்டமும், ஜாதிவெறிக்குப் பலியான இளவரசனின் கோர மரணமும் தமிழ்நாட்டையே உலுக்கியதை நாம் அறிவோம். அந்த தருமபுரியில், ஜாதி வெறியின் குறியீட்டு அடையாளமாக திகழும் பா.ம.க வேட் பாளராக களமிறங்கியிருக்கும் மருத்துவர் அன்பு மணியை தோற்கடித்து ஜாதி வெறியூட்டலை தமிழகம் அனுமதிக்காது என்பதை உணர்த்த வேண்டுமாய் தருமபுரி நாடாளுமன்ற வாக்காளப் பெருமக்களை திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கள நிலவரங்களையும் சிறப்புச் சூழல்களையும் கருத்தில் கொண்டு, தங்கள் தேர்தல் நிலைப்பாட்டை வகுத்துக் கொள்ள புதுச்சேரி மாநிலக் கழகத்திற்கு இச்செயலவை அனுமதி அளிக்கிறது.

மோடிக்கு எதிராக நூல் வெளியீடு

பா.ஜ.கவின் பிரதம வேட்பாளாராக முன்னிறுத்தப் படும் நரேந்திர மோடி, அதில் வெற்றி பெறுவாரே யானால் நாடு எதிர்நோக்க வேண்டியுள்ள ஆபத்துகளை விளக்கி திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்தி வரும் பரப்புரைகளை மேலும் பரவலாக முன்னெடுக்கவும், அதன் ஒரு பகுதியாக மோடி – இந்துத்துவ பொய்க் கூற்றுகளை மறுக்கும் விளக்க நூல் ஒன்றைத் தயாரித்து மக்களிடம் பல்லாயிரக்கணக்கில் கொண்டு செல்லவும் இந்த செயலவை தீர்மானிக்கிறது.

ஜோதிடக் கல்வி

அறிவியலால் மெய்ப்பிக்கப்படாத – மக்களின் வாழ்க்கையில் குழப்பங்களையும் மன உளைச்சல் களையும் விளைவிக்கும் போலி அறிவியலான (ஞளநரனடி-ளுஉநைnஉந) ஜோதிடத்தை பல்கலைக் கழகங்களில் பாடமாக இணைத்திருப்பதை இரத்து செய்ய வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது. இதை நடைமுறைப்படுத்தி வரும் பல்கலைக்கழகங்கள் முன்னால் ஒத்த கருத்துள்ள அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்திட இந்த செயலவை தீர்மானிக்கிறது.

வடவர் ஆதிக்கம்

வருமான வரித்துறை, சுங்க வரித்துறை போன்ற தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங் களில் அண்மைக் காலமாக அனைத்து மட்டங் களிலும் முழுமையாக இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்தவர்களே குவிந்து வருகிறார்கள். அவர்களின் தாய் மொழியான இந்தியில் தேர்வெழுதக் கூடிய வாய்ப்பை பெற்றுள்ளதோடு, தேர்வு மையங்களிலும் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு பல்வேறு முறை கேடுகள் கையாளப்படும் செய்திகளும் கசிகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்தின் மத்திய அரசு அலுவலகங்களிலும் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தோரையே தேர்ந்தெடுக்கும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டுமாய் மத்திய அரசை வலியுறுத்து கிறோம் தமிழக அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என இந்த செயலவை வலியுறுத்துகிறது.

வன்கொடுமைத் தடுப்பு அவசரச் சட்டம்

1989ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தாழ்த்தப் பட்டோர் – பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் விடுபட்டிருந்த சில கூறுகளை உள்ளடக்கி – புதிய வலிமையான ஒரு சட்டத்தை அவசர பிரகடனத்தின் வழியாக மத்திய அரசு அமுல் படுத்தியிருப்பதை இந்த செயலவை வரவேற்கிறது. கடந்த காலங்களைப் போல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் காகிதங்களோடு முடங்கிவிடாமல் அதை செம்மையாக அமுல்படுத்துவதற்கு, சமூக களட்தில் ஜாதி – தீண்டாமைக்கு எதிராக செயல்படும் இயக்கங்கள் மற்றும் அரசுசாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கண்காணிப்பு குழுக்களை மாவட்ட, மாநில அளவில் அமைத்திட முன் வருமாறு தமிழக அரசை இந்த செயலவை கேட்டுக் கொள்கிறது.

பரப்புரை பயணம்

ஒரே ஜாதிக்குள் நிகழும் அகமண முறை திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளின் உடல், உளவியல் பாதிப்புகளை அறிவியல் ரீதியாக விளக்கி கடந்த பிப்ரவரியில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பத்து நாட்கள் பரப்புரை பயணத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போன்ற அகமண எதிர்ப்பு அறிவியல் பரப்புரையை எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டு கட்டமாக நடத்துவது என இந்த செயலவை முடிவு செய்கிறது.

அய்.நா. தீர்மானம்

அய்.நா.வின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் இறுதிப் போரின்போது நடந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரனையைக் கோரி அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், ‘நடுநிலை’ என்ற நாடகத்தை நடத்தி மீண்டும் இந்திய அரசு தமிழகத் தமிழர்களுக்கும், உலகத் தமிழினத்துக்கும் இழைத்துள்ள துரோகத்தை இந்த செயலவை வன்மையாக கண்டிக்கிறது;

இப்போது அய்.நா.வில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், முழுமையான வரவேற்புக்குரியதாக இல்லாவிட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டுவந்த தீர்மானங்களை விட ஒரு முன்னேற்றமாக அய்.நா. வின் மனித உரிமை கண்காணிப்புக்குக் கீழே முதல் முறையாக விசாரணை கோரி கொண்டுவரப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டியதாகும். ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் – ஆயுதப் போராட்டத்தைக் கடந்து, அய்.நா.வின் விவாதத்திற்கு வந்துவிட்ட நிலையில் இந்த அரசியல் நிலையை மேலும் வலுப்படுத்திட சர்வதேச தமிழனத்தோடு இணைந்து முன்னெடுப்பதே சரியான அணுகுமுறை என திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது. இந்த நிலையில் அய்.நா. மற்றும் சர்வதேச தளத்திலிருந்து ஈழப்பிரச்சனையை வெளியில் கொண்டு வந்துவிட துடிக்கும் சிறீலங்கா இந்திய துரோக வலையை புரிந்து கொண்டு அதில் வீழ்ந்து விடக் கூடாது என்பதையும் இந்த செயலவை சுட்டிக்காட்டி எச்சரிக்க விரும்புகிறது.

பெரியார் முழக்கம் 03042014 இதழ், திராவிடர் விடுதலைக் கழகம்,சி.பி.அய்., சி.பி.எம்., இஸ்லாமிய கட்சிகள்,விடுதலை சிறுத்தை,மோடி

You may also like...