தலையங்கம் தேன் கூட்டைக் கலைக்கிறார்கள்!
மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து இந்தி மொழித் திணிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது பா.ஜ.க. ஆட்சி. பிரதமர் இந்திமொழியை மட்டுமே தனது பேச்சு மொழியாகப் பயன்படுத்துவார் என்று முதல் அறிவிப்பு வந்தது. அது அவரது உரிமை. ஆனாலும்கூட குஜராத்தை தாய்மொழியாகக் கொண்ட அவர், இந்தியை ஏன் பேச்சு மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இரண்டாவதாக, சமூக வலைதளங்களில் மத்திய அரசு அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடும்போது, இந்தி மொழிக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று மோடி ஆட்சி அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தபோது இந்தி பேசும் மாநிலங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு என்று சமாதானம் கூறினார்கள். ஆங்கிலத்தின் இணைப்பு மொழிக்கான பயன்பாட்டை, படிப்படியாக அகற்றிட வேண்டும் என்பதே இதற்கான உள்நோக்கம் என்பது எவராலும் புரிந்து கொள்ளக்கூடியதே யாகும்.
இப்போது தமிழ்நாட்டில் ‘தினத்தந்தி’ நாளேட்டில் (8.7.2014) மத்திய இரயில்வே துறை, இந்தி மொழியில் மட்டுமே ஒரு விளம்பரத்தைச் செய்துள்ளது. அந்த விளம்பரம் இரயில்வே துறைக்கானது என்பதை அத்துறைக்கான ‘அடையாள முத்திரை’ என்ற ஒன்றை மட்டும் வைத்துத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி, அந்த விளம்பரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது தமிழ் வாசகர்களுக்குப் புரியாது. தமிழர்களை எழுதப் படிக்கத் தெரியாத ‘தற்குறிகளாக்கி’யிருக்கிறது இந்த விளம்பரம். அரசு பணம் செலவிட்டு விளம்பரம் செய்வதற்கான அடிப்படை நோக்கமே, மக்களிடம் அதற்கான செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான். மக்களுக்கே புரியாத மொழியில் அரசு பொருள் செலவில் விளம்பரங்கள் செய்வது, விளம்பரத்தின் நோக்கத்தையே அர்த்தமற்றதாகி விடுகிறது. இது அரசுத் துறைக்கான விளம்பரம் என்பதைவிட, இந்தி மொழியைத் திணிக்கத் துடிக்கும் ஆட்சியாளர்களின் வெறியையே விளம்பரப்படுத்துகிறது.
இதே நாளேட்டில் இதே நாளில் மத்திய அரசின் வருமானவரித் துறையின் விளம்பரம் ஒன்றும் வந்திருக்கிறது. அந்த விளம்பரத்தை முழுமையாக தமிழிலேயே மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. காரணம், இது தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடமிருந்து மத்திய அரசு திரட்ட விரும்பும் வரி தொடர்பானது. எனவே, தமிழ் நாட்டிலிருந்து ‘வருமானம்’ என்று வரும்போது சுரண்டுவதற்கு மட்டும் இவர்களுக்கு ‘தமிழ்’ தேவைப்படுகிறது.
இப்படித்தான் தமிழ்நாட்டின் கோயில்களில் ‘ஆண்டவனிடம்’ பூஜை செய்வதற்கு எவருக்குமே புரியாத சம°கிருதத்தை மட்டும் பார்ப்பனர்கள் பயன்படுத்துவார்கள். கேட்டால் அதுதான் ‘தேவ பாஷை’ என்பார்கள். அதே கோயில்களுக்குள் பக்தர்களிடம் பணம் பறிப்பதற்கான அத்தனைப் பிரிவுகளிலும் ‘சம°கிருதத்தில்’ எழுத மாட்டார்கள். தமிழில்தான் எழுதுவார்கள். ‘உண்டியல் இங்கே இருக்கிறது’, ‘முடி காணிக்கை செலுத்துமிடம்’, ‘டோக்கன் வாங்குமிடம்’ இப்படி காசு பறிக்கும் இடத்தில் “தேவபாஷை” வராது; தமிழ் தான் வேண்டும்.
1938ஆம் ஆண்டில், இராஜகோபாலாச்சாரி, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, தமிழ்நாட்டில் இந்திக்கான எதிர்ப்பு, பெரியார் தலைமையில் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. அதற்கு முன்பாகவே 1929 ஆம் ஆண்டிலேயே வடநாட்டுத் தலைவர்களை சென்னை மாகாணத்துக்கு இந்திப் பிரச்சாரத்துக்காக காங்கிர° பார்ப்பனர்கள் அழைத்து வந்தபோது, ‘இந்தி’யை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெரியார். ‘ஹிந்திப் புரட்டு’ என்று ‘குடிஅரசு’ ஏட்டில் (20.1.1929) எழுதி, பார்ப்பன மேலாதிக்கத்தைத் தங்க வைக்கும் சூழ்ச்சி என்று எச்சரித்தார்.
1949இல் தமிழ்நாட்டில், காங்கிர° ஆட்சியில் கல்வி அமைச்சராகவிருந்த அவினாசிலிங்கம் அவர்களால் கட்டாய இந்தித் திணிப்பு ஆணை வந்தபோது மீண்டும் போராட்டம் வெடித்தது. 1950இல் இந்தித் திணிப்பு ஆணை நீக்கப்பட்டது. தொடர்ந்து 1952இல் டில்லியின் இந்தித் திணிப்பை எதிர்த்து, தொடர்வண்டி நிலையங்களில உள்ள பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தைப் பெரியார் நடத்தினார். தி.மு.க.வும், அந்தப் போராட்டத்தில் இணைந்து நின்றது. அந்தப் போராட்டத்தினால்தான் தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகையில் முதலிடம் பெற்றிருந்த இந்தி நீக்கப்பட்டு, அந்த இடத்தில் தமிழில் எழுதப்பட்டது.
இப்போது, இந்தியாவில் ‘தேசிய மொழி’ என்று எந்த ஒரு மொழியும் கிடையாது. அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது அட்டவணையின்343 முதல் 351 ஆம் விதிகள் ஆட்சி மொழி பற்றிப் பேசுகின்றன. அரசியல் சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் அமுலுக்கு வந்தது. அதன்படி இந்திதான் ஆட்சி மொழி என்று கூறப்பட்டாலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலமே நிர்வாக மொழியாக இருந்த நடைமுறை தொடரும் என்று உறுதியளிக்கப்பட்டது. அரசியல் சட்டப்படி நடைமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி,
குடியரசுத் தலைவர் இரண்டு ஆட்சிமொழிக்கான ஆணையங்களை நியமித்தார். இக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு பி.ஜி. கெர் தலைமையில் 21 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழு அமைந்தது. மேற்குறிப்பிட்ட ஆணையம் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1963 இல் ஆட்சி மொழிகள் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகப் பயன்படுத்துவதற்கு இந்தச் சட்டம் ஒப்புதல் வழங்கியது.
அதே காலகட்டத்தில் இந்தி பேசாத பகுதி மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் கூடுதல் இணைப்பு மொழியாக இருக்கும் என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் உறுதிமொழி அளித்தார். 1965இல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து, முதல்வர் அண்ணா, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ‘இந்தி’யை ஒரு பாடமாக கற்பிக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வைத்து, இரு மொழிக் கொள்கையை அறிவித்தார். இது, இந்திய தேசியவாதிகளுக்கு இந்திக்கு எதிராக தமிழ்நாடு விடுத்த எச்சரிக்கை.
எந்த ஒரு மொழியையும் எவரும் விரும்பி கற்பது என்பது அவரவர் உரிமை. ஆனால், ஒரு தேசிய இனத்தின் அடையாளமாக அவர்களுக்கு தொடர்பில்லாத ஒரு மொழியைத் திணிக்க முயல்வதை சுயமரியாதையுள்ள எந்த தேசிய இனமும் ஏற்காது. இப்போது, பா.ஜ.க. ஆட்சி தேன் கூட்டைக் கலைக்கத் தொடங்கியுள்ளது.
“சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தக் கதை”யைத் தொடங்குகிறது. நாம் சொல்ல விரும்புவது எல்லாம் இதைத்தான்.
நன்றாக திணியுங்கள்! இந்தத் திணிப்புகள் தீவிரமாகும்போது தான், இந்தியாவிலிருந்து தமிழர்கள் தங்களைத் துண்டித்துக் கொள்ளும் போராட்டமும் தீவிரமாகும். அப்படி ஒரு வாய்ப்பை விரைவுபடுத்த, ‘இந்துத்துவா’ சக்திகளே முடிவு செய்துவிட்டால், நமக்கு வேறு வழிதான் என்ன?
“தமிழ்நாடு தமிழருக்கே” என்ற போர்ச் சங்கை கையில் எடுக்க வேண்டியதுதான்!
பெரியார் முழக்கம் 10072014 இதழ்