ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை
ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு ஆட்சி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. “ஜாதி மறுப்புத் திருமணங்கள் தேசத்தின் நலனைக் காப்பதாகும். காரணம், ஜாதி மறுப்புத் திருமணங்களே. ஜாதி அமைப்பை அழிக்கக் கூடியவை” என்று கூறிய உச்சநீதிமன்றம், உ.பி. மாநில ஆட்சிக்கு நிரந்தரமான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் வெவ்வேறு ஜாதி மதங்களுக்குள் திருமணம் செய்து கொள்வார்களேயானால், அவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தருவதும், அச்சுறுத்தலிலிருந்து தடுப்பதும் ஆட்சியாளர்கள், காவல்துறையின் கடமை என்று உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தது.
லதாசிங் என்ற பெண், உ.பி. அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு இணையர், மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். கடந்த ஏப்.17 ஆம் தேதி, ‘ஆரிய சமாஜ் மண்டலில்’ இந்த காதலர்கள் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு தங்களது மகளை கடத்திச் சென்று விட்டதாக பெண்ணின் பெற்றோர் கணவர் மீது புகார் தந்தவுடன், இணையர் உச்சநீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜே.எ°.சேகர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு, அடுத்த 3 மாத காலத்துக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று உ.பி. அரசுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, ஏதேனும் ஆபத்து வருமானால், இணையர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 29062014 இதழ்