ஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம்

1921 ஆம் ஆண்டில் இந்தியா முழுதும் சமஸ்கிருதம் பேசியோர் 356. அதில் 315 பேர் தமிழ்நாட்டில் மட்டும் இருந்தார்கள். தமிழ்நாடு பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையாக இருந்தது என்பதற்கு இது உதாரணம். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமஸ்கிருதம்  பேசத்  தெரிந்தவர் ஒருவர்கூட இல்லை. இது பெரியார் இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள், மத்திய பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மாநிலங்களிலும் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சமஸ்கிருதம் பேசுவோர் ஒருவர்கூட இல்லை.

1981இல் 6106 நபர்களாக இருந்தவர்கள், 1991இல் 49,376 நபர்களாக அதிகரித்து, 2001இல் 14,135 நபர்களாகக் குறைந்தனர். இதிலிருந்தே பதிவுகள் உண்மையானவை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

“இது கணக்கெடுப்பில் நிகழ்ந்த கோளாறுகள் அல்ல. அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, அவ்வப் போது தங்கள் ‘மொழி அடையாளத்தை’ மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையே காட்டுகிறது, என்கிறார் இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்புத் துறைப் பேராசிரியர் கணேஷ் தேவி. சமஸ்கிருதம் இப்போது எவருக்கும் தாய்மொழியாக பயன்பாட்டில் இல்லை என்றாலும், அரசியல் சட்ட உரிமையையும் அந்த மொழியின் சமூக மேலாதிக்கம் கருதியும் அதை தாய்மொழியாகப் பதிவு செய்கிறார்கள்” என்கிறார், செம்மொழி மய்யத்தைச் சார்ந்த ஆய்வாளர் பி. மல்லிக்கார்ஜூன்.

“சமஸ்கிருத கிராமம் என்று அழைக்கப்படும் கருநாடகத்திலுள்ள மத்தூரிலேயே அந்த மொழி தெரிந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளனர். பயன்பாடு இல்லாமலேயே சமஸ்கிருதம் தனது செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறது. நாட்டில் எங்கோ ஒரு மூலையில் சமஸ்கிருதம் பேசப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்., ஆனால் அது எங்குமே பேச்சு வழக்கில் இல்லை. அது ஒரு கருத்து என்ற அளவிலேயே நம்மிடம் இருக்கிறது” என்கிறார் இந்திய மொழியியல் கணக்கெடுப்புத் துறை பேராசிரியர் கணேஷ் தேவி.

ஆகஸ்டு 10, 2014 ‘இந்து’ நாளேடு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 14082014 இதழ்

You may also like...

Leave a Reply