வினாக்கள்… விடைகள்…!

ஜெயலலிதா பிரதமரானால், திருப்பதி ஏழுமலையானுக்கு 2000 பேர் முடிகாணிக்கை செலுத்துவது என்று, வேலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மாநகர மாணவரணி முடிவு செய் துள்ளது.     – செய்தி

அதுவும் சரிதான்! ஏழுமலையானுக்கு லஞ்சம் கொடுத்தால்தானே ஊழலற்ற ஆட்சி அமைக்க முடியும்?

லக்னோவில் மோடிக்கு சிலை எழுப்பி, நாள்தோறும் ஆராதனை நடக்கிறது. – ‘தினமலர்’ செய்தி

அப்படியே அந்த சிலையை அயோத்திக்குக் கொண்டு போய், அங்கே கோயில் கட்டிடலாமே! ‘ராமனுக்கு’. எல்லாம் தேர்தல் முடிஞ்சு பாத்துக்கலாம்!

தேர்தலுக்கு பா.ஜ.க. ஊடக விளம்பரங்களுக்கு ரூ.400 கோடி செலவிடுகிறது, பிரபல விளம்பர நிறுவனங்கள் கவர்ச்சியான விளம் பரங்களை வடிவமைக்க உள்ளன.  – ‘தினமலர்’ செய்தி

அதில் ஸ்ரீராமபிரான், சீதை, அனுமார், சுப்ரமணியசாமி எல்லாம் வருவார்களா?

ஏழுமலையானுக்கு பக்தர்கள் ‘பட்டு வஸ்திர’ காணிக்கையை இடைத்தரகர் மூலம் வழங்க வேண்டாம். தரமில்லாத பட்டாக இருக்கிறது. இனி பக்தர்கள் பகவானுக்கு நேரடியாகவே வழங்க லாம்.            – தேவஸ்தானம் அறிவிப்பு

அதேபோல் மூலஸ்தானத்திலும் இடைத்தரகர்களை ஒழித்து, பக்தர்களுக்கு பகவானிட மிருந்து நேரடியான – தரமான ‘தரிசனம்’ கிடைக்க ஏற்பாடு செஞ்சிடுங்க!

திருப்பதி கோயிலுக்கு விதிக்கப்பட்ட ‘சேவை’ வரியை நீதிமன்றம் ரத்து செய்தது.    – செய்தி

அதாவது, எந்த ‘சேவை’யும் செய்யாத கடவுளுக்கு சேவை வரி விதிப்பது நியாயம் தானா என்று நீதிமன்றம் கேட்கிறது! சபாஷ்! சரியான தீர்ப்பு!

நாடாளுமன்றத்தில் மிளகுப் பொடி தூவிய ஆந்திர காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் மீது உரிமைக் குழு விசாரணை நடத்தும்.       – செய்தி

கவனம்; உரிமைக் குழுவுல ஆந்திர மிளகாய்ப் பொடியை தூவிடப் போறாரு!

நாடாளுமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கட்சித் தலைவர்கள் நேர்முகம் தொடங்கியது.      – செய்தி

‘நானடிச்சா தூங்க மாட்ட; வீடு போய் சேர மாட்ட’ என்ற பாடலை கருத்தில் கொண்டு கவனமாக ‘பலசாலி’களை தேர்வு செஞ்சு, ஜனநாயகத்தைக் காப்பாத்துங்க.

பெண்களுக்கு முன்னுரிமை அளித்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும்.  – ராகுல் பேச்சு

வந்துட்டாரய்யா…. ‘எல்.கே.ஜி.’ வாத்தியாரு!

அரிசிக்கு சேவை வரி விதித்த ப.சிதம்பரத்துக்கு கண்டனம். – செய்தி

இப்படி கண்டிச்சா, சிதம்பரம் கண்டிக்கிறவங்களுக்கு ‘தண்டவரி’ விதிச்சுடுவாரு! ஜாக்கிரதை!

பெரியார் முழக்கம் 20022014 இதழ்

You may also like...