ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின் துரோகம்
தமிழக முதல்வர் 7 பேரை விடுதலை செய்தவுடன் துள்ளி குதிக்கும் காங்கிரசார், ராஜிவ் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் தானா? ராஜீவ் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதோடு தவறு செய்தவர்களை காப்hபற்ற முயன்றார்கள். இதோ, ஆதாரங்களுடன்….
- ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர் தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியைகவிழ்த்த காங்கிரஸ், தனது ஆதரவோடு சந்திர சேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கியிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற உச்சநீதி மன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணை யத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ் காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா என்பது குறித்து ஆராய்வதே இந்த ஆணையத்தின் பணி என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதை அப்போது காங்கிரஸ் எதிர்த்தது. ராஜீவ் கொலையின் சதித் திட்டங்கள் பற்றியும், விசாரணை வரம்பு விரிவாக்கப்பட வேண்டும் என்று அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த பி.வி. நரசிம்மராவ், பிரதமர் சந்திரசேகருக்கு கடிதம் எழுதினார். ஆனால், ஜெ.எஸ். வர்மா பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளை மட்டுமே தம்மால் விசாரிக்க முடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார். அதன் காரணமாகவே ஜெ.எஸ். வர்மா விசாரணை வரம்பிலிருந்து ஒதுக்கப்பட்ட அயல்நாட்டு சதி தொடர்புகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜி. ஜெயின் தலைமையில் மற்றொரு விசாரணை ஆணையம் 1991 ஆக. 23 இல் அமைக்கப்பட்டது.
- சந்திரசேகர் ஆட்சியின்போதும் அடுத்த சில மாதங்களில் அமைந்த நரசிம்மராவ் தலைமை யிலான காங்கிரஸ் ஆட்சியின்போதும் நீதிபதி வர்மா ஆணையம் செயல்படுவதற்கான நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. அலுவலக செயலாளரோ, பணியாளர்களோ நியமிக்கப்படவில்லை. மனம் குமுறிய ஜெ.எஸ். வர்மா, வெளிப்படையாகவே, “இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சி, எந்த அளவுக்கு உள்ளது என்பதையே இது காட்டு கிறது. இது இந்தியாவின் கவுரவம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. உலக மக்கள் இதை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்” (2.5.1991 ‘இந்து’ நாளேடு) என்று கூறினார். ஒரு வழியாக நீதிபதி சர்மா, 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். 5 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் தான் நரசிம்மராவ் ஆட்சி, அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்தது. உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான் சர்மா அறிக்கையின் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்தார். ஆனால், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களே, இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்ததால், பிரதமர் நரசிம்மராவ், அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உரு வானது. அதன் பிறகும், இரண்டு ஆண்டுகாலம் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. பிறகு எதிர்கட்சிகள் வற்புறுத்தலைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று அறிக்கையை பரிசீலித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டது.
- வர்மாவின் அறிக்கை மத்திய மாநில ஆட்சிகளின் காவல்துறை, உளவுத் துறையைக் கடுமையாகக் குறை கூறியது. ராஜீவ் கொலை நடந்தபோது மத்தியில் நடந்த சந்திரசேகர் ஆட்சியும், தமிழ் நாட்டில் நடந்த ஆளுநர் ஆட்சியும் காங்கிரசின் ‘பினாமி’ ஆட்சிகள் தான் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். ராஜீவுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழக காவல்துறை, தமிழக அரசு, இந்திய உளவுத் துறை மற்றும் ராஜீவ் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்த காங்கிரசார் தங்கள் கடமை யிலிருந்து நழுவி விட்டனர் என்று குற்றம்சாட்டி யது வர்மா அறிக்கை, இவர்கள் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் ராஜீவ் கொலையைத் தடுத்திருக்க முடியும் என்று கூறியது.
ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்கும், தமிழ்நாடு காங்கிரசுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்ததால், மரகதம் சந்திரசேகர், தமிழக காங்கிரசார் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, தானே ஏற்பாடு செய்தார் என்றும், உரிய பாது காப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி யும், தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஒதுங்கி நின்றார் என்றும் ஆணையம் குற்றம் சாட்டியது. வர்மா விசாரணை ஆணையத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எவ்வித ஒத்துழைப்பையும் தரவில்லை என்று கூறிய அந்த பரிந்துரை, “ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டம் நடந்த இடத்தில் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் செயல்பாடுகள் எந்தவிதமான ஒழுக்கமும் இல்லாமல் பொது இடத்துக்குரிய பொறுப் பின்றி இருந்தது” என்று கடுமையாக காங்கிரசாரை இடித்துரைத்தது.
- வர்மா அறிக்கை பற்றி பரிசீலிக்க அமைக்கப் பட்ட அமைச்சர்கள் குழு, கடமை தவறிய சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. கடமை தவறிய நான்கு மூத்த அதிகாரிகளிடம் அமைச்சரவைக் குழு நேரில் விசாரணை நடத்தி விளக்கம் கேட் டது. உளவுத் துறை தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறை செயலாளர் ஜி.எஸ். மணிசர்மா, பாதுகாப்புச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய், அமைச்சரவை செயலாளர் வினோத் பாண்டே ஆகியோர் தான், விசாரணை நடத்தப்பட்ட அதிகாரிகள். ஆனால், இவை எல்லாமே கண் துடைப்பு நாடகம் தான். வர்மா, பரிந்துரையை சமர்ப்பித்தபோது, இந்த அதிகாரிகள் பதவியில் இருந்தார்கள். ஆனால், அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகே, விசாரணை நடத்தி விளக்கம் கேட்கப்பட்டது. பணி ஓய்வு பெற்ற பிறகு, நடவடிக்கை எடுக்க இயலாது என்பதைத் தெரிந்தே, காங்கிரஸ் ஆட்சியினர், இப்படி ஒரு விசாரணை நாடகத்தை நடத்தினர். உடனடியாக, அந்த நான்கு அதிகாரிகளும், தங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதை எதிர்த்து, மத்திய நிர்வாக மன்றத்திடம் முறையீடு செய்தனர். ஓய்வு பெற்ற பிறகு, இவர்களிடம் விளக்கம் கேட்பது, முறையற்றது என்று நிர்வாக மன்றம் தீர்ப்பளித்து விட்டது. ராஜீவ் கொலையில் கடமையை செய்யாமல் தவறிழைத்த அதிகாரிகளை காங்கிரஸ் ஆட்சியே இப்படி திட்டமிட்டு காப்பாற்றியது. வர்மா ஆணையத்தின் பரிந் துரையின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையையும் காங்கிரசாரோ, காங்கிரஸ் ஆட்சியோ இதுவரை எடுக்கவில்லை என்பதோடு குற்றம்சாட்டப்பட்டவர்களையும் காப்பாற்றி விட்டார்கள்.
- ராஜீவ் கொலை நடந்தபோது, இந்தியாவின் உளவுத் துறை இயக்குனராக இருந்தவர் எம்.கே. நாராயணன். ஜெ.எஸ். வர்மா ஆணையம், தனது அறிக்கையில் எம்.கே. நாராயணன் ‘நம்பகத் தன்மை’ குறித்து கேள்விகளை எழுப்பியது.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் மீது குண்டு வெடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ படத்தின் மூலப் பதிவு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் இருந்தது போலவே, உளவுத் துறை இயக்குனர் எம்கே. நாராயணனிடமும் இருந்தது. ஆனால், இந்த வீடியோ மூலப் பதிவை சிறப்புப் புலனாய்வுக் குழுவும் எம்.கே. நாராயணனும், வர்மா ஆணையத்திடம் தரவில்லை. தங்களிடம் அப்படி எந்த ஒரு ‘வீடியோ கேசட்டும்’ இல்லை என்றே சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் கார்த் திகேயன், ஆணையத்திடம் கூறி விட்டார் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதன் பிறகு, இந்த வீடியோ காட்சிகளில் ஏதேனும் அழிக்கப்பட்டுள்ளதா என்று வெளிநாட்டு நிபுணர்கள் ஆய்வு செய்து கொண்டிருப்பதாக கார்த்திகேயன் வர்மா ஆணையத்தில் தெரிவித்து விட்டார். கடைசி வரை அந்த படப்பதிவு ஆணை யத்திடம் தரப்படவில்லை. விசாரணையின் கடைசி அமர்வில்கூட இது பற்றி நீதிபதி வர்மா கேட்டார். அப்போதும்கூட ஆய்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவே, ஆணையத் திடம் கார்த்திகேயன் சார்பில் கூறப்பட்டது.
வர்மா ஆணையத்திடம் வழங்கப்பட்ட பிரதி எடுக்கப்பட்ட அந்த வீடியோ பதிவுகளில் வெடி குண்டுப் பெண் ராஜீவுக்கு மாலையிட முயன்று வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் காட்சிகள் தெளிவின்றி திட்டமிட்டே மங்கலாக்கப்பட் டிருந்தன என்று வர்மா, தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமான இந்தக் காட்சிகள் மட்டும் ஏன் மங்கலாக்கப்பட்டன என்ற கேள்வியை நீதிபதி வர்மா எழுப்புகிறார். பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி விசாரணை நடத்திய வர்மா, ஆணையத்திடம் வீடியோ கேசட் மூலப்பதிவை தர மறுத்த அதே சிறப்புப் புலனாய்வுக் குழு, அன்னிய சதி பற்றி விசாரணை நடத்திய ஜெயின் ஆணையத்திடம் நான்கு வீடியோ கேசட்டுகளை வழங்கியது. காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள் நோக்கம் தான். இது தவிர, ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து இறங்கி, ஸ்ரீபெரும்புதூர் சென்றது வரை எடுக்கப்பட்ட வீடியோ கேசட், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப் பாளர்கள், அந்த வீடியோ பதிவு தங்களிடம் இல்லை என்றும், அதை காவல்துறை கைப்பற்றி யிருக்கலாம் என்றும், வர்மா ஆணையத்திடம் கூறிவிட்டனர். ராஜீவுடன் வந்த காங்கிரஸ் காரர்கள் ஏன் ஸ்ரீபெரும்புதூர் போகவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என்ற அச்சம்தான் இதற்குக் காரணம். இது குறித்து வர்மா தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ நூலில் அதன் ஆசிரியர் ராஜீவ் சர்மாவும் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார்.
ராஜீவ் படுகொலையில் இறுதி வினாடி வரை, அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப் பட்டதா? கொலை சதிக்கு திட்டமிட்டவர்கள் மீது கேமிரா பார்வை விழுந்ததா? தாணு மற்றும் சிவராசன் அருகில் யார் யார் நின்றார்கள்? அல்லது அமர்ந்தார்கள்? கேமிராவில் உள்ள சில பதிவுகளை திட்டமிட்டு மங்கலாக்கியது யார்? இதற்கு ஆணையிட்டது யார்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.
- எம்.கே. நாராயணன் பற்றி வர்மா ஆணையம் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் குறிப்பிடப் பட வேண்டியதாகும். “ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எம்.கே. நாராயண னுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை இந்த ஆணையம் உணருகிறது. ஆனால் வெளியே சொல்ல முடியாத காரணங்களால், அவரால் இதற்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றி, இன்றைய நாள்வரை எம்.கே. நாராயணன் வாயை மூடி மவுனம் சாதிக்கிறார். உயர்மட்டத்தில் நடக்கும் இந்தக் குறைபாடுகளுக்கான காரணங்களை கண்டறிந்து, உடனே களைய வேண்டும்” என்று வர்மா ஆணையம் குறிப்பிடுகிறது. இது குறித்து ராஜிவ் சர்மா, தனது நூலில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“ராஜீவ் உயிருக்கு திட்டவட்டமான அச்சுறுத்தல் உள்ளது என்பதை எம்.கே. நாராயணன் முன்கூட்டியே தெரிந்திருந்தாரா? அல்லது ராஜீவ் பாதுகாப்புக் குறைபாடுகளை சரி செய்ய விரும்பினாலும், ‘அதிகார பலம் கொண்ட மேலிட உத்தரவினால்’ அவரால் செயல்பட முடியாமல் போனதா? ராஜீவ் மரணத்தால், அரசியல் ரீதியாக பயனடைந்தவர்கள் யார்? ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் மே 20 அன்று அப்போதைய உளவுத் துறையின் இணை இயக்குனர் எஸ்.கே. தாக்கூர் அனைத்து மாநில காவல்துறை தலைமை அதிகாரிகளுக்கும், ராஜீவ் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி, ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்படியானால், அடுத்த நாள் ராஜீவ் கொலை நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரியுமா? ஏன் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற கேள்விகளை அவர் முன் வைக்கிறார்.
- 1991 இல் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் உள்துறை செய லாளர் பார்கவா தலைமையில், உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் உளவுத் துறைத் தலைவர் எம்.கே. நாராயணனும் கலந்து கொண்டார். அப்போது ராஜீவுக்கு தரப்படும் பாதுகாப்புகள் பற்றி விவாதிக்கப் பட்டது. எனவே எம்.கே. நாராயண னுக்கு, ராஜீவுக்கு தரப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த எல்லா விவரங்களும் தெரியும் என்று கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த உள்துறை அமைச்ச கத்தின் இணைச் செயலாளர் என்.கே. சிங், என்பவர் வர்மா ஆணையத்தின் முன் தெரிவித்தார். ஆனால், அதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது, அப்படி ஒரு கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளவே இல்லை என்று எம்.கே. நாராயணன் மறுத்தார். நீதிபதி வர்மா விடவில்லை. இருவரையும் எழுத்துப் பூர்வமாக தங்கள் கருத்துகளைக் கூற முடியுமா என்று கேட்டபோது, என்.கே. சிங், எழுத்துபூர்வமாக அக்கூட்டத்தில் பங்கேற்றது உண்மையே என்று எழுதிக் கொடுத்தார். எம்.கே. நாராயணன் எழுத்துப் பூர்வமாக தர முன்வரவில்லை. எம்.கே. நாராயணன், ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு தனக்குக் கிடைத்த உயர்மட்ட கூட்டத்தின் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வில்லை என்ற முடிவுக்கு தாம் வந்ததாக வர்மா, தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எம்.கே. நாராயணன், பொய் கூறுவதற்கும் தயங்காத ஒரு மனிதர் என்பதையே இது காட்டுகிறது.
இந்திய உளவுத் துறையை கடுமையாக விமர்ச்சிக்கிறது வர்மா அறிக்கை. “உளவுத் துறையில் அரசியல் தலையீடுகள் மிக சாதுர்யமாக நடக் கின்றன. அதன் செயல்பாடுகள் புரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு கறை படிந்து கிடக்கின்றன. அதன் நம்பகத் தன்மை நடைமுறையானாலும், கற்பனையானாலும் மோசமான பாதிப்புக்குள்ளாகி விட்டது. அரசியல் சார்பு, அடியாட்கள் அச்சுறுத்தல் இல்லாமல், சுதந்திரமான, நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட புதிய அமைப்பாக உளவு அமைப்புகள் உருவெடுக்க வேண்டும்” – என்று வர்மா நெத்தியடியாகக் கூறுகிறார்.
(விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு’ நூலிலிருந்து)