உயிர் தோன்றியது கடவுள் சக்தியால் அல்ல!
உலகப் புகழ் பெற்ற தனது மூலதனம் நூலை “உங்களுடைய தீவிர அபிமானி” என்று கையெழுத் திட்டு கார்ல் மார்க்ஸ் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். அந்த நபர் “பரிணாமவியலின் தந்தை” சார்லஸ் டார்வின். டார்வின் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” என்ற நூலைப் படித்துவிட்டு, வரலாற்றுப் பொருள் முதல் வாதத்துக்கு அந்த நூல் அடிப்படையாக இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வின் கண்டறிதல் அந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தியிருந்தது.
கடவுளே மனித இனத்தைத் தோற்றுவித்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில், “இல்லை, அனைத்து உயிரினங்களும் இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப் பரிணாம வளர்ச்சியில் உருவானவை” என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் டார்வின் நிறுவினார். அதற்காக இன்றுவரை தூற்றப்பட்டு வருகிறார். அறிவியல் உலகின் இரண்டாவது புரட்சி என்று டார்வின் பரிணாம வியல் தத்துவத்தைக் கூறலாம்.
பூவுலகில் உயிரும் மனித இனமும் எங்கிருந்து வந்தன என்ற அடிப் படைக் கேள்விக்கான விடையை, பரிணாம வளர்ச்சிக் கொள்கை சொல்கிறது. சரி, பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன?
பரிணாம வளர்ச்சிக் கொள்கை மிகவும் எளிமையானது. அது வலியுறுத்தும் 3 முக்கிய அம்சங்கள்:
ஓர் உயிரினத்தின் மரபணு, திடீர் மாற்றம் அடைவதற்கு வாய்ப்பு உண்டு. ஓர் உயிரினத்தின் மரபணுவில் ஏற்படும் இந்த திடீர் மாற்றம், அதனுடைய வாரிசின் மீது தாக்கம் செலுத்துகிறது. உடனடியாகவோ அல்லது பல தலைமுறைகளுக்குப் பிறகோ இந்த தாக்கங்கள் நிகழலாம்.
ஒரு திடீர் மாற்றம் நல்ல விளைவையும் ஏற்படுத்தலாம், தீமையான விளைவையும் ஏற்படுத்தலாம். எந்தத் தாக்கமும் இல்லாமலும் போகலாம். அந்த மாற்றம் தீமையானதாக இருக்கும் பட்சத்தில், ஓர் உயிரினத்தின் வாரிசு தொடர்ந்து வாழ்வதோ, இனப் பெருக்கம் செய்வதோ சாத்திய மில்லை. அதே நேரம், திடீர் மாற்றம் நல்ல விளைவைத் தரும் பட்சத்தில், மாற்றம் அடைந்த வாரிசு, மற்ற வாரிசுகளைவிடச் சிறந்த ஒன்றாக இருக்கும். அதனால், அதிக இனப் பெருக்கம் செய்யும். இதன் மூலம், அந்த சாதகமான திடீர் மாற்றம் பரவலாகும். தீமை பயக்கும் திடீர் மாற்றங்கள் நீக்கப்பட்டு, நல்ல மாற்றங்கள் பரவலாவதற்குக் காரணம் இயற்கைத் தேர்வு.
சாதாரணமாக ஆயிரக்கணக்கான தலைமுறைகளுக்கு ஒரு முறைதான் திடீர் மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இனப் பெருக்கத்தின்போது பெற்றோர் இருவரிடமும் விந்தும் சினை முட்டையும் உருவாகும்போது, அவர்களது மரபணுக்களில் உள்ள குரோமோசோம்கள் (அதில்தான் டி.என்.ஏ. இருக்கிறது) பிரிக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் அவற்றில் சேர்க்கப்படுகின்றன. பிறகு அந்த விந்தும், சினைமுட்டையும் கூடும்போது சில மரபணுக்கள் அப்பாவிடம் இருந்தும், சில மரபணுக்கள் அம்மாவிடம் இருந்தும் தான்தோன்றித்தனமாகச் சேர்கின்றன. இதன் காரணமாக வாரிசுக்கு வித்தியாசமான இணை மரபணுக்கள் தோன்றியிருக்கும்.
இப்படி இணை மரபணுக்கள் உருவாகும்போது திடீர் மாற்றங்கள் நீண்ட காலத்துக்கு நிகழ்ந்து, அது தொடர்ந்து கொண்டே இருந்தால், அதன் மூலம் புதிய உயிரினவகை தோன்றும். கோடிக்கணக்கான ஆண்டுகளில் நிகழ்ந்த திடீர் மாற்றங்கள், இயற்கைத் தேர்வு ஆகிய இரண்டு நடைமுறைகளும், பூமியில் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உயிரினங்கள் அனைத்தையும் உருவாக்கியுள்ளன. மிகவும் சிறிய நுண்ணுயிரியான பாக்டீரியா முதல் மனிதர்கள் வரை, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இதில் அடக்கம்.
மரபணுக்களில் திடீர் நிகழ்வதற்கான காரணம் என்ன? ஓர் உயிரினம் வாழும் சுற்றுச் சூழலில் உணவு, வாழிடம், இயற்கை நிகழ்வுகள் போன்ற பல்வேறு நெருக்கடிகள் இதில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த புற நெருக்கடிகளால்தான் திடீர் மாற்றம் தூண்டிவிடப்படுகிறது. அதுவே மரபணு மாற்றத்துக்கு வித்திட்டு, பிறகு இயற்கைத் தேர்வுக்கு இட்டுச் சென்று தனி உயிரின வகைகளையும் துணை உயிரின வகைகளையும் உருவாக்குகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, காக்கை குடும்பத்தைச் சேர்ந்த காட்டில் வாழும் அண்டங்காக்கையையும், நகரத்தில் நாம் பார்க்கும் சாதாரண காக்கையையும் குறிப்பிடலாம்.
எல்லாம் சரி, உலகில் முதல் உயிர் தோன்றியது எப்படி?
பரிணாமவியல் கொள்கையின்படி, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதிப் பொருட்கள் தான்தோன்றித்தனமாகச் சேர்ந்ததால், தன்னையே பிரதி செய்துகொள்ளும் மூலக் கூறுகள் முதலில் உருவாகின. அவையே பின்னர் நுண்ணுயிரிகளாக உருமாறின. உயிரின் இந்தச் சிறு பொறிதான், இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து உயிரினங்களுக்குமான கவிதை.
‘தி இந்து’
பெரியார் முழக்கம் 13022014 இதழ்