தோழர்கள் முயற்சி வெற்றி: சென்னையில் சட்ட விரோதக் கோயில் இடிப்பு
இந்தியா முழுதும் நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று குஜராத் மாநிலத்திலிருந்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டவிரோதமாக போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கோயில்கள் பற்றிய விவரங்களையும் உச்சநீதி மன்றம் கேட்டது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டில் 70,000 கோயில்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்தக் கோயில்களை அகற்ற உச்சநீதிமன்றம் விதித்த ‘கெடு’ முடிந்த நிலையிலும் கோயில்கள் அகற்றப்பட வில்லை. இந்த நிலையில் மேலும் புதிய சட்ட விரோதமான கோயில்களைக் கட்டுவது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும். அதையும் மீறி ஆங்காங்கே பொது இடங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத் தோடு கோயில்கள் எழுப்பப்பட்டு வரு கின்றன. இந்த முயற்சிகளை வாய்ப் புள்ள இடங்களில் எல்லாம் கழகத் தோழர்கள் தலையிட்டு தடுத்து வருகிறார்கள்.
சென்னை மந்தைவெளி பகுதியில், மந்தைவெளி தொடர்வண்டி நிலையம் பின்புறத்தில் விநாயகர் கோயில் ஒன்று கட்டப்பட்டது. அதேபோல் மந்தைவெளி பேருந்து நிலையம் அருகிலுள்ள தேவநாதன் சாலையில் மற்றொரு விநாயகன் கோயில் திடீரென கட்டப்பட்டது. செய்தியறிந்த கழகத் தோழர்கள் களமிறங்கினர். சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில்களை அகற்ற வேண்டும் என்று மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் மாரிமுத்து, இராவணன், 22.8.2014 அன்று பகுதிப் பொறுப்பாளரான வள்ளுவர்கோட்டம் மண்டல மாநகராட்சி பொறியாளரிடம் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இது குறித்து மயிலாப்பூர் பகுதித் தோழர்கள் சார்பாக காவல்துறை, மாநகராட்சி அலுவலகங்களுக்கு புகார் மனு 22.8.2014 அன்று அளிக்கப்பட்டது. 123 ஆவது வட்டம் உதவி பொறியாளர் சுந்தர்ராஜ் நடவடிக்கை எடுத்ததன் பேரில் ஆக்கிரமிப்புக் கோயில் இடித்து அகற்றப்பட்டது. மந்தைவெளி தேவநாதன் வீதியில் மட்டும் கோயில் கட்டும் பணிகள் தொடர்ந்தன. பொறியாளர் வித்யா நடவடிக்கை எடுக்க மறுத்ததோடல்லாமல், மேல் நடவடிக்கை தொடர்பாக உயர் அதிகாரியை தொடர்பு கொண்டது தவறு என்று கூறி, தோழர்களை தரக்குறைவாகப் பேசினார். இது தொடர்பாக பொறியாளர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் ஜான் மண்டேலா, மாவட்ட அமைப்பாளர் சுகுமார், தோழர்கள் இராவணன், மாரிமுத்து, மனோகர், சிவா, மருதமூர்த்தி ஆகியோர் முறையிட்டனர். தோழர்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதாக காவல்துறை யினரையும், கவுன்சிலர் விஜயலட்சுமியையும் அழைத்து அதிகாரி தகராறில் ஈடுபட்டார். தோழர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்ததோடு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததன் பேரில் கோயில் கட்டும் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெரியார் முழக்கம் 04092014 இதழ்