‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு மறுப்பு (5) இந்தி எதிர்ப்பு ஒரே நாளில் முடிவெடுத்தது அல்ல!
இந்தி எதிர்ப்பைத் தொடங்கியது தமிழ் அறிஞர்கள். பெரியார் பிறகு வந்து இணைந்து கொண்டார் என்று பெ.மணியரசன் எழுதியது சரியா?
1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் என்பதை ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்தியது. அது 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடை முறைக்கு வந்தது. அச்சட்டத்தின் அடிப்படையில் நடந்த தேர்தலில் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு பெரும்பான்மைப் பெற்றது. 1935 ஆம் ஆண்டு சட்டத்தில் ஆளுநர்களுக்கு சட்டமன்ற தீர்மானங்களை நீக்கறவு (இரத்து) செய்தல், நெருக்கடி காலச் சட்டங்களைப் பயன்படுத்துதல் முதலிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. (இவ்வதிகாரங்கள் இப்போது குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளன) ‘மேற்கண்ட அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டேன்’ என்று ஆளுநர் உறுதிமொழி வழங்கினால் மட்டுமே பதவி ஏற்பேன் என்று இராஜ கோபாலாச்சாரி (இராஜாஜி)யும், அவரது அமைச்சர் களும் வீராப்பு பேசி வந்தார்கள். அத்தகைய உறுதி மொழி வழங்க ஆளுநர் உடன்பட வில்லை. ஓரிரு மாதங்கள் மட்டும் காங்கிரசு பொறுத்துப் பார்த்தது. பின்னர் தாங்களாகவே ஜூலை மாதம் பதவி ஏற்றுக் கொண்டனர். அவ்வமைச்சரவையைப் பெரியார் “சரணாகதி மந்திரிசபை” என்றழைத்து வந்தார்.
அமைச்சர்கள், சட்டப் பேரவைத் தலைவர், மேலவைத் தலைவர் ஆகிய பத்துப் பதவிகளில் ஆறு பார்ப்பனர்கள். (சட்டமன்றத் துணைத் தலைவரும் ருக்குமணி இலட்சுமிபதி என்கிற பார்ப்பனப் பெண்மணியே).
அமைச்சரவை அமைக்கப்பட்ட முறையே பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாக அமைந்தது. இதை சுயமரியாதை இயக்கத்துக்கு முன்னதாகவே சுட்டிக்காட்டியவர், தமிழ்நாடு காங்கிர° கமிட்டிப் பொதுச் செயலாளர் சேலம் பாரி°டர் எ°.வி.இராமசாமியே ஆவார். (இவரது துணைவியார்தான் சேலம் சாரதா கல்வி நிறுவனங் களின் நிறுவனர் ஆவார்) இவர் பின்னாளில் 1960களில் இரயில்வேத் துறை இணை அமைச்சராக இருந்த போது, திருச்செந்தூர் கோவிலில் கும்பிட்டுவிட்டு திருநீறு கேட்டபோது, சூத்திரனுக்கு கையில் கொடுக்க முடியாது என்று பார்ப்பன அர்ச்சகர் கல்தூண் மீது போட்டார். கேள்விப்பட்ட பெரியாரும், அவரியக்கமும்தான் தமிழ்நாடு முழுதும் கூட்டங்கள் நடத்தி கண்டித்தன. அதே கோவிலுக்கு முதல் தி.மு.க. அரசின் அறநிலையத் துறை அமைச் சரான நாவலர் நெடுஞ்செழியன் பார்வையிடச் சென்றபோது பார்ப்பன அர்ச்சகர் பவ்வியமாக திருநீறு கொடுக்க, அதை நாவலர் கல்தூண் மீது போட்டு வந்தார். காங்கிரசிலும் தன்மான முள்ளவர்கள் இருந்தார்கள் என்பதையும், அது ஆட்சி மாற்றம், பார்ப்பனர்களின் போக்கில் ஏற்படுத்திய மாற்றத்தையும் வெளிப்படுத்தும் சுவையான நிகழ்வாகும்.
அவ்வாறு பதவியேற்ற இராஜாஜி, ஏற்கெனவே நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் ஏற்படுத்தியிருந்த 2200 பள்ளிகளை நிதிப்பற்றாக் குறையைக் காரணமாகக் காட்டி மூடினார். ஆனால், 12 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கி (இன்றைய மதிப்பில் பல கோடி ரூபாய்) வேத பாடசாலைகள் நிறுவி, பார்ப்பன ஆசிரியர்களுக்கு கொழுத்த சம்பளம் வழங்கினார். இதே இராஜாஜி 1952 இல் அடுத்த முறை முதலமைச்சரானபோது, நிதி நெருக்கடிக் காரணம் காட்டி 6000 கிராமப்புற பள்ளிகளை மூடினார்.
இதற்கெல்லாம் உச்சமாக, இராஜாஜி பதவியேற்ற ஒரு மாதத்தில், 10.8.1937 அன்று சென்னை இராம கிருஷ்ணா மடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சென்னை மாகாணத்திலுள்ள எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும், எல்லா மாணவருக்கும் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக அமைக்கப் போவதாக அறிவித்தார். அடுத்தத் திங்கள், கிறித்துவக் கல்லூரியில் பேசுகையில் எல்லாப் பள்ளிகளிலும் – ஆனால் முதல் மூன்று பாரங்களில் மட்டும் என்றார்.
அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாக 21.4.1938 அன்று இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் ஆணையைப் பிறப்பித்தார்.
பள்ளிகள் தொடங்கியவுடன் போராட்டமும் தொடங்கியது.
ஆனால் 21.4.1938இல் இராஜாஜி பிறப்பித்த இந்திக் கட்டாய ஆணையில் தமிழகத்தில் 60, ஆந்திராவில் 54, கன்னட நாட்டில் 4, மலையாளத்தில் 7 ஆக 125 பள்ளிகளில் மட்டுமே முதல் மூன்று படிவங்களில் (6ஆம் வகுப்பு, முதல் பாரம்) இந்தியைப் புகுத்தினார்.
அடுத்த திங்கள், இந்தியில் தேறாவிட்டாலும் பரவாயில்லை – மாணவர்கள் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என்றார்.
அதற்கடுத்த திங்கள், இந்தியில் ஒரு நூறு சொற்கள் தெரிந்தால் போதும், மற்றபடி நான் முழு இந்தியைப் படிக்கச் சொல்லவில்லையே என்றார்.
மற்றும் ஒரு முறை, இன்றைக்கு இந்தி வேண்டுமா வேண்டாமா என்பதே பிரச்சினை அல்ல. ஆள்வது நானா அல்லது ஒரு ஈரோடு இராமசாமியா என்பதுதான் பிரச்சினை என்றார்.
இன்னொரு முறை, இன்றைய பிரச்சினை யெல்லாம் இந்த நாட்டுக் கல்வி முறையை உருவாக்கும் உரிமை எனக்கிருக்கிறதா அல்லது எனது நண்பர் இராமசாமி நாயக்கருக்கிருக்கிறதா? என்பதுதான் என்றார்.
இந்திக் கிளர்ச்சியின் துவக்கக் காலத்தில் இராஜாஜி, “இந்தியை யார் எதிர்க்கிறார்கள்? ஒரு இராமசாமியும் ஒரு சோம சுந்தர பாரதியும் தானே! இராமசாமியோ பார்ப்பனத் துவேஷி; பாரதியோ பண்டிதர். ஒரு பார்ப்பன துவேஷியும் ஒரு பண்டிதரும் எதிர்ப்பதற்கா நான் இந்தியை விட்டுவிடுவது” என்றார். ஆனால் அந்த ஆச்சாரியார், இந்திப் போரின் இறுதிக் கட்டத்தில், “புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதுபோல் இந்தி எதிர்ப்புப் போர் வீரர்கள் வருகிறார்களே! இந்த இந்தி சனியனுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்திருந்தால் இந்தியை வைத்திருக்கவே மாட்டேன்” என்றார்.
“திடீரென்று என் வீட்டில் திருடர்கள் புகுந்து விட்டால் வீட்டில் கையில் கிடைத்த எந்த ஆயுதத்தை யும் கொண்டு அவர்களை நான் தாக்குவேன். அதுதான் நியாயமும்கூட. அதுபோல்தான் இந்தி எதிர்ப்புப் பற்றிய என்னுடைய அடக்குமுறையும்” என்று பின்னொருமுறை கூறினார்.
தமிழ்க் கிளர்ச்சியின் வேகம் அவரை அப்படியெல் லாம் மாறி மாறிச் சொல்ல வைத்தது; அடக்கு முறையையும் வலுக்க வைத்தது. ஆனால் அவருடைய அடக்குமுறையால் கிளர்ச்சியின் வேகம் சிறிதும் தணியவில்லை. அடக்க அடக்க மேலும் மேலும் வீறு பட்டு எழுந்தது கிளர்ச்சி; வீறுபெற்று எழுந்தனர் தமிழர்.
3.6.1938 அன்று இந்தி எதிர்ப்புப் போரின் முதல் சர்வாதிகாரி செ.தெ.நாயகம், சண்முகானந்த அடிகள், பட்டினிப் போராட்டம் நடத்தி வந்த பல்லடம் பொன்னுச்சாமி ஆகிய மூவரின் கைதில் தொடங்கியது. ஆண், பெண், குழந்தைகள் என 1271 பேர் கைதாகினர். தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்தது இந்தி எதிர்ப்புத் தொடர் போர். 21.2.1940இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கட்டாய இந்திப் பாடத் திட்டம் திரும்பப் பெற்றதும் முடிவுக்கு வந்தது.
இந்தி வந்ததும், எதிர்த்ததும் ஒரே நாளில் முடிவெடுத்து நடந்ததல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.
1906 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவின் பொது மொழியாக இந்தி அல்லது இந்து°தானி இருக்க வேண்டும் என்று பேசப்பட்டு வந்தாலும், காந்தியின் தலைமை வந்த பின்னரே அது தீவிரமாயிற்று.
1917 ஆம் ஆண்டு இன்றைய குஜராத் மாநிலம், பரோச் என்ற இடத்தில் நடந்த கல்வி மாநாட்டில் காந்தி இந்தியாவில் பொது மொழி குறித்து அழுத்தமாக பதிவு செய்ததும், தென்னாட்டில் எதிர்க்குரலும் உடனே வெளிப்பட்டது. நீதிக் கட்சியின் நாளேடான ‘திராவிடன்’ இதழில் 1.8.1917 அன்று ‘மி°டர் காந்தியும், இந்தியும்’ என்ற இந்தி எதிர்ப்புக் கட்டுரை வெளி வந்தது.
அனைத்திந்திய காங்கிரசு மாநாடுகளில் விவாதங்கள் இந்தி/இந்து°தானியில் காந்தியாரின் விருப்பப்படி நடக்கத் தொடங்கின. சென்னை மாகாணப் பிரதிநிதிகள் எதிர்ப்பும் தொடர்ந்து நிலவியது. காந்தியும், தென்னிந்தியப் பிரதிநிதிகள் இந்தியைக் கற்க வேண்டும் என்பதை வலியுறுத்திய வண்ணமாக இருந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக 1918 இல் இந்தூரில் நடைபெற்ற இந்தி சாகித்திய சம்மேளன மாநாட்டில் தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதற்கான செயல் திட்டங்களை காந்தி உருவாக்கினார்.
அதன் விளைவாக 1918 இல் சென்னையில் ‘தட்சிண பாரத ஹிந்தி பிரச்சார சபை’ (தென்னிந்திய இந்தி பரப்பு அவை)யை நிறுவினார். அதோடு விட்டாரா காந்தி? திராவிட மொழியினர் சிறுபான்மையினர்; எனவே பெரும்பான்மையினர் மொழியைக் கற்றுத்தானாக வேண்டும் என்ற பாசிச வாதத்தை இனிப்புத் தடவி பேசத் தொடங்கினார். “திராவிடர்கள் சிறுபான்மையோராக இருப்பதால், இந்தியாவின் பிற பகுதியில் உள்ளவர்கள், திராவிட இந்தியாவில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வதைவிட இந்தியாவின் பிற பகுதிகளில் பொது மொழியாக உள்ள இந்தியை சிறுபான்மை யினரான திராவிடாகள் கற்றுக் கொள்வதுதான் தேசியப் பொருளாதாரத்துக்கு நல்லது” என்று ‘யங் இந்தியா’வில் எழுதினார்.
காந்தி மீதும், காந்தியார் பேசி வந்த நிர்மாணத் திட்டத்தின் மீதும் முழு நம்பிக்கை வைத்து காங்கிரசில் இணைந்து பணியாற்றிக் கொண் டிருந்தார் பெரியார். மதுவிலக்கை மனதில் கொண்டு, கள் தரும் மரங்களை வெட்டி எறியுங்கள் என்றார் காந்தி. வட இந்தியாவில் கள் தருவது ஈச்ச மரம்தான்; எனவே வெட்டினார்கள். ஆனால், பெரியாரோ பொருள் மதிப்பு மிக்க 500 தென்னை மரங்களை வெட்டித் தள்ளினார்.
“ஆங்கிலேயே அரசு நீதியற்ற அரசு; அதன் நீதிமன்றங்களைப் புறக்கணியுங்கள்” என்றார் காந்தி. 1920களில் தனக்கு வரவேண்டியிருந்த ரூ.50000/க்கான இரண்டு கடன் பத்திரங்கள் காலாவதி ஆவதை அறிந்தும், பலர் வற்புறுத்தியும் நீதிமன்றம் செல்லாமல் இழந்தார் பெரியார்.
அதே கதைதான் இந்தி விஷயத்திலும்.
“தேசிய நலனுக்கு இந்தி படியுங்கள்” என்று கூறி விட்டார் காந்தி. அது போதாதா பெரியாருக்கு! 1922 ஆம் ஆண்டு பண்டித மோதிலால் நேரு, விட்டல்பாய் படேல், டாக்டர் அன்சாரி ஆகியோர் ஈரோட்டுக்கு வந்திருந்தபோது, தனது பழைய இரயில்வே நிலைய மாளிகையில், 30 மாணவர் கற்கும் இந்திப் பள்ளி ஒன்றினைத் தமது செலவில் தொடங்கி, 2 ஆண்டுகள் வரை நடத்தி வந்தார். அதில் 15 பிள்ளைகளுக்கு உணவு முதலியவை இவர் பொறுப்பு. (திரு.வி.க. வாழ்க்கை வரலாறு)
ஆனாலும், அதே 1922 ஆம் ஆண்டின் இறுதியில் திருப்பூரில் நடைபெற்ற தமிழ் மாகாண காங்கிரசு மாநாட்டில் இந்தியைப் பரப்புகிறோம் என்று கூறிக் கொண்டு, இந்தியில் உள்ள துளசிதா°, இராமாயணத்தைப் பரப்புவதைக் கண்டித்துப் பேசுகிறார், பெரியார். ஆக இந்தி என்பதன் ஊடாக வடவரின் பண்பாட்டுத் திணிப்பு நடக்கிறது என்ற சிறு பொறி பெரியார் மனதில் 1922 லேயே தோன்றியிருக்கிறது.
1925 நவம்பரில் தமிழ்நாடு காங்கிரசு மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. தலைமை திரு.வி.க. இந்த மாநாட்டில்தான் பெரியார் கட்சி விதிகளின்படி தேவையான அளவுக்கு மேல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒப்புதலோடு முன் வைத்த வகுப்புவாரித் தீர்மானத்தைப் பரிசீலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்தார் தலைவர் திரு.வி.க., தமிழ்த் தென்றல் திரு.வி.க., மாநாட்டுத் தலைவர் என்ற முறையில் ஒரு தீர்மானத்தை முன் வைத்தார். பெரியாரும் அவரோடு பலரும் மாநாட்டுப் பந்தலை விட்டு வெளியேறிய பின்னர், அ ந்தத் தமிழறிஞர் முன்மொழிந்த தீர்மானம் இந்தி பரப்புக்கான தீர்மானம்.
“தமிழக இளைஞர்கள் இந்தி சேவாதளத்தில் இணைய வேண்டுமென்றும், சேவா தளத்தின் கிளைகள் ஒவ்வொரு நகரத்திலும், தாலுகாக்களிலும் அமைக்கப்பட வேண்டுமென்றும், இந்தியைப் பரப்புவதில் ஆர்வம் குறைந்துள்ளது; அதை மாற்றி தமிழர்கள் இந்தியை விரைவாகவும், நன்றாகவும் பயில வேண்டும் என்றும் வலியுறுத்துவதே தமிழ்த் தென்றல் திரு.வி.க. கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம்.
(தொடரும்)
பெரியார் முழக்கம் 07082014 இதழ்