தூக்குத் தண்டனை: சட்ட ஆணையம் மறு ஆய்வு
19 பேர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்ததைத் தொடர்ந்து, சட்ட ஆணையம் இந்தியாவில் தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. இதற்காக பொது மக்கள் கருத்துகளைக் கேட்டுள்ள சட்ட ஆணையம், தூக்குத் தண்டனை குறித்து ஆவணம் ஒன்றையும் வெளியிட்டு, மக்கள் பதிலளிக்க வேண்டிய வினாக் களையும் தயாரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 132 தூக்குத் தண்டனைகளை விசாரணை நீதிமன்றங்கள் விதித்துள்ளன. இதே காலகட்டத்தில் உச்சநீதி மன்றத்தால் உறுதிப் படுத்தப்பட்ட தூக்குத் தண்டனை ஆண்டுக்கு 3 அல்லது 4 மட்டுமே! சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கில் போடப் பட்டவர்கள் எண்ணிக்கை 54 பேர். 2012இல் அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்குத் தண்டனை தேவையா, இல்லையா என்பது குறித்து “ici-dia@nic.in” என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
காஞ்சி ஜெயேந்திரனை காப்பாற்றும் முயற்சி
சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரன், விஜயேந்திரன் உள்ளிட்ட 24 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். புதுவை மாவட்ட விசாரணை நீதிமன்றம் தீர்ப்பை 2013, நவம்பர் 27 ஆம் தேதி வழங்கியது. கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் மனைவி, மகன் உள்ளிட்ட 83 சாட்சிகள் மிரட்டப்பட்டு பிறழ் சாட்சிகளாக்கப்பட்டனர். மிரட்டலுக்கு பயந்து சாட்சியத்தை மாற்றி சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று சங்கர்ராமன் மனைவி, மகன் ஆகியோர் வெளிப்படையாகவே கூறினர். 187 சாட்சிகளில் 83 சாட்சிகள் பல்டி அடித்தனர். ஜெயேந்திரன் நீதிபதியுடன் லஞ்சம் தருவது குறித்து நடத்திய தொலைபேசி உரையாடல்களும் வெளி வந்தன. இவ்வளவுக்குப் பிறகு, வழக்கை மேல்முறையீடு செய்யும் முடிவு நீண்ட தாமதத்துக்குப் பிறகே எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முழு விசாரணை நடத்தியது தமிழக காவல்துறை. அந்த அடிப்படையில் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்து அதை புதுவை அரசுக்கு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து புதுவை அரசு மேல்முறையீடு செய்வதற்கான அரசாணையை வெளியிட்டு அதற்கு ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றது.
இந்த நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு தகுதியற்றது. அப்படி மேல் முறையீடு செய்தால் புதுவை அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். உண்மையில் இந்த வழக்குகளில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் தலையிட்டு கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும், உச்சநீதிமன்ற விசாரணையிலோ அல்லது மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கோ உட்படாத ஒரு வழக்கில் மத்திய அரசு தனது வழக்கறிஞர் மூலமாக ஏன் தலையிட வேண்டும்? என்றும் மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். புதுவை அரசு மேல் முறையீட்டுக்கு முறையான அரசாணை பிறப்பித்தப் பிறகு, மத்திய அரசு வழக்கறிஞரின் கருத்துக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. புதுவை அரசே அரசாணையைத் திரும்பப் பெற்றால்தான் மேல்முறையீட்டை நிறுத்த முடியும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கொலை வழக்கில் தொடர்புடையவர், அதிகாரச் செல்வாக்கு மிக்க பார்ப்பனர் என்பதால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் இதில் மவுனம் சாதிக்கின்றன. புதுவை அரசு வழக்கை மேல்முறையீடு செய்தால் அதற்கு அனுமதி தரக்கூடாது என்று சுப்ரமணியசாமி பார்ப்பனர், குடியரசுத் தலைவருக்கு முன்கூட்டியே கடிதம் எழுதியுள்ளார். பார்ப்பான் கொலை செய்தால் அதற்கு தண்டனை வழங்கக் கூடாது என்ற ‘மனுசாஸ்திரம்’தான் இப்போதும் நாட்டில் சட்ட மாக இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வுகள் சான்று களாகும்.
இரட்டைக்குவளை: கைது
தமிழ்நாட்டிலிருந்து வியப்பைத் தரும் செய்தி ஒன்று வெளி வந்திருக்கிறது. தமிழகக் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் திணிக்கப்படுவதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதும், திராவிடர் விடுதலைக் கழகமாக இருக்கும் போதும் தொடர்ந்து பரப்புரை இயக்கங்களையும் போராட்டங் களையும் கழகம் நடத்தியிருக்கிறது. குறிப்பாக ‘இரட்டை தம்ளர்’ தீண்டாமையைத் திணித்து வரும் தேனீர்க் கடைகளின் பட்டியலை ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளியிட்டு, நடவடிக்கை ஏதும் அரசு எடுக்காதபோது அந்த குவளைகளை உடைக்கும் போராட்டமும் நடத்தப் பட்டது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அப்படி எதுவுமே தமிழகத்தில் இல்லை என்று பொய்யுரைத்து வந்தது. இப்போதுதான் முதன்முதலாக தர்மபுரி மாவட்டத்தில் தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளையை வைத்து தீண்டாமையைத் திணித்த 6 தேனீர்க் கடை உரிமையாளர்களான சாதி வெறியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணாகரம் வட்டம் தாசம்பட்டியில் சாந்தி, பளிஞ்சார அள்ளியில் சிவலிங்கம், பாலக்காடு வட்டம் நம்மாண்ட அள்ளி பகுதியில் வீரபத்திரன் மற்றும் முருகன், தேவகி, கிட்டம்பட்டி சித்தையன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அ°ராகார்க் ஆணையின் பேரில் தனிப்படை போலீசார் மாவட்டம் முழுதும் விசாரணை நடத்தி, இவர்களை கைது செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் இவர்கள் மீது பாயுமானால், அது ஏனைய சாதி வெறியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும். ஆனால், எந்தப் பிரிவில் வழக்கு போடப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது தவிர, தமிழகம் முழுதும் தீண்டாமை பின்பற்றப்படும் 186 கிராமங்களை தமிழக அரசு கண்டறிந் துள்ளது. அந்த கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் வழியாக ஜாதி, தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய அரசு திட்ட மிட்டுள்ளதாக ‘தினமலர்’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
புகுஷிமாவில் பொறியாளர் சுந்தர்ராஜன்
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்து உச்சநீதிமன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் வழக்குகளைத் தொடுத்து போராடி வருபவர் இளம் பொறியாளர் சுந்தர்ராஜன். கடந்த பிப்ரவரி மாதம் ஜப்பான் போய் அணுஉலை விபத்து நடந்த புகுஷிமாவையும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்துத் திரும்பியுள்ளார். புகுஷிமா விபத்துக்குப் பிறகு கதிர்வீச்சு ஆபத்துகளிலிருந்து தப்பிக்க பலரும் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். புகுஷிமாவி லிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புடபாபா எனும் நகரில்தான் அந்த விபத்து நடந்தது. இந்நகரத்தின் மேயராக இருப்பவர் கட்சுடாகா இடோகவா. விபத்து நடந்த 10 நிமிடங்களுக்கு முன் தான் அந்த சாலையைக் கடந்து வருந்திருக்கிறார். 10 நிமிட இடைவெளி அவர் உயிரைக் காப்பாற்றி யிருக்கிறது.
ஜப்பான் அரசாங்கமும், அணுஉலையை நடத்திய டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனியும் (டெப்கோ), விபத்து எதுவும் நடக்கவே நடக்காது என்று உறுதி தந்தும் விபத்தை தடுக்க முடியவில்லை. ஜப்பான் அரசு, டெப்போ, நகர நிர்வாகம் மூன்றும் சேர்ந்து இந்த அணு உலையால் எந்த ஆபத்தும் நடக்காது என்று கையெழுத்திட்டு ஒப்பந்தம் ஒன்றையே தயாரித்தார்கள். பொறியாளர் சுந்தர்ராஜனிடம் கையில் வைத்திருக்கும் அந்த ஒப்பந்தத்தைக் காட்டி, “விபத்துக்கு நான்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்” என்று உள்ளம் உடைந்து பேசினார், அந்த மேயர். “மக்களுக்கான அரசு மக்களைத்தான் முதலில் ஆதரிக்க வேண்டும். ஆனால் எங்கள் அரசோ அணுசக்தியையும், அணுஉலை நிறுவனங்களையும் ஆதரித்தது” என்று அரசை குற்றம் சாட்டினார். அத்துடன் அரசிடம் கலந்து ஆலோசிக்கா மலேயே அந்நகரத்தை மக்கள் காலி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து செயல்பட்டார். இந்தத் தகவலை ‘தமிழ் இந்து’ நாளேட்டில் பதிவு செய்துள்ளார் பொறியாளர் சுந்தர்ராசன்.
கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்று உறுதி கூறும் இந்திய ஆட்சியாளர்களே, அணுசக்தி ஆதரவு விஞ்ஞானிகளே! ஜப்பான் நாட்டை விடவா உங்களிடம் பாதுகாப்புக்கான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.
பெரியார் முழக்கம் 04092014 இதழ்