வினாக்கள்… விடைகள்…!
பெண்கள், இளைஞர்கள் முன்னேறாவிட்டால், இந்தியா வல்லரசாக முடியாது. – ராகுல் காந்தி
என்னவோ, சுதந்திரத்துக்குப் பிறகு இப்பத்தான் முதன்முதலாக காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதுபோல் பேசுறீங்க…
திருப்பதியில் – சொர்க்க வாசல் தரிசனத்துக்கு முக்கிய பிரமுகர் களுக்கான டிக்கட்டுகளை கோயில் நிர்வாகம் முறைகேடாக விற்றுள்ளது. – ஆந்திராவில் வழக்கு
அப்படித்தாங்க விற்க முடியும்! முறையாக டிக்கட் தருவது என்றால், நேராக ‘சொர்க்கத்துக்கு’த்தான் போக வேண்டியிருக்கும்; புரிஞ்சுக்காம வழக்குப் போடாதீங்க!
காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை ‘கடவுளே’ பட்டியலிடுவார். – ப. சிதம்பரம்
இப்படிச் சொன்னால் எப்படி? கண்களுக்குத் தெரியாத சாதனை களை கண்களுக்கே புலப்படாத கடவுள் பட்டியலிடுவார் என்று புரியும்படி சொல்லுங்க, சார்!
புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து அபிஷேகப்பாக்கம் சிங்கிரி கோயில் வரை 18 ஆவது ஆண்டாக பக்தர்கள் ‘உலக நன்மைக்காக’ பாதயாத்திரை. – செய்தி
‘பாத யாத்திரை’ – உலக நன்மைக்கா? உடல் நன்மைக்கா? பக்தி என்று வந்து விட்டாலே உண்மையைப் பேசவே கூடாது என்று சத்தியம் செய்திருக் கீங்களாய்யா…
அமைதியாக இருந்த ஆந்திராவில் மாநில பிரிவினையை அறிவித்ததன் மூலம், தற்போது அந்த மாநிலத்தை கலவர மாநிலமாக மாற்றியுள்ளது காங்கிரஸ். – மோடி ஆவேசம்
ஆந்திரா பிரிவினையை பா.ஜ.க.வும் தீவிரமாக ஆதரிக்கிறது என்ற அரசியல் செய்திகளையெல்லாம் இந்த பிரதமர் வேட்பாளருக்கு எவராவது எடுத்துக் கூறக் கூடாதா?
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஜெயலலிதா தங்கக் கவசம் அளிக்கிறார்! – செய்தி
இந்த சிலைக்கு வாக்கு இல்லை; ஆனால் வாக்கு வங்கி உண்டு!
மக்களவைத் தேர்தல் குருஷேத்திரப் போர்! – இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி
அப்படியா? இந்தப் போருக்கு எந்த நாட்டுல இருந்து ஹெலிகாப்டர் இறக்குமதி செய்யப் போறீங்க?
கூட்டணி தேவை இல்லை என கட்சித் தொண்டர்கள் கூறுகிறார்கள். – விஜயகாந்த்
அப்படியா? ‘கடவுளோடு’கூட கூட்டணி வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்களா? பரவா யில்லையே!
மக்களோடு கூட்டணி அமைப்போம். – ஸ்டாலின் பேச்சு
மகிழ்ச்சி; மக்களுக்கு 5 தொகுதிகளாவது ஒதுக்குவீர்களா?
பெரியார் முழக்கம் 06022014 இதழ்