தலையங்கம் – தமிழக அரசியல்-அரசுகளில் திடீர் மாற்றம்
அரசியலில் தனக்கு எதிரிகளே இல்லாமல் காணாமல் போய் விட்டார்கள் என்று சில வாரங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியபோது, ஊழல் தடுப்புச் சட்டம் தனக்கு எதிரியாக வந்து நிற்கப் போகிறது என்று அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். 18 ஆண்டுகாலம் பல்வேறு தடைகளைத் தாண்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு செப்டம்பர் 27ஆம் தேதி முடிவுக்கு வந்தது. 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் முதல்வர் பதவியையும் இழந்தார். ரூ.100 கோடி அபராதத் தொகை. அவருடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ள சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று பதவி இழக்கும் முதல் முதலமைச்சர் ஜெயலலிதாதான். 4 ஆண்டுகால தண்டனைக் காலத்துடன் சேர்த்து அடுத்த 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட சட்டம் தடை விதிப்பதால் இனி 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடும் தகுதியை ஜெயலலிதா இழக்கிறார்.
எவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற உண்மையை இத்தீர்ப்பு நிரூபித்துக் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன் வைக்கப் படுகின்றன. சட்டங்கள் எல்லாக் காலத்திலும் இப்படி நேர்மையாக நடை போடுவதும் இல்லை. சட்டங்களைக் கையாளும் நீதிபதிகள் நேர்மையானவர்களாக இருக்கும்போதுதான் அது சாத்தியமாகிறது.
2003 ஆம் ஆண்டு இந்த வழக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி பெங்களூருக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து 4 நீதிபதிகள் மாறி 5ஆவது நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்கா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் முயற்சிகள் அனைத்தை யும் உறுதியாகப் புறக்கணித்து, தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறார் நீதிபதி.
“அம்மா மீதே வழக்கா? அம்மாவுக்கே சிறை தண்டனையா?” என்று அம்மாவின் கட்சித் தொண்டர்கள் “விசுவாசிகள்” புலம்புவதும், வன்முறைகளைக் கையில் எடுப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜெயலலிதா பற்றி விமர்சிப்பதற்கோ, எழுதுவதற்கோ அ.இ.அ.தி.மு.க. ஆட்சி முற்றாக தடை போட்டு. அவமதிப்பு வழக்குகளை அடுக்கடுக்காகத் தொடர்ந்து தமிழகத்தை தங்களது அதிகாரப் பிடிக்குள் அச்சுறுத்தி வைத்திருந்தது; அந்த உளவியலில்தான் அம்மாவுக்கே தண்டனையா என்று கேட்கும் நிலையை உருவாகியிருக்கிறது.
அம்மா – ஊழலே செய்யவில்லை என்று கூறுகிறார்களா?
அல்லது ஊழல் செய்தாலும் தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு கிடையாது என்கிறார்களா?
சரி; இந்த வழக்கைத் தொடர்ந்த சுப்ரமணியசாமி மரியாதைக்குரிய மனிதர் அல்ல; பார்ப்பன வெறியர்; தமிழினத் துரோகி என்பதில் கருத்து வேறுபாடே கிடையாது. ஆனால் 18 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வழக்கைத் தொடர்ந்ததற்குப் பிறகு, இடையில் அம்மையார் ஜெயலலிதாவுடன் அவர் நட்பு பாராட்டிய காலமும் உண்டு; இல்லை என்றுகூற முடியுமா? அண்மையில் தில்லை நடராசன் கோயில் தீட்சதர் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று சுப்ரமணியசாமி வழக்குப் போட்டபோது அம்மையார் ஜெயலலிதாவும் சிறப்பு வழக்கறிஞரை அமர்த்த மறுத்து வழக்கை உறுதியாக நடத்தாமல் நீர்த்துப் போகச் செய்து சுப்ரமணியசாமிக்கே மறைமுக ஆதரவளித்ததையும், இதில் சுப்ரமணியசாமியே அம்மையாரை பாராட்டியதையும் எவரும் மறந்துவிட முடியாது. இன்று சுப்ரமணிய சாமி கொடும்பாவிகளை எரிக்கும் அக்கட்சியின் உணர்ச்சி வயப்பட்ட தொண்டர்கள், இதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஊழல் தடுப்பு வழக்கிலிருந்து அம்மையார் விடுதலை பெறுவதற்காக “கடவுள்”களுக்கு லஞ்சம் தரும் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடந்தன. தமிழ்நாட்டுக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்துமாறு அறநிலையத் துறையே சுற்றறிக்கை அனுப்பியது. பெங்களூரில் பார்ப்பனர்களை வைத்து “சத்ரு சம்ஹார யாகம்” நடத்தப்பட்டது. லஞ்சம், ஊழல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெறுவதற்காக சிறப்புப் பூஜைகள், யாகங்கள் நடத்துவதா என்று பார்ப்பன அர்ச்சகர்களே வெட்கப்படவும் இல்லை. “அவாளு”க்கு பூஜை, லாபத்துக்காக நடத்தப்படும் ஒரு தொழில்; அவ்வளவுதான்.
தீர்ப்பு வெளியான பிறகு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, வன்முறை தலைவிரித்தாடியது. தமிழக காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. தமிழ்நாட்டில் பெரியார் இயக்கங்கள், மனித
உரிமை அமைப்புகள், சுற்றுச் சூழல் அமைப்புகள், ஜாதி ஒழிப்பு இயக்கங்கள் – ஒரு பொதுக் கூட்டம், அறப் போராட்டத்துக்கு அனுமதி கேட்டால், அதற்கு தமிழக காவல்துறை காட்டும் கெடுபிடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் குறிப்பாக பெரியார் இயக்கங்கள் கூட்டம் நடத்தினால், நிபந்தனைக்கு மேல் நிபந்தனை போடுவார்கள். கூட்டத்தில் பேச வேண்டிய கருத்துகளை அவர்களே தீர்மானிப்பார்கள். கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்வார்கள். நீதிமன்றம் போய் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரவு போடுவார்கள். இவ்வளவு ‘கெடுபிடி’கள் காட்டி, “சட்டம் ஒழுங்கு பிதாமகன்களாக” வேடம் கட்டி ஆடிய காவல்துறை, தமிழ்நாடு முழுதும் கல்வீச்சு, பேருந்து எரிப்பு, கடைகள் உடைப்பு எல்லாம் நடந்தபோது, எங்கே போய் பதுங்கிக் கொண்டது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது.
தி.மு.க. தலைவர்கள் மீது இப்படி ஒரு தீர்ப்பு வந்து, தி.மு.க. தொண் டர்கள், இதேபோல் வன்முறையை கையில் எடுத்தால், காவல்துறை இதே போன்ற “கண்டும் காணாத அணுகுமுறையை” மேற்கொண்டிருக்குமா? இதுதான் காவல்துறை நேர்மையாக கடமையாற்றும் இலட்சணமா?
அதே நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஒருவர், இப்படிப்பட்ட தண்டனைக்கு உள்ளாகும்போது அதற்கு அரசியல் மாற்று சக்தியாகக் கருதப்படும் தி.மு.க.வின் நிலை என்ன? தி.மு.க. தலைவர் கலைஞர், இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்து ‘மவுனம்’ சாதித்து விட்டார். அவரால் மவுனம் சாதிக்கத்தான் முடியும். “யார் இலஞ்ச ஊழல் செய்தாலும் சட்டம் வழங்கும் தண்டனையை ஏற்றுத்தான் தீரவேண்டும்; பெங்களூர் நீதிபதி நேர்மையாக தீர்ப்பளித்திருக்கிறார்” என்று கலைஞரால் கருத்து தெரிவிக்கவே முடியாது. அதே இலஞ்ச ஊழல் வழக்குகள் அவரது குடும்பத்தையும் கட்சியையும் சூழ்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை தங்களது வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றக்கூடிய வலிமையான தளத்தை
தி.மு.க. இழந்து நிற்கிறது என்பதுதான் அவலமான உண்மை.
ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக வந்ததற்குப் பிறகு, தமிழ்நாட்டின் உரிமைகளானாலும் ஈழத் தமிழர் பிரச்சினையானாலும் தூக்குத் தண்டனைக்குள்ளான தமிழர்கள் விடுதலையானாலும் உறுதியான குரல் கொடுத்து, தனது கடந்தகால கொள்கைகளிலிருந்து மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வந்தார். இதன் வழியாக, தனது முதலமைச்சர் பதவியை வலிமையான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தார். இப்போது, அந்தத் தலைமைப் பதவியை ஊழல் தடுப்புச் சட்டம் பறித்துவிட்ட நிலையில் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது என்பது உண்மை.
இந்த வெற்றிடத்தை நிரப்பப் போவது தாங்கள்தான் என்று இந்துத்துவா சக்திகள் மணல் கோட்டைகளை கட்டிக் கொண்டிருக்கின்றன. இதற்கு தமிழ் மண் ஒரு போதும் இடம் தராது. ஆனாலும், தமிழகத்தில் உருவாகியுள்ள சமூக-அரசியல் நெருக்கடிகள் எப்படி எதிர்கொள்ளப்படப் போகின்றன என்பது மிக முக்கிய கேள்வி.
மதம்-ஜாதி-தலைவர்களை கடவுளாக வழிபடும் போக்கு, சந்தர்ப்ப வாதம், எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்கிட முடியும் என்ற அசட்டுத் துணிவு போன்ற அரசியல்களுக்கு எதிரான வலிமையான இயக்கம் உருவாக வேண்டும். அதற்கு மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். மக்களைக் காப்பாற்ற “கடவுள் அவதாரமாக தலைவர்கள் வந்து விட்டார்கள்” என்ற ‘அரசியல் பக்தி’ மார்க்கத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும். ஏற்கெனவே மதம், கடவுள், பக்தி உருவாக்கி வைத்துள்ள உளவியல் கட்டமைப்புகள் இத்தகைய சீழ் பிடித்த அரசியலுக்கும் வழியமைத்து தருகிறது என்பதையும் கவனத்தில் நிறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கான சமூக-அரசியல் கருத்துக்களை உருவாக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் விரோத அரசியல்களின் முகத்திரையைக் கிழித்தெறிய இயக்கங்கள் – தீவிரமாக களமிறங்கி மக்களை அணி திரட்ட வேண்டும். காலம் விடுக்கும்
இந்த அறைகூவலை சந்திக்கத் தயாராக வேண்டும்!
“மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப்படாத வரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதைச் செய்து அவர்களை ஓரளவிற்குத் திருப்தி செய்துவிட்டு மற்றபடி தம் சுயநலத்துக்கான சகலத்தையும் செய்து கொள்ள முடியுமே தவிர, மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய காரியங்களைச் செய்ய முடியாது.” – பெரியார்
பெரியார் முழக்கம் 02102014 இதழ்