உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை

நாட்டின் பெரிய கோயில்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகின்றன. கோயில் வழிபாட்டு முறைகளை தீர்மானிக்கிறவர்கள் பார்ப்பனர்கள்தான். தமிழ்நாடு கோயில்களில் உரிய ஆகமப் பயிற்சி பெற்ற எவரும் கருவறைக்குள் நுழையும் உரிமை பார்ப்பனர்களால் இன்று வரை மறுக்கப்பட்டே வருகிறது. ஆனால், கேரளாவில் இப்படி ஒரு தடை இல்லை. தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் நீதிபதி மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட சைவ வைணவ மதத் தலைவர்கள் இடம் பெற்ற குழு பரிந்துரை செய்த பிறகும் கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் மீண்டும் ஒரு முறை நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் தாங்கள் மட்டுமே நுழைந்து பூஜை செய்ய முடியும். ‘சூத்திரர்’ நுழைந்தால் தீட்டு என்று சாதிக்கிறார்கள். இது மத சுதந்திர உரிமையில் குறுக்கிடுவதாகும் என்று உச்சநீதிமன்றம் வரை போய் தடை ஆணை வாங்கி விட்டார்கள். பக்தி மார்க்கத்தில் ஊறித் திளைத்திருக்கும் சொரணையுள்ள ‘தமிழர்’ எவரும் இந்த இழிவை கண்டு கொள்வதே இல்லை.

இந்த நிலையில் கருநாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்கள் தங்களுக்கான தனி ‘சாப்பிடும் இடத்தை’ உருவாக்கிக் கொண்டு, பிற சாதியினர் ‘பிராமணர்’களுடன் சேர்ந்து சாப்பிடுவது ‘தீட்டு’ என்று கூறி வருகிறார்கள். இந்த இழிநிலை குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஏப்.28, 2004) சஞ்சய் ஹெக்டே என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோயில் மிகவும் பிரபலமானது. 13 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த கோயில் மத்வாச்சாரி வழி வந்த பார்ப்பன மடத் தலைவர்களால் சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தில்லை நடராசன் கோயிலுக்கு ‘சிவபெருமானை’ வழிபட வந்த, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த நந்தன், தீயில் இறங்கி தனது தீட்டைக் கழித்தப் பிறகு, தில்லை நடராசன் வெளியிலேயே நந்தனை நிற்க வைத்து காட்சித் தந்ததாக கட்டிவிட்ட கதைபோல, இந்தக் கோயிலுக்கும் ஒரு கதை உண்டு.

கனக தாசா என்ற ஆடு மேய்க்கும் ‘குரும்பர்’ ஜாதியில் பிறந்த பக்தன், உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்கு வழிபட வந்தான். ‘கீழ் ஜாதி’ என்பதால் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கோயிலுக்கு வெளியே நின்று கொண்டு “கிருஷ்ண பகவானை” நோக்கி பயபக்தியுடன் பாடல்களைப் பாடினான். அப்போது கிழக்கு நோக்கி இருந்த கிருஷ்ணன் சிலை, மேற்கு பக்கமாகத் திரும்பி, பக்தனுக்கும் தனக்கும் இடையே இருந்த சுவரை உடைத்து, தரிசனம் தந்தது என்பது கதை. ‘பக்தன்’ தரிசனத்துக்காக பகவான் உடைத்த சுவரை அப்போதைய பார்ப்பன மடாதிபதி வதிராஜசாமி என்பவர், ‘ஜன்னல்’ வைத்து அடைத்தார். அந்த ‘ஜன்னல் வழியாகவே’ – ‘கீழ்ஜாதிக்காரர்கள்’ கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும் என்பதை பார்ப்பனர்கள் நடைமுறைக்குக கொண்டு வந்தார்கள். இது 16 ஆம் நூற்றாண்டில் நடந்த சம்பவம்.

அதற்குப் பிறகு 1930இல் உடுப்பி வந்த காந்தியார், இந்தத் தீண்டாமை பற்றிய செய்தியறிந்து, கிருஷ்ணன் கோயில் தரிசனத்தைத் தவிர்த்துவிட்டார். 1980ஆம் ஆண்டில் பிரபலமான கருநாடக இசை மேதையும் ‘ஜாஸ்’ இசைக் கலைஞருமான ஜான் ஹிகின்ஸ் – அவர் வெள்ளைக்காரர் என்பதால், பார்ப்பனர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதித்தனர். இது தவிர, ‘பங்தி பேதா’ என்ற பெயரில் பார்ப்பனர்கள் மட்டுமே தனியே உணவருந்தும் ஜாதி வெறி இங்கே உண்டு. கிருஷ்ணா மடத்தில் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரசாத கூடத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே பிரசாதம் சாப்பிட முடியும். ஏனைய ஜாதியினர், பார்ப்பனர்களுடன் சேர்ந்து பிரசாதம் சாப்பிட அனுமதி கிடையாது; அவர்களுக்கு ‘முதல் தளத்தில்’ தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் கடந்த ஏப். 15ஆம் தேதி மணிப்பால் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள வனிதா ஷெட்டி, தனது சக பேராசிரியர்களுடன் தரை தளத்தில் பிரசாதம் சாப்பிட அமர்ந்தார். ‘பிரசாதம்’ பரிமாறுவதற்கு முன்பு பார்ப்பனர்கள், அவர்களை எழச் சொல்லி, முதல் தளத்துக்குப் போகுமாறும், இது ‘பிராமணருக்கு’ மட்டுமே உரிய இடம் என்றும் கூறி அவமதித்துள்ளனர். அவமானமடைந்த அந்தப் பெண் பேராசிரியர், தனது நண்பர்களோடு சாப்பிடாமலேயே திரும்பி விட்டார்.

இதற்கு முன் மும்பையிலிருந்து பார்ப்பனரல்லாத ஒரே சமூகத்தைச் சார்ந்த 30 பேர் இதே இடத்தில் ‘பிரசாதம்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள் பார்ப்பனர்கள் இல்லை என்பதை தெரிந்து, பார்ப்பன புரோகிதர்கள் பாதியிலேயே சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லியுள்ளனர் என்று தகவல்களை விவரிக்கிறது, இந்தக் கட்டுரை!

காங்கிரஸ் கட்சி நடத்திய ‘சேரன்மாதேவி’ குருகுலத்தில் இதேபோல், பார்ப்பன குழந்தைகளுக்கும் பார்ப்பனரல்லாத குழந்தைகளுக்கும் தனித்தனியாக சாப்பாடு போட்டதை எதிர்த்து அன்றைக்கு காங்கிரஸ் கட்சி செயலாளராக இருந்த தந்தை பெரியார், போர்க்கொடி உயர்த்தி குருகுலத்தை மூட வைத்தார். ‘சேரன் மாதேவி’கள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ‘இந்து’வில் கட்டுரை எழுதியுள்ள உச்சநீதிமன்ற வழக்கறிஞர், தீண்டாமை ஒழிப்புச் சட்டப் பிரிவுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார். அரசியல் சட்டத்தின் 25 ஆவது பிரிவு மத சுதந்திரத்தை வலியுறுத்தினாலும் அதன் 25(2) ஆவது உட்பிரிவு சமூக நலம் மற்றும் சமூக சீர்திருத்த நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சீர்திருத்த சட்டங்களுக்கு மத உரிமைகள் கட்டுப்பட்டுள்ளதையும், அதன்படி ஓர் இந்துக் கோயிலில் அனைத்துப் பிரிவினரும் வகுப்பினரும் வழிபடுவதற்கான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

கருநாடக அரசின் இந்து நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைக்கான 1977 ஆம் ஆண்டு சட்டம், ‘பிரசாதம்’, ‘தீர்த்தம்’ வழங்குவதில் பாகுபாடுகாட்டுவதை தடை செய்துள்ளதோடு பழக்க வழக்கங்கள் என்ற பெயரிலோ, ‘இந்து’ சட்டங் களுக்கு புதிய அர்த்தங்களைக் கூறுவதன் வழியாகவோ இந்த ‘பாகுபாடு’களை பின்பற்ற முடியாது என்றும், கண்டிப்பாகக் கூறுகிறது. இப்படி ‘பாகுபாடு’ காட்டப்படும் கோயில்களின் நிர்வாகத்தை அரசே மேற்கொள்ளும் உரிமை களையும் இந்தச் சட்டம் வழங்கியிருக்கிறது. தமது வாதத்துக்கு சான்றாக 1958இல் ‘வெங்கட்டரமனா தேவாரு’ வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையும் கட்டுரையாளர் எடுத்துக் காட்டியுள்ளதோடு, பிற்படுத்தப்பட்ட குரும்பர் சமுதாயத்தைச் சார்ந்த முதல்வர் இதில் தலையிட்டு ‘தீண்டாமை’யை ஒழிக்க முன்வர வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். உடுப்பி கிருஷ்ணன் கோயில் ‘பிராமணர்’களுக்கு கட்டுப்பட்டதும் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட இந்தியாவில் திருமண ஊர்வலங்களில் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த மாப்பிள்ளை குதிரையில் ஊர்வலமாக வருவதை உயர்சாதியினர், அது தங்கள் சாதிக்கான உரிமை என்ற அடிப்படையில் தடை செய்துள்ளனர். ராஜஸ்தானில் நத்துவாரா கோயிலுக்குள் நுழைவதற்கு அம்மாநிலத்தின் தலித் முதல்வரின் மனைவிக்கே உரிமை கிடையாதாம். தனது பிறவித் தீட்டைத் துடைப்பதற்கு துளசி மாலை அணிந்து கொண்டால்தான் அவருக்கு கோயிலில் நுழையவே பார்ப்பனர்கள் அனுமதிக்கிறார்கள், என்ற தகவல்களையும் கட்டுரையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கர்நாடக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 08052014 இதழ்

You may also like...