பிரதமரையே மாற்றியது ‘தூர்தர்ஷன்’
ஆர்.எஸ்.எஸ். தசரா கொண்டாட்டத்தையும் அதன் தலைவர் மோகன் பகவத் பேச்சையும் நேரடியாக ஒளிரப்பியது அரசு தொலைக்காட்சியான ‘தூர்தர்ஷன்’. இதற்குப் பதிலளித்த தொலைக்காட்சி இயக்குநர், “ஆர்.எஸ்.எஸ். தலைவர் உரையைக் கேட்பவர் எண்ணிக்கை அதிகம் என்பதால், தொலைக்காட்சியின் பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்தவே ஒளிபரப்பினோம்” என்று கூறியுள்ளார். உண்மையில் ‘தூர்தர்ஷன்’ பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு முயற்சிக்கிறதா? அதன் யோக்கியதை என்ன?
ஒரு தமிழ் நாளேட்டில் வந்துள்ள தலையங்கம் இது:
“நியூயார்க்கில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்தியை ஒளிபரப்பியது தூர்தர்ஷன். மோடியின் கோப்புப் படங்களை ஒளிபரப்புவதற்குப் பதில், முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் கோப்புப் படங்களோடு! தூர்தர்ஷன் செய்தி அலைவரிசையின் இந்த அபத்தம் ஒரு முறை இரு முறை அல்ல; பல முறை தொடர்ந்தது. பார்வையாளர்கள் தலையில் அடித்துக் கொண்டு, தொலைக்காட்சி நிலையத்துக்கே தொடர்பு கொண்டு பேசிய பின் மாற்றியிருக்கறார்கள். அமெரிக்க ஊடகங்களுக்கு இப்போது இதுவும் ஒரு செய்தி. அப்படியானால், செய்திகள் ஒளிபரப்பாகும்போது செய்திக் குழுவினர், தூர்தர்ஷன் அதிகாரிகள் யாரேனும் அதைப் பார்க்கிறார்களா, இல்லையா?
சில நாட்களுக்கு முன்புதான் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது, அவருடைய பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் ஜி (ஓஐ) என்பதை ரோமன் எழுத்தாக நினைத்துக் கொண்டு ‘லெவன் ஜின்பிங்’ என்று வாசித்து, சீன ஊடகங்களுக்குச் செய்தி பரிமாறினார் தூர்தர்ஷனின் செய்தியாளர். விஷயம் அம்பலமானதும் ஒப்பந்த அடிப்படையிலான பணியில் இருந்தவரை வேலையிலிருந்து நீக்கி, கதையை முடித்தார்கள்.
தூர்தர்ஷனின் ‘தேசிய சேவை’யின் தரம் மட்டும் அல்ல; ‘உள்ளூர் சேவை’யின் தரமும் இப்படித்தான் இருக்கிறது. ஜெயலலிதா பதவி பறிக்கப்பட்ட அன்றைய இரவு, ஒரு மாநிலமே ஸ்தம்பித்திருந்தது. எல்லாத் தொலைக்காட்சிகளும் விடிய விடிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்துக் கொண்டிருந்தன. மறுநாள் காலை 7 மணி தூர்தர்ஷன் தமிழ்ச் செய்தியிலோ ஜெயலலிதா வழக்கு, சிறைவாசம், தமிழகத்தின் நிலை தொடர்பாக ஒரு வரி இல்லை. காரணம் என்ன? அச்சமா, அலட்சியமா, இது செய்தியே இல்லை என்ற முடிவா? எதுவாக இருந்தாலும் அது தவறு தானே? யாருக்காகச் செய்தி அளிக்கிறார்கள்?
தூர்தர்ஷனின் ‘ரேட்டிங்’ உயர்த்தும் யோக்கியதை இதுதான்.
– சென்னை தொலைக்காட்சி முற்றுகைப் போராட்டத்தில் விடுதலை இராசேந்திரன்
பெரியார் முழக்கம் 09102014 இதழ்