தலையங்கம்: ‘கடவுள்’ ஒருவர் இருக்கிறாரா?

“கடவுள் எப்படி எங்கள் குழந்தையை இப்படி ஒரு கொடூரமான முறையில் எடுத்துக் கொள்ளலாம்?” என்று கேட்கிறார், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பில் பலியான இளம் பெண் பொறியாளர் சுவாதியின் பாட்டி! காலம் முழுதும் கடவுளை நம்பிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் நியாயமான கோபத்துக்குப் பின்னால், கொந்தளிக்கும் உணர்வுகளை குறைத்து மதிப்பிட முடியாது. பேத்தியைப் பறி கொடுத்த துயரத்தின் வெளிப்பாடு – அவர் நம்பும் கடவுளின் நேர்மையை சந்தேகிக்க வைத்துவிட்டது. எப்படியோ குண்டு வைப்பதை கடவுளால் தடுக்கவும் முடியவில்லை. இப்போது மக்களின் கோபம் ஆட்சியின் செயலின்மை மீதுதான். ‘கடவுள்’ தப்பி விட்டார்!

‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பது’ என்று கூறுவார்கள். எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆட்சி நிர்வாகம் சுறுசுறுப்பாகக் களமிறங்கிவிடும். ஆரவாரம், பதட்டம், குற்றவாளிகள் தேடுதல், பாதுகாப்பு கெடுபிடிகள் – இவை எல்லாம் சில வாரங்கள் தொடரும். தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து செய்தி கிடைக்காத சோகத்தில் மூழ்கிக் கிடந்த ஊடகங்களுக்கு தீனி கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சி. ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் ஒருவர் மாற்றி ஒருவர் மீது வீசும் குற்றச்சாட்டுகள் அனல் பறக்கின்றன. எல்லாம் சரிதான். ஆனால், ஏன் இப்படி குண்டுகள் திடீர் திடீர் என்று வெடித்துக் கொண்டே இருக்கின்றன? இவற்றில் எந்தத் தொடர்பும் இல்லாத ஆட்சியமைப்பின் பாதுகாப்பை மட்டுமே நம்பி வாழும் அப்பாவி மக்கள் ஏன் சாக வேண்டும்? ஒரு லட்சம் ரூபாய் அரசு தரும் இழப்பீட்டை அவரது குடும்பத்தினர் வாங்குவதற்கா? இந்தக் கேள்விகளை எல்லாம் கடந்து சுவாதியின் பாட்டி எழுப்பியிருக்கும் கேள்விதான் பிரச்சினைக்கே மய்யம்.

மதத்தின் புனிதங்களைக் காக்க, “ஆண்டவனின்” ஆசிர்வாதத்தோடு குண்டுகள் வெடிக்கும்போது, வழிபாட்டுத் தலங்கள் இடிபடும்போது, அப்பாவிகள் உயிர் பறிப்பு நடந்து முடிகிறபோது, தான் வணங்கும் ‘கடவுளுக்கான’ சேவையாகவே இதை செய்து முடிக்கும் குரூர உள்ளங்கள் நியாயப்படுத்திக் கொள்கின்றன. இந்த உள்ளங்களில் இயல்பாகப் புதையுண்டிருக்க வேண்டிய மனிதநேயத்தைத் தூக்கி வீசி எறிவது எது? கடவுளும் அந்தக் கடவுளால் உருவாக்கப்பட்டதாக மனித மூளைக்குள் வெறியாக இறங்கி நிற்கும் மதமும், அது ஊட்டிய வெறியும் தானே! அனைத்து மதங்களையும் சேர்த்துத் தான் நாம் கூறுகிறோம். கடவுள் பெயரால் மதத்தின் நம்பிக்கை யால் மனித குல வரலாற்றை ரத்த வாடையாக்கிய சக்திகள் இன்னும் அந்த ‘இறைத் தொண்டு’களை தொடரத்தான் வேண்டுமா?

‘கடவுள்’ பெயரைச் சொல்லி, ‘நம்மை படைத்தவன்’ என்ற கண்ணோட்டத்தில் பல்வேறு மத நம்பிக்கையுள்ள கடவுள் நம்பிக்கையாளர்களை ஒன்று திரட்டக்கூட முடியும். ஆனால், எல்லா மதமும் ஒன்றுதான் என்று ஒரே அணிக்குள் திரள எந்த மதக்காரர்களும் வர மாட்டார்கள். எனவே கடவுள் நம்பிக்கையைவிட மத நம்பிக்கைதான் ஆபத்தானதாக இருக்கிறது என்றார், பெரியார்.

‘சுதந்திர’ இந்தியாவில் தேசத் தந்தை காந்தியார் உயிரைப் பறித்தது – முதல் மதவெறி. அதன் எதிர்வினைகள் கலவரங்களாக வடிவெடுத்தன. பாபர் மசூதி இடிப்பும் குஜராத் கலவரமும் நாட்டை வேறு திசைக்கு இழுத்துப் போயின. கோவையில் இஸ்லாமிய தீவிரவாதம், தொழில் நகரத்தையே சிதைத்தது. அப்பாவி உயிர்கள் பலியாயின. “இந்து தீவிரவாதிகள்” வட மாநிலங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி அதில் இஸ்லாமியர்களை சிக்க வைத்ததையும், இரகசிய உளவுத் துறையே சில தாக்குதல்களுக்கு திட்டமிட்டு – இஸ்லாமியர்களை பலிகடாவாக்குவதையும் – சில இஸ்லாமிய இளைஞர்கள் இதற்கு எதிர்வினையாற்ற குண்டுகளை வீசத் தொடங்கியதையும் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

மதங்களைப் படைத்ததாகக் கூறப்படும் கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்திருப்பாரேயானால், இப்படி மதங்களின் பெயரால் மனிதப் படுகொலைகள் நடப்பதை “அவர்” அனுமதிப்பாரா? என்ற கேள்விக்கு மத வாதிகளிடமிருந்து என்ன பதில் வரப் போகிறது? சுவாதியின் பாட்டி கடவுளை நோக்கி எழுப்பும் கேள்வி அவருக்கு “கடவுளின்” நேர்மையையே சந்தேகிக்க வைக்கிறது. இந்த ஆற்றாமையை அறிவியல் பார்வையில் விரிவுபடுத்தி சிந்திக்க அந்த மூதாட்டியால் இயலாமல் போகலாம். ஆனால், மனிதத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நோக்கிக் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறது.  அது –

“கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இந்த கொடூரங்கள் நடக்குமா?”

பெரியார் முழக்கம் 08052014 இதழ்

You may also like...