சென்னை ‘தூர்தர்ஷன்’ அலுவலகம் முற்றுகை, கழகத்தினர் கைது!

இந்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள ‘தூர்தர்ஷன்’ தொலைக்காட்சி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தசரா விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் உரையை நேரடியாக ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பியது. அக்டோபர் 3ஆம் தேதி இந்த செய்தி வந்தவுடன் அடுத்த நாள் அக்.4 ஆம் தேதியே சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், சென்னை தூர்தர்ஷன் முன் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. தூர்தர்ஷன் வாயிலிலேயே இந்தப் போராட்டம் நடந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். தூர்தர்ஷன் வரலாற்றிலேயே ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
‘தூர்தர்ஷன்’ – ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இதற்கான தலைமை இயக்குனர் மத்திய அமைச்சரவை யால் நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒளிபரப்பை பிரதமர் மோடியும் தொலைக்காட்சி இயக்குனரும் நியாயப்படுத்தியுள்ளனர். “சமூகத்துக்கு நல்ல செய்திகளை தந்ததால் ஒளிபரப்பப்பட்டது” என்று மோடி கூறுகிறார். நேரடி ஒளிபரப்புக்கு சென்ற தூர்தர்ஷன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எந்தக் கருத்துகளைப் பேசப் போகிறார், அது சமூகத்துக்கு நன்மையானதா? தீமையானதா என்பதை முன்கூட்டியே எப்படி தெரிந்து கொண்டது? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அதேபோல் சமூகத்துக்கு நன்மை தரும் கருத்துகளை நக்சல்பாரிகளோ அல்லது இஸ்லாமியர் அமைப்புகளோ பேசினால், அதை நேரடியாக ஒளிபரப்புவார்களா? இந்தக் கேள்விகளுடன் கழகம் போராட்டத்துக்கு தயாரானது.
4.10.2014 மாலை 4 மணியளவில் தூர்தர்ஷன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. தேசிய முக்கியத்துவம் நிறைந்த குடியரசுத் தலைவர், பிரதமர் உரைகள் மற்றும் குடியரசு, சுதந்திர நாள் விழாக்களை மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்து வரும் தூர்தர்சன், அதற்கு இணையாக ஆர்.எஸ்,எஸ். தலைவர் உரையை ஒளிபரப்புவது அரசின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானதாகும். இந்தியாவில் மூன்றுமுறை தடை செய்யப்பட்ட அரசியல் சட்ட அங்கீகாரம் இல்லாத அமைப்பின் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்வது அரசு எந்திரத்தை மதவாத அரசியலுக்கு முறை கேடாகப் பயன்படுத்துவதாகும் என்று செய்தியாளர்களிடம் விடுதலை இராசேந்திரன் விளக்கினார்.
மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு தொலைக்காட்சியை ஆர்.எஸ்.எஸ். தொலைக்காட்சியாக மாற்றுவதை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா உமாபதி, வழக்கறிஞர் துரை அருண் மற்றும் இளந் தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றனர். 60பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 09102014 இதழ்

 

You may also like...

Leave a Reply