பெண்கள் – பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் வித்தோபா கோயில் வழக்கில் பார்ப்பனர் களல்லாத தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உள்பட அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
“பார்ப்பனர்” மட்டுமே கோயில் அர்ச்சகராகலாம் என்ற ஆதிக்கத்திற்கு உச்சநீதிமன்றம் மரண அடி கொடுத்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.
மகாராட்டிர மாநிலத்தில் சோலாப்பூரை அடுத்த பந்தர்பூரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தோபா கோயில் உள்ளது. புனித நகராகக் கூறப்படும் இந்நகரில் உள்ள கோயிலின் வரலாற்றிலேயே முதன்முதலாக பூசை செய்வதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு அர்ச்சகராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பழமையான ஆண் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
வித்தல் (உ)ருக்குமணி கோயில் அறக்கட்டளையின் தலைவர் அன்னா டாங்கே இது குறித்து கூறும்போது இரு நூற்றாண்டுகளாக பார்ப்பனர் மட்டுமே கோயில் பூசை, சடங்குகள் செய்யப்பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சியாக கோயில் அறக்கட்டளை மூலமாகவே பழைய முறை உடைத்து நொறுக்கப் பட்டுள்ளது.
நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோயில் பூசைகள், சடங்குகள் ஆகியவற்றை அனைத்துச் சாதியினரும், குறிப்பாக பார்ப்பனரல்லாதோர் செய்ய வேண்மென்று விரும்பினோம். அதற்கேற்ப உச்சநீதிமன்றத் தீர்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
40 ஆண்டுகாலமாக நடந்த வழக்கு இது. பாத்துவே, உத்பத்து ஆகிய பார்ப்பன குடும்பங்களின் ஏகபோக உரிமையை கடந்த ஜனவரியில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதன் தொடர்ச்சியாக, இப்பொழுது தாழ்த்தப்பட்ட வர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் பெண்களும் அர்ச்சகராகலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 22052014 இதழ்