‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில்
28-09-2014 அன்று ஒளிபரப்பான ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பதில்கள். பேட்டி கண்டவர் தலைமை செய்தியாளர் மு. குணசேகரன்.
கேள்வி : செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற ஒரு விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள்; மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது, விஞ்ஞான வளர்ச்சியில் மேலை நாடுகளோடு போட்டிப் போட்டு கொண்டு இந்தியா வளர்கிறது என்று விஞ்ஞானிகளைப் பாராட்டி பேசி வருகிறார்கள்; செவ்வாய் தோஷம் என்பதை நம்புபவர்களும் இந்தியாவில் தான் அதிகம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்; விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிற அளவிற்கு, விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கும் தன்மை மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?
பதில் : இல்லை என்பதைத்தான் இவைகளெல்லாம் வெளிப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் அறிவியல் அறிவுக்கு ஒன்றும் குறை வில்லை. ஆனால் அறிவியல் மனப்பான்மை இல்லை என்பது தான் நமக்குள்ள குறை. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடாமல், சோதிடம் என்ற போலி அறிவியலால் ஏற்கனவே இராகு, கேது என்ற இரண்டு கோள்கள் இல்லை என்று சொல்லியாகி விட்டது; அதன் பின்னரும் சோதிடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சூரியன் என்பது ஒரு கோள் (கிரகம்) அல்ல; அது ஒரு நட்சத்திரம் என்பதும் அறிவியல் பூர்வமாக தெரியும், ஆனால் இன்னும் சூரியனை ஒரு கிரகமாகவே வைத்துக் கொண்டு சோதிடம் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். சந்திரன் என்பது ஒரு கோள் அல்ல; அது ஒரு துணைக் கோள் என்பதும் தெரியும், ஆனாலும் கோளாக வைத்துக்கொண்டே சோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல சோதிடம் என்பது முற்றும் முழுதாக, பூமி நடுவில் இருப்பதாகவும் சூரியன் உள்ளிட்ட கோள்கள் பூமியை சுற்றி வருவதாகவும் ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால் ஒரு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே இது பொய் என்று மாற்றி, ஜியோ செண்ட்ரிக் (Geocentric) முறையில் பூமியை மையமாக வைத்து சுழற்சி முறையைக் கணக் கிட்டதற்கு மாறாக, புவிமையக் கோட்பாட்டுக்கு மாறாக, இப்போது ஹீலியோ செண்ட்ரிக் (Heliocentric) என்று சொல்லி சூரியனை மையமாக வைத்து ஞாயிறு மையக் கோட்பாடு வந்து விட்டது. கோபர் நிக்கஸ் காலத்தில் வந்து இவ்வளவு காலம் ஆகிவிட்டது. இது இங்கு இன்னும் வந்து சேரவில்லை. சாதாரண மக்களிடம் மட்டுமல்ல; செவ்வாய் கோளுக்கு மங்கள்யான் அனுப்பியவர்கள் கூட சோதிடத்தை நம்பி, நல்ல நாள் பார்த்து புறப்படும் நாளை வைப்பதும், அதன் தலைவர் திருப்பதி உண்டியலில் போய் காணிக்கை போடுவதும் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்பது, அறிவியல் அறிவு இருக்கிறதே தவிர அறிவியல் மனப்பான்மை வளரவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. அறிவியல் அறிவு எப்போதும் நாட்டை முன்னேற்றி விடாது. அறிவியல் மனப்பான்மை யோடு சிந்தித்தாலும் செயல்பட்டாலும் தான், சமூகத்தை முன்நகர்த்தி செல்ல முடியும். அறிவியல் மனப்பான்மை தேவையானது; ஆனால் இப்போது அது நம்மிடையே இல்லை என்பது உண்மை.
கேள்வி : பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள்; அவர் இறந்து (1973-இல்) இத்தனை ஆண்டு காலம் ஆகிவிட்டது. இன்றைக்கு பெரியாரின் அடிப்படை கொள்கை களான ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை எதிர்ப்பு இது மாதிரியான விசயங்களில் தமிழ் சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? இந்த கொள்கைகள் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது?
பதில்:பெரும்பாலும் கொள்கைகளை முன்னெடுத்து செல்வது இயக்கங்கள்தான்; கட்சிகள் அல்ல. கட்சியை தலைமை ஏற்று நடத்துபவர்களும் அரசியல் தெரிந்தவர்களாக – கொள்கைகள் புரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் நியதி, பொதுவான நியதி. ஆனால் இங்கு தமிழ்நாட்டைப் பொருத்தவரை அல்லது இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் மெல்ல மெல்ல அறிவியலை ஏற்றுக்கொண்டு விட்டார் கள். ஜாதியைப் பற்றிய பார்வை, நேரடியாக விவாதிக்கவில்லை என்றாலும் ஜாதியைக் கடந்து பலவற்றை சிந்திக்கிறார்கள் செய்கிறார்கள்; அதில் தடை ஏதும் இல்லை. ஆனால் கட்சியின் தலைவராக இருப்பவர்கள் ஜாதியை, தங்களுக்கு ஏதாவது பயன்படுத்திக் கொள்ள முடியுமா, அல்லது மத நம்பிக்கையை மக்களிடையே தூண்டிவிட்டு அதனால் ஆதாயம் அடையலாமா என்பதை செய்து கொண்டே வருகிறார்கள். ஆக ஜாதி உணர்வும், மத உணர்வும் மங்காமல் இருப்பது போல தெரியும்; ஆனால் கல்லூரி களிலோ, பணியாற்றும் இடங்களிலோ சென்று பார்த்தாலே தெரியும், அவர்கள் சாதரணமாக ஜாதியைக் கடந்து செல்கிறார்கள்; மதங்களைக் கடந்து திருமணங்கள் நடக்கின்றன. முன்பெல் லாம் இசுலாமியர்களை தீண்டதகாதவர்களைப் போல் கருதி ஒதுங்கியிருந்த காலங்கள் உண்டு, ஆனால் இப்போது இயல்பாக அவர்களின் நிகழ்வுகளுக்கு போகிறார்கள் – வருகிறார்கள். பொது வாழ்க்கையில் முன்னிலையில் இருப்ப வர்கள் தான் ஜாதி – மத நம்பிக்கைகளைத் தூண்டு கிறார்கள் அல்லது குறையாமல் பார்த்துக் கொள் கிறார்கள் என்று சொல்லலாம். சாதராண மக்களுக்கு அந்த நம்பிக்கையின் அளவு குறைந் திருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
கேள்வி : ஜாதி மறுப்பு என்ற ஒன்றை, ஜாதிகளைக் கடந்து திருமணம் செய்து கொள்வது – திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது என்பதில் மிகப் பெரிய வெற்றியை நாம் (தமிழ்நாடு) பெற்றுவிட்டோம் என்று சொல்ல முடியாது. தேசிய அளவிலான ஒரு புள்ளி விவரத்தை எடுத்துக்கொண்டாலும், பஞ்சாப், கேரளத்தை விட மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் தமிழ்நாட்டில் கலப்பு திருமணங்கள் நடைபெறு கின்றன. தலித்துக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மான கலப்புத் திருமணங்கள் நடைபெறும் போது மிகப்பெரிய எதிர்ப்புகள் வருவதையும், அதனால் சில மரணங்கள் ஏற்படுவதையும் கூட பார்க்கின் றோம். இது நீங்கள் சொல்வதற்கு மாறுபட்டதாக இருக்கிறதே! பெரியார் கொள்கையின் தோல்வியாக இதை பார்க்க முடியாதா?
பதில் : அப்படி பார்க்க முடியாது. முதலில் அந்த புள்ளிவிவரங்கள் சரியானதா என்பதில் சந்தேகம் உள்ளது. ஜாதி கடந்த திருமணங்கள் நடக்கின்றன; அவற்றைத் தடுப்பதற்கான முயற்சியை மூத்தவர்கள், பெற்றோர்கள் எடுக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் ஜாதி கடந்த சிந்தனை வந்துவிட்டது. ஜாதி கடந்து திருமணங்களை இயல்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தனைச் சிக்கல்கள் வந்த பின்னாலும், தருமபுரியில் ஏதோ ஜாதிக் கலவரம் என்று சொல்கிறோம், தருமபுரியில் பல திருமணங்கள் நடந்துவிட்டன. தலித்துகளுக்கும் பிற்படுத்தப் பட்டவர்களுக்குமான திருமணங்கள் அதற்குப் பின்னால் ஏராளமாக நடந்திருக்கின்றன; ஆனால் இவ்வளவு கவனத்தை ஈர்க்கவில்லை. ஏனென்றால் எந்த அரசியல் கட்சியும் போய் அதில் தலையிட வில்லை. ஆக இளைஞர்கள் தாண்டிப் போக முயற்சிக்கிறார்கள் – போய் கொண்டிருக்கிறார்கள். முதியவர்களும் சில சுயநலவாதிகளும் அதை தடுப்பதற்கான முயற்சிதான் நமக்கு வெளியே பெரிதாய் தெரிகிறது என்பது தான் உண்மையே தவிர, ஜாதியத்திற்கு எதிரான கருத்துக்கள் இளைஞர்களிடம் இருக்கிறது என்பது தான் உண்மை.
கேள்வி : படிப்பு வந்தால் ஜாதிப் பற்று போய்விடும் – ஜாதி உணர்ச்சி போய் விடும் என்று சொன்ன காலம் உண்டு; படித்தவர்கள் நிறைந்த சமூகமாக இன்றைய தமிழ்ச் சமூகம் மாறியிருக்கிறது; ஆனால் இவ்வளவு பெரிய வளர்ச்சி வந்தும், இவ்வளவு பேர் வேலைகளுக்குச் சென்று, உயர் கல்வி பயின்ற பிறகும், சமூகத்தில் ஜாதியின் இறுக்கம்- பிடிப்பு – பற்று என்ற ஒன்று மீண்டும் மீண்டும் ஏதேனும் ஒரு வடிவத்தில் உருவெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது; இந்தப் பிடிப்பு குறைந்த மாதிரி தெரியவில்லையே?
பதில் : பெரியார் காலத்தையும், இந்த காலத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. பெரியார் காலம் என்பது போராட்டக் காலம்; அவர் ஒவ்வொரு அடிமைத்தனத்தில் இருந்தும் இந்த சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று போராடினார். பெரியார் காலத்தில் முற்றும் முழுதான இந்து சமுதாயத்தில், பார்ப்பனர்களைத் தவிர அனைவரும் அடிமைத்தனத்தில் இருந்தார்கள்; எனவே பெரியாரோடு இணைந்து நின்று அவர்களும் போராடினார்கள். இப்பொழுது இருக்கும் காலம் அறுவடை காலம். பெரியாரின் போராட்டங்களால் விளைந்த விளைவுகளை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் பெற்று தந்த இட ஒதுக்கீட்டின் காரணமாகவோ, அல்லது பல காரணங்களால், உதாரணமாக கிராமத்தில் இருந்த பார்ப்பனர்கள் நகரம் நோக்கி சென்று விட் டார்கள்; அந்த இடத்தில் போய் பிற்படுத்தப் பட்டவர்கள் இப்போது உட்கார்ந்து கொண்டு விட்டார்கள். ஆனால் அவர்களுடைய (பார்ப்பனர்களுடைய) ஆதிக்கம் என்பது மனதளவில் – உளவியலாக இருந்தது; இவர்கள் (பிற்படுத்தப்பட்டவர்கள்) தங்களுடைய ஆள் பலத்தையும் கொண்டு மசில் பவரையும் வைத்துக்கொண்டு இப்போது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆக தாங்கள் இருந்த நிலையை மறந்து விட்டார்கள் என்பது ஒன்று, அல்லது மருமகள் மாமியாராக ஆனால் நடந்து கொள்வதைப் போல் தான், இப்போது பிற்படுத்தப்பட்டவர்கள் போக்கு இருக்கிறது என்பது உண்மைதான். தொடர்ந்து இயக்கங்கள் எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. தங்கள் கட்சி நலனுக்காக சுயநல சக்திகள்தான் விடாமல் தூண்டிவிட்டு கொண்டிருக்கிறார்கள். வட மாவட்டங்களில் இல்லாமல் இருந்தது; தென் மாவட்டங்களில் மட்டும் இருந்தது மாறி இப்போது வட மாவட்டங்களிலும் பரவுகிறது. ஒரு சில சுயநல சக்திகள் தங்கள் வளர்ச்சிக்காக செய்கிற ஒரு கேவலமான முயற்சியாகத் தான், நான் இதைப் பார்க்கின்றேன்.
கேள்வி : 69 சதவீத இட ஒதுக்கீடு என்று வருகிறபோது, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கின்றது; எந்த அடிப்படையில் இந்த 69 சதவீதத்தை நீங்கள் நிர்ணயித்தீர்கள்? சமூக ரீதியாக- கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கணக்கீடு ஏதேனும் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்கும் போது, சில இயக்கங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரியாக நடத்தி அதற்கான தரவுகளைத் தயார்படுத்த வேண்டும் என்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களா?
பதில் : தேவை என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. காரணம், நமக்குக் கடைசியாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடந்தது 1931 ஆம் ஆண்டில்தான். 1941 இல் இரண்டாம் உலகப் போர் நடந்தது; எனவே அப்போது கணக்கெடுக்க முடியவில்லை. 1951 ஆம் ஆண்டில் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது; அப்போது இருந்த அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் அப்போதும் அரசிடம் இல்லை. எனவேதான் அரசியல் சட்டம் 340 ஆவது பிரிவு என்ற ஒரு பிரிவு அவர்களுக்காக ஒரு திட்டத்தை தீட்டவேண்டும் – ஆணையம் அமைக்கவேண்டும் என்று சொல்லியிருந்தது. அது ஒன்றரை ஆண்டுகள் கழித்தும் அமைக்கப்படாதது, அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து விலகியதற்கான நான்கு காரணங்களில் ஒன்று. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஆணையம் அமைக்கப்படவில்லை, அவர்களின் மேம்பாட்டிற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும், பதவி விலகக் காரணமாகக் காட்டிய அம்பேத்கரைத்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவராக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் பதவி விலகிய பிறகுதான் காகாகலேல்கர் குழு என்ற குழுவை அமைத்தார்கள். அவர் குழு ஆராய்ந்து அறிக்கைக் கொடுத்தது, சாதகமானதாக இருந்தாலும் கூட, அந்தக் குழுவின் தலைவர், தனக்கு இதில் உடன்பாடில்லை என்று தனிக் கடிதமாக எழுதினார்; அதனால் நின்று போய்விட்டது. என்றாலும், அக்குழு கொடுத்த பரிந்துரைகளில் ஒன்று, ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படவேண்டும் என்பது. பரிந்துரை இருக்கிறது, ஏனென்றால் அது தேவையாக இருக்கிறது. பின்னால் இவ்வளவு வழக்குகள் நடந்து, மண்டல் குழுவுக்காக இந்திரா சகானி வழக்கில், ஒரு அரசியல் அமர்வு உட்கார்ந்த பின்னாலும் கூட, அதற்கு பின்னால் போன ஒரு வழக்கின் போது இரண்டு நீதிபதிகள் உட்கார்ந்துகொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை; எந்த அடிப்படையில் செய்தீர்கள் என்று சொல்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்கிறார்கள். ஒன்பது நீதிபதிகள் அமர்ந்து கொடுத்த தீர்ப்பைக் கூட இரண்டு நீதிபதிகள் அமர்வு கேள்விக்குள்ளாக்குகிறது! இந்த நிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இருப்பது என்பதுதான், நாம் குறிப்பிட்ட வகுப்பினர்களுக்கு என்ன செய்ய முடியும், அவர்கள் வளர்ந்திருக்கிறார்களா இல்லையா என்பதை ஆய்வு செய்து, அவ்வப்போது வளர்ந்த பிரிவினரை நீக்குவதற்கும், வளராத பிரிவினரைப் புதிதாக பட்டியலில் சேர்ப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும். எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்பது தான் எங்கள் கருத்து.
கேள்வி : உயர்ந்த சமூக நோக்கில் இருந்து இதைச் சொல்வதாகக் கருதுகிறேன்; பிற்படுத்தப்பட்ட தலைவர்களில் பெரும்பாலானோர் ‘நாங்கள் ஆண்ட பரம்பரை மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவர்கள் ’ என்ற பெருமை பேசுபவர்களாக, அதன் மூலம் அணி திரட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள்; அந்த ஆண்ட பரம்பரை என்ற ஒரு வாதம், அதன் மூலமாக எளிய பிரிவினரை ஒடுக்க முயற்சி செய்வது, முதலியவற்றிற்கு இது வழி வகுத்து விடாதா ?
பதில்: நீங்கள் சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது. இட ஒதுக்கீட்டைப் பற்றி பேசும் இரண்டு பேரை (இரண்டு பிரிவினரை) பார்த்தால் நமக்கு அச்சமாக இருக்கிறது. காலம் காலமாக இட ஒதுக்கீட்டை எதிர்த்து வந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இப்போது இட ஒதுக்கீட்டை வரவேற்று இருக்கிறார்கள். 1925 இல் தொடங்கி ஏறத்தாழ ஒரு 90 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் முதன் முறையாக, இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாக மோகன் பகவத் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவுதான் இந்து மதத்தின் அழுத்தம் இருந்தாலும் கூட, பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தவிர்க்க முடியாத ஆற்றலாக வளர்ந்துவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் காரர்கள், இவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொண்டு, பிற மதத்தினர் என்று அவர்கள் கருதுபவர்கள் மீது இவர்களை ஏவி விடுவதற்காக, இட ஒதுக்கீட்டை அவர்கள் ஆதரிப்பதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அதே போல இட ஒதுக்கீட்டைப் பேசும் இன்னொரு பிரிவினர் இட ஒதுக்கீட்டால் வளர்ந்தவர்கள். ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜாதியின் காரணமாகப் பாதிக்கப்பட்டு, ஜாதிக்கு ஆதாரமாக இருக்கும் வேதங்களில் சூத்திரர்களாக இழிவாக பேசப் பட்டு, பெரியார் இயக்கம் போன்ற ஜாதி மறுப்பு இயக்கங்களால் விடுவிக்கப்பட்டு வந்தவர்கள் தான் இட ஒதுக்கீட்டைப் பெற்று மேலே வந்த இவர்கள் தான், அடுத்து மேலே வரமுயற்சிக்கும் இன்னொரு பிரிவினரை, அவர்கள் வந்து விடக் கூடாது என்று செயல்படுகிற சுயநலப் போக்கை நாம் பார்க்கிறோம். அவர்கள் சொல்லுகின்ற சுயநலப் போக்கு கூட வேலை வாய்ப்புக்கோ, கல்விக்கோ இல்லை. தாங்கள் அரசில் அமர வேண்டும்; அரசில் அமர்வதற்கு, ஒரு பெரும் இடத்தை பிடிப்பதற்காக வாவது ஏதாவது செய்து, ஏதாவது பேசி, புரியாமல் இருக்கிற பாமர மக்கள் மீது தவறான கருத்துக்களை செலுத்தியாவது, தங்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஏதோ ஒரு காலத்தில் தங்களால் விளைந்த நன்மைகளை நினைத்து நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிற அரசியல் சக்திகள் இருக்கத்தான் செய்கின்றன. கணக்கெடுப்பு எடுத்தால் இவர்கள் சொல்லுகிற எண்ணிக்கை இருக்காது என்று நாம் உறுதியாக சொல்லலாம். ஒரு முறை எம்.ஜி.ஆர். கூட, மக்கள் தொகை எண்ணிக்கையைக் கேட்டபோது, அனைத்து ஜாதியினரின் மக்கள் தொகையைக் கூட்டிப் பார்க்கும் போது, தமிழ்நாட்டு மக்கள் தொகையை போல் இரண்டரை மடங்கு வந்தது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பார்ப்பனர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். அதற்கு பின்னால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிற பார்ப்பன ரல்லாத உயர் ஜாதி யினர்தான் ஆதிக்கத் தில் இருந்தனர். இப் போது ஒப்பீட்டு அளவில் தாழ்த்தப் பட்ட மக்களின் அள வுக்கு எண்ணிக்கை யில் இல்லாத ஜாதி கள்தான் அந்ததந்த பகுதியில் ஆதிக்கம் செய்கிறார்கள். எனவே எண்ணிக்கை என்பது காரணம் அல்ல; அவர்கள் மூளையில் ஏற்றப் பட்டுள்ள சிந்தனைப் போக்குதான் காரணம். ஆண்ட பரம்பரை ஆண்ட பரம்பரை என்று சொல்லுகின்றீர்கள், எந்தப் பரம்பரையைச் சொன்னாலும், இந்து சட்டம் சொல்லுகின்றது… ‘தென்னிந்தியாவை பொறுத்தவரை பார்ப் பனர்கள்-சூத்திரர்கள் இரண்டே பேர் தான், துடைப்பத்திற்கு பட்டுக் குஞ்சம் என்பது போல இவர்கள் வேண்டு மானால் பல பெயர்களைச் சூட்டிக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் நம்பிக்கொண்டிருக்கிற இந்து மதம், எதை வைத்துக் கொண்டு தங்களை உயர்ஜாதியாக சொல்லிக் கொள்கிறார்களோ அந்த இந்து மதம், இவர்களை இழிவாகத்தான் வைத்திருக்கிறது. அரசியல் சட்டப்படி நம் நாட்டின் இந்து சட்டப்படி அப்படித்தான் இருக்கிறார்கள்; அதனால் தான் அர்ச்சகர் ஆக முடியவில்லை. ஊரில் இவ்வளவு ஆதிக்கம் பேசுபவர்கள் கோவில் பக்கம் போய்ப் பார்க்கட்டும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இவர்களுக்கும் சில அடி தூர வேறுபாடு தானே தவிர இவர்களும் தீண்டத் தகாதவர்கள்தான். அதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கும், புரியவிடாமல் மக்களை வைத்திருப்பதற்கும் சுயநல அரசியல் சக்திகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி : உங்களைப் பொருத்தவரையிலும் நீங்கள் நாத்திகர்கள்; எந்த மதத்தையும் சாராதவர்கள்; மதச்சார்பின்மை வாதிகள் என்று சொல்கிறீர்கள்; மதச் சார்பின்மை என்ற சொல் மாதிரியே, போலி மதச் சார்பின்மை என்ற சொல்லை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி உள்ளிட்ட அமைப்புகள் சொல் கிறார்கள்; குறிப்பாக வாக்கு வங்கி அரசியல் செய்வதாக காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், தி.மு.க, அண்ணா தி.மு.க, போன்ற கட்சிகளைப் பார்த்து, போலி மதச் சார்பின்மை பேசுகிறீர்கள், சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் பேசுவீர்கள்; ஆனால் இந்துக்களுக்கு பிரச்சனை வந்தால் பேசமாட்டீர்கள் என்று சொல்கிறார்கள்; மதச்சார்பின்மையில் உண்மையான / போலியான மதச் சார்பின்மை என்று இருக்கின்றதா?
பதில் : முதலில் மதச்சார்பின்மை என்பது நம் முடைய கொள்கை அல்ல; அது வெளிநாட்டில் இருந்து வந்த கொள்கை; செக்யூரிலிசம் என்பது வெளிநாட்டில் இருந்து வந்தது. செக்யூரிலிசம் என்ற கொள்கையை முன்கொண்டு வந்தவர்கள் அங்கு வைத்த முழக்கமே ‘Separate the State and Church’ அரசையும் மதத்தையும் பிரிக்க வேண்டும்; எனவே அரசில் மதம் தலையிடக் கூடாது என்றுதான் கொண்டுவந்தார்கள். செழுமைப்படுத்தப்பட்டபோது, ஒவ்வொன்றாக அரசு என்பதில் மதத்தின் தலையீடு கூடாது; கல்வியில் மதம் திணிக்கப்படக் கூடாது; ஒழுக்கம் என்பதில் மதம் வேண்டாம் என்ற மூன்றை வைத்திருந்தார்கள். மதச் சார்பின்மையை இங்கு பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அவரவர் மதத்தை பின்பற்றுவதை யாரும் வேண்டாம் என்று சொல்வதில்லை; பொது இடங்களில் மதத்தைப் திணிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறார்கள். இப்போது பி.ஜே.பி. சொல்லுவதாக சொல்கிறீர்கள், 1993 ஆம் ஆண்டு இதே பி.ஜே.பி. அரசின் உள்துறையின் சார்பாக ஒரு குழுவை அமைத்தார்கள்; நாட்டில் அடிக்கடி ஏற்படும் மதக் கலவரங்களுக்கு என்ன காரணம் என்பதை ஆய்வதற்கு. அப்படி ஆய்ந்து அவர்கள் கொடுத்த அறிக்கையில், அரசு அலுவலகங்களில் பொது இடங்களில் மத வாசகங்களை எழுதுவதும், மத வழிபாடுகளைச் செய்வதும் கோவில்களை எழுப்புவதும்தான் காரணமாக இருக்கிறது என்று சொன்னதை ஏற்று, அனைத்து மாநில அரசுகளுக்கும் பா.ஜ.க ஆட்சிக் காலத்தில்தான் ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. எந்த அரசு அலுவலகங்களிலும் மத வாசகங்கள் எழுதப்படுவதோ, கோவில்களைப் புதுப்பிப்பதோ – விரிவாக்குவதோ – புதிதாக கட்டு வதோ கூடாது, மதவழிபாடுகளைச் செய்வதோ கூடாது என்பதைச் சுற்றறிக்கையாக அனுப் பினார்கள். அப்போது தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி; தலைமைச் செயலாளராக இருந்த ஹரிபாஸ்கர்தான், இதை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 1994 ஆம் ஆண்டு அனுப்பி வைத்தார். போலி மதச் சார்பின்மை என்று சொல்லுகின்ற இவர்கள் ஏன் அப்படிப்பட்ட சுற்றறிக்கையைத் தங்கள் உள்துறை மூலம் அனுப்பவேண்டும்? ஆக இங்கு அரசியலுக்காக அவர்கள்தான் பேசுகிறார்களே தவிர நாம் பேசவில்லை. மதச் சார்பின்மை என்று பேசுவது, நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானா லும் பின்பற்றுங்கள், பொது இடங்களில் – அரசு அலுவலகங்களில் கொண்டு வந்து விட வேண்டாம் என்பது தான் நம்முடைய கருத்தாக இருக்கிறதே தவிர, வேறொன்றும் இல்லை. இதில் போலி என்பதோ, உண்மை என்பதோ இல்லை; மதத்தைச் சார்ந்து பொது நிகழ்ச்சிகள் செய்யா தீர்கள், உங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளுங்கள் என்பது தான்.
கேள்வி : அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை என்று அரசியல் சட்டம் சொல்கிறது; அறிவியல் மனபான்மை வளர்க்கிறோம் என்ற பெயரில் நீங்கள் செய்யும் நாத்திகப் பிரச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது; அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தை இழித்தும், பழித்தும் பேசுகிறீர்கள்; அவர்கள் வணங்கும் தெய்வத்தைக் குறை சொல்லி கொச்சைப்படுத்தி பேசுகிறீர்கள் என்ற விமர்சனத்தை பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் சொல்கிறார்களே?
பதில் : ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்; பெரியார் இயக்கத்தைப் பொருத்த வரை அது பகுத்தறிவுக்கு மட்டுமான இயக்கம் அல்ல; அது இன இழிவு ஒழிப்பு இயக்கம். இந்த நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் மக்களாகிய உழைக்கும் மக்களை, இழி ஜாதியாக, உரிமை அற்றவர்களாக வைத்திருப்பதை மாற்று வதற்கு வந்த இயக்கமே தவிர, அது பகுத்தறிவுக்காக மட்டும் வந்த இயக்கம் அல்ல. ஜாதி ஒழிப்பு முயற்சியில் தடையாக இருந்த போது அந்த இடத்துக்குப் போனார்கள். ஒன்று அப்படி சொல்லவேண்டும், இன்னொன்று அறிவியல் மனப்பான்மைக்காக, அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாத கடவுளை எதிர்க்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, சில எடுத்துக்காட்டுகளை உங்களிடம் சொல்லியாக வேண்டும். பல நாத்திகத் தலைவர்கள் இருந்தார்கள்; அமெரிக்காவில் இங்கர்சால் இருந்தார், இங்கிலாந்தில் பிராட்லா இருந்தார், பெர்ட்ரண்ட் ரசல் இருந்தார், இங்கர்சால் கிறிஸ்து மதத்தை எதிர்த்து தான் பரப்புரை செய்தார் ஏனென்றால் அந்த நாட்டில் பெரும்பான்மை மதம் அதுதான். பெர்ட்ரண்ட் ரசல் ‘நான் ஏன் கிறிஸ்துவன் அல்ல’ என்ற நூலைத் தான் எழுதினார்; நான் ஏன் இந்துவல்ல என்றெல்லாம் எழுதவில்லை. தஸ்லிமா நஸ்ரின் குரான் மீது, அல்லா மீது, இஸ்லாத்தின் மீதான கேள்விகளைத்தான் வைக்கிறாரே தவிர, அவர் இந்து கடவுள் மீதான கேள்விகளை முன்வைக்க வில்லை. எனவே ஆங்காங்கு பெரும்பான்மையாக இருக்கும் மதம் எதுவோ அதைத்தான் யாரும் பேசமுடியும் என்பது இயல்பான ஒன்று. இது பகுத்தறிவு பார்வை. இன இழிவு ஒழிப்பு என்று பார்க்கிறபோது, நீங்கள் சொல்லுகின்ற மற்ற மதங்கள் கிறிஸ்துவமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும் ஏற்றத் தாழ்வுகளை தங்கள் கொள்கையில் கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் – இந்தியாவில் வந்துவிட்ட பின்னால் கிறிஸ்துவத்துக்குள் ஜாதி வந்து விட்டது. வட இந்தியாவில் இஸ்லாத்துக்குள்ளும் ஜாதி இருக்கிறது; அங்கு தலித் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்கள் அது ஒருபுறம் இருக்கிறது. ஆனால் கொள்கை அளவில் அம்மதங்கள் வைத்திருக்கவில்லை. அப்படியே வைத்திருந்தாலும் அதைச் சொல்லி யாரும் இழிவுபடுத்தப்படவில்லை. இந்து மதம் மட்டும் தான் பெரும்பான்மை மக்களாகிய எங்களை அல்லது நம்மை சூத்திரர்கள் என்கிறது; பஞ்சமர் என்று வைத்திருக்கிறது. எனவே இதை உடைக்கவேண்டுமானால், இதற்குக் காரணமாக காட்டப்படுகின்ற வேதங்கள் மீது, புராணங்கள் மீது, சாஸ்திரங்கள் மீது கேள்வி வைக்கின்றோம். அந்த சாஸ்திரங்கள் கடவுளால் உண்டாக்கப் பட்டது என்று சொல்லுகிற போதுதான் அந்தக் கடவுளின் யோக்கியதை என்ன? இந்தக் கடவுள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்று பேச வேண்டியிருகிறது. எனவே நாங்கள் இந்து மதக் கடவுள்களை விமர்சிப்பது என்பது பகுத்தறிவு பார்வையில் பார்த்தால் பெரும் பான்மை மதமாக இருப்பதை எதிர்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் பெரியாரின் இயக்கம் இன இழிவு ஒழிப்பு இயக்கம் என்பதால் எங்களை இழிவுபடுத்துகிற, எங்களை ஜாதி அடிப்படையில் கேவலமானவர் களாக உரிமை அற்றவர்களாக, கடவுள் நம்பிக்கை இருந்தாலும், சமய வழிபாட்டுப் பயிற்சி இருந்தாலும் கூட இன்றளவும் கருவறைக்குள் நுழைய முடியாதவர்களாக வைத்திருப்பதற்கு எது காரணம்? எனவே இதையெல்லாம் கேள்விக் குள்ளாக்குகிறோம். பகுத்தறிவு பார்வையில் எல்லா மதங்களையும்தான் நாங்கள் புறக்கணிக் கிறோம். கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்ற பெரியார் குறிப்பிட்டது குறிப்பிட்ட கடவுளை தவிர்த்துவிட்டெல்லாம் சொல்ல வில்லை. ஆனால் பெரியார் இயக்கவாதிகளான நாங்கள், இன இழிவு ஒழிப்பு என்று பார்க்கிற போது, கிறிஸ்துவ மதத்தில் மத அடிப்படையில் இல்லை, நடைமுறையில் இருக்கின்றது; அதை நாங்கள் எதிர்க்கின்றோம். இஸ்லாம் மதத்தில் நடைமுறை அளவில் கூட தமிழ்நாட்டில் இல்லை. எனவே தான் பெரியார்… “இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என்றுகூட சொன்னார். பெரியார் எல்லோரையும் முஸ்லீமாக மாற சொல்லிவிட்டார் என்று பல பேர் சொல்லுகின்றார்கள். இது பற்றிய கேள்வி வந்த போது பெரியார் சொன்னார்… “நான் சொல்வது தீண்டாமை ஒழியாதா என்ற ஏக்கத்தோடு இருப்பவர்க்கு சொல்லும் அறிவுரையே தவிர பகுத்தறிவுவாதிக்கோ, சுயமரியாதைக் காரனுக்கோ, பெண்ணுரிமை வாதிக்கோ அல்ல” என்று.
கேள்வி : பக்ரீத்துக்கும், கிறிஸ்துமஸ்துக்கும் சம்பிரதாய வாழ்த்து சொல்வது என்பது கூட பிரச்சனை ஆவதில்லை; ஆனால் தீபாவளிக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்வது பிரச்சனை ஆகிறது; தி.மு.க தலைவர் கருணாநிதி தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை; அதே கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் அவர்களின் ஃபேஸ்புக்கில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து வந்ததை அந்த கட்சி மறுக்கிறது. தீபாவளிக்கும், விநாயர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்வது என்பது அவ்வளவு தவறான விசயமா? அந்த அளவிற்கு கொள்கை விரோத விசயம் என்று நினைக்கிறீர்கலா?
பதில் : இந்து மதத்தை பின்பற்றுபவர்கள், இந்து மதத்தைப் படிக்காமல் பின்பற்றுகிறார்கள் என்பது தான் உண்மை. எடுத்துக்காட்டாக பக்ரீத் என்ற அந்த நோன்பு வைப்பதற்கான காரணங்களை நீங்கள் பார்த்தால் கூட அதில் கேவலமான எதுவும் இருக்காது. தீபாவளியைப் பார்க்கின்றபோது அறிவியலுக்கு புறம்பானது மட்டுமல்ல, இழிவுபடுத்துகிற செய்திகள் இருக்கின்றன. விநாயகரை எடுத்துக் கொண்டா லும் அறிவியலுக்குப் புறம்பானது மட்டுமல்ல இழிவுபடுத்துகிற விசயம் இணைந்திருக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும். அவர்கள் சொல்வது கூட வாக்கு அரசியல் என்று வைத்துக் கொள்ளலாம். கிறிஸ்துமஸுக்கு சொல்கிறார்கள் என்றால் அந்த தலைவரின் பிறந்த நாள் என்று சொல்கிறார்கள்; அதற்கான வரலாறு இருக்கின்றது. பக்ரீத் என்பதோ மிலாடி நபி என்பதோ நபிகள் பிறந்த நாள் என்றால் அதற்கான வரலாறு இருக்கின்றது. ஆனால் விநாயகர் பிறந்த நாள் என்று சொல்லுகின்ற போது எத்தனை யாவது பிறந்த நாள் என்று எப்போதாவது அறிவித்திருக்கிறார்களா? ஏசுநாதருக்கு 2014 என்று சொல்கிறார்கள்; முகமது நபிக்கு ஒரு ஆயிரத்து நாநூறு, ஆயிரத்து ஐநூறு என்று சொல்கிறார்கள், அதுபோல இவர்கள் சொல்லட் டும். அப்போது அறிவியல் பூர்வமானது என்று ஏற்றுக்கொள்ளலாம். முற்றும் முழுவதுமாக பொய்க் கதைகளும், சமுதாயத்தின் பெரும் பான்மை மக்களை கேவலமாக ஆக்குகிற கதை களையும் உள்ளடக்கியிருக்கின்ற இதைத்தான் எதிர்க்கின்றார்கள்.
கேள்வி : விநாயகர் ஊர்வலத்திற்கு எதிர்க் குறியீடாக பெரியார் கைத்தடி ஊர்வலம் என்று ஆண்டு தோறும் நடத்துகிறீர்கள்; ஆனால் தமிழ் நாட்டைப் பொருத்தவரை விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலம் நடத்துவது என்பது அண்மைக் காலங்களில் அதிகரித்துக் கொண்டு போவதைத் தான் பார்க்கின்றோம்; ஆனால் அதற்கு எதிர்க் குறியீடான பெரியார் கைத்தடி ஊர்வலம் பலமானதாக இருப்பதாக தெரியவில்லை. இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாவதன் மூலம் மக்கள் அதை ஆதரிக்கிறார்கள் என்று பொருள் ஆகாதா?
பதில் : ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாட்டில் இரண்டு மதத்தினரும் பெரிய ஊர்வலங்களை எடுத்து வந்தனர். மிலாடிநபி என்ற ஊர்வலத்தை இஸ்லாமியர்கள் எடுத்து வந்தார்கள்; விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எடுக்கும் முயற்சியை இந்துக்கள் தொடங்கியிருந் தார்கள். அதற்கு முன்பெல்லாம் எப்போதும் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படவில்லை; அரசியலாகத் தான் நான் இதைப் பார்க்கிறேன். அது எப்படி இருந்தாலும் ஆரம்பித்தது. அப் போது கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்கள்; இரண்டு மதத்தினருக்கும் வேண்டு கோள் வைத்தார். தேவையற்ற கலவரங்களை உண்டாக்குகிறது; எனவே இஸ்லாமியர்கள் மிலாடிநபி ஊர்வலத்தையும், இந்துக்கள் விநாயகர் ஊர்வலத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்; ஆங்காங்கு விழாவாக நடத்திக்கொள்ளுங்கள், ஊர்வலம் வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தார். இஸ்லாமியர்கள் அப்போதே ஊர்வலம் நடத்துவதை கைவிட்டு விட்டார்கள்; அந்த ஆண்டிலிருந்து அவர்கள் நடத்துவதில்லை. ஆனால் விடாப்பிடியாக இந்துக்கள் நடத்து கிறார்கள். மக்களுக்கான கோரிக்கையை முன் வைக்கும் இயக்கங்களுக்குக் கூட ஊர்வலம் நடத்த பெரும் கட்டுப்பாடுகளை அரசு விதிக்கிறது; உயர்நீதி மன்றத்திற்கு போய் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. அதுவும் ஆள்நடமாட்டம் இல்லாத கூவம் ஓரத்தில் கொடுக்கப்படுகிறது. ஆனால் விநாயகர் சதுர்த்தியைப் பாருங்கள்; பக்தர்கள் எடுக்கும் ஊர்வலமாக அதற்கு அனுமதி அளிப்பதில்லை. ஒரு நாளைக்கு இந்து முன்னணிக்கான அனுமதி, ஒரு நாள் இந்து மக்கள் கட்சிக்கான அனுமதி என்றுதான் அனுமதி கொடுக்கிறார்கள். ஆக, இந்து முன்னணி என்ற அரசியல் அமைப்பிற்கு, இந்து மக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்பிற்கு அனுமதி கொடுக் கிறார்கள் என்பதை இதில் பார்க்கவேண்டும். ஆக இந்த அரசு உயர் மட்டத்தில் அமர்ந்திருப்ப வர்களுக்கு பகுத்தறிவு பற்றியோ, மதச் சார்பின்மை பற்றியோ போதிய சிந்தனை இல்லாதவர்களாக இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். இரண்டாவது காவல் துறையிலும், ஆட்சித் துறையிலும் மாவட்ட அளவில் அதிகாரிகளாக வருபவர்கள் தமிழ்நாட்டின் – மண்ணின் மனப் பான்மையை அறியாத வடநாட்டைச் சார்ந்த வர்கள் வந்து பெருமளவில் உட்கார்ந்திருக் கிறார்கள். அவர்களுக்கு இந்த மண்ணின் பண்பாடு என்ன, தொடர்ச்சியான வரலாறு என்ன என்று எதுவும் தெரியாமல் எந்த புரிதலும் இல்லாதவர்கள். மூன்றாவதாகப் பார்த்தால் கூட, இந்த விநாயகர் சதுர்த்திக்கு ஆதரவாக செலவுக்கு பணம் கொடுப்பவர்கள் யாரென்றால் வட இந்தியப் பெரும் முதலாளிகள். சமண மதத்தைச் சார்ந்த மார்வாடிகள் ஏன் இந்து மதத்திற்கு செலவு செய்கிறார்கள்? அதற்கு பின்னாலும் ஒரு பொருளியல் சுரண்டல் ஒட்டிக் கொண்டிருக் கிறது.
கேள்வி : மக்கள் தாமாக முன்வந்து விநாயகர் ஊர்வலத்தை நடத்துவதில்லையா?
பதில் : நிச்சயம் இல்லை என்பதும், பக்தர்கள் நடத்து வதில்லை என்பதும் தான் உறுதியான குற்றச் சாட்டு. முடியுமென்றால் உங்கள் நிறுவனத்தின் மூலமாக விநாயகர் ஊர்வலத்தை வீடியோ பதிவு செய்து எதையும் எடிட் செய்யாமல் வெளியிட்டுப் பாருங்கள் மக்களுக்கு பக்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ள அது உதவும். அதில் போகிறவர் களின் நடவடிக்கைகள், ஊர்வலங்களில் நடத்துகின்ற ஆபாசமான கூத்துகளை எல்லாம் பார்த்தால், அது பக்தர்கள் எடுப்பதா, ஏதோ விளையாட்டுப் போக்காக கிடைக்கிற வாய்ப்பை, அவர்கள் கொடுக்கிற மதுபானத்தை அருந்தி விட்டு ஆட்டம் ஆடுவதா என்பதை மக்கள் பார்த்தால் தெரிந்துவிடும். நாங்கள் இந்த முறை இதை வீடியோ எடுப்பதற்கான இடமும் பாதுகாப்பும் கேட்டிருந்தோம்; ஆனால் எடுக்க முடியவில்லை. அதை வீடியோ எடுத்தாலே இது பக்தர்கள் எடுக்கும் ஊர்வலம் அல்ல என்பது தெரிந்து விடும். அது பக்தர்கள் நடத்துவதல்ல; அரசியல் கட்சிகள் நடத்துகின்றன. இரண்டாவது ஊர்வலத்தில் போவது பக்தர்கள் அல்ல; மன எழுச்சிக்காக குதூகலத்திற்காகத்தான் விவரம் புரியாத இளைஞர்கள் போகிறார்கள், பக்திக்காக அல்ல என்பது தான் உண்மை.
கேள்வி : பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பின்னர் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு, அவர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள், சமஸ்கிருதத்தைத் திணிக் கிறார்கள் என்று சொல்கிறீர்கள்; இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்தியைப் பேசுகிறார்கள்; ஆனால் நீங்கள் இந்தி வேண்டாம் ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கட்டும் என்று சொல்கின்றீர்கள்; இந்திய மொழிகளில் ஒன்றான இந்தியையும், சமஸ்கிருதத்தையும் ஒதுக்கிவிட்டு, நீங்கள் ஆங்கிலத்தை ஆதரிக்கக் காரணம், உங்களிடையே (திராவிட இயக்கங் களிடையே) ஆங்கிலேய அடிமைச் சிந்தனை இருக்கிறது என்று பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் மீண்டும் குற்றச்சாட்டை வைக்கிறார்கள். உங்களுடைய இந்தி எதிர்ப்பு என்பதே போலியான ஒன்றா?
பதில் : பொது மொழி என்பது ஒரு நாட்டிற்கு பல வகைகளில் வைக்கிறார்கள்; இவர்கள் பெரும்பான்மை என்று சொன்னார்கள். பெரும்பான்மை மொழியும் அது அல்ல. ஐம்பது சதவீதத்திற்கு கீழானோர் பேசும் மொழி என்பதால் இது சிறுபான்மை மொழிதான். அதுவும் கரிபோலி, மைதிலி, போஜ்புரி போன்ற பல சிறு மொழிகளையெல்லாம் சேர்த்து தான் இந்தி என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். அப்படியே வைத்துக்கொண்டாலும் நாற்பது விழுக்காட் டினருக்கான மொழி நாட்டு மொழி ஆகிவிட்டது. மத்திய அரசுத் தேர்வுகளை ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ எழுதலாம் என்று சொல்லுகின்றார்கள். CSAT என்கிற சிவில் சர்விஸ் ஆப்டியூடு டெஸ்ட் என்பதற்கு ஆங்கிலத் தில் இருபது மதிப்பெண்கள் வைத்திருந்தார்கள். அண்மையில் வட இந்தியாவில் பெரும் போராட்டத்தை நடத்தி அதை வைக்கக் கூடாது என்றார்கள். நாளைக்கு ஐ.எப்.எஸ், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அதிகாரிகளாக போகக்கூடியவர்கள் தான் 200க்கு 20 ஆக இருக்கும் மதிப்பெண்களை ஆங்கிலத்தில் கூடாது என்கிறார்கள். அதற்கு கூட அரசு இணங்கி வந்துவிட்டது. சரி, தமிழ் நாட்டைச் சார்ந்த மாணவர் என்ன செய்வார்? ஒன்று ஆங்கிலத்தில் தேர்வு எழுதவேண்டும் அல்லது இந்தியில் எழுத வேண்டும். இருபது மதிபெண்ணுக்கு கூட அன்னிய மொழியில் வேண்டாம் என்ற குரலை ஏற்றுக்கொண்ட அரசு, மீதமுள்ள 180 மதிப்பெண்களையும் அன்னிய மொழியில் எழுதுகிறார்களே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அல்லது இந்தி பேசாத மாநிலத்தைச் சார்ந்தவர்கள்; அவர்களைப் பற்றி அரசு என்ன அக்கறை எடுத்துக்கொண்டது? ஆக இந்தி பேசுபவன் 180 மதிப்பெண்களுக் காவது அவன் மொழியில் எழுதமுடியும்; தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களோ, இந்தி பேசாத மாநிலத்தைச் சார்ந்தவர்களோ 200 மதிப்பெண் களுக்கும் அன்னிய மொழியில்தான் எழுத வேண்டும். இது இந்தி பேசுபவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. அன்மைக் காலங்களில் மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் தேர்வாகாமல் தென்னிந்தியர்கள் தேர்வாகாமல் போவதற்கு அதுதான் காரணமாக இருக்கிறது என்பது ஒன்று. இரண்டாவது இதைப் போன்ற சில நாடுகள்… சிங்கப்பூரில் முதல் பிரதமாரக இருந்த லீக் குவான் யூ அவர்களிடம் இப்படி ஒரு கேள்வி வந்தது. பொது மொழி ஆக்குகிறபோது அவர் சொன்னார்… ‘இங்கு மலாய் பேசுபவர்கள் இருக்கிறார்கள், தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்கள், இந்தி பேசுபவர்கள் இருக்கிறார்கள், சீனம் பேசுபவர்கள் இருக் கிறார்கள் எல்லோரும் இருக்கிறார்கள்; இதில் ஏதாவது ஒரு மொழியை பொது மொழியாக வைத்தால் அந்த மொழிக் காரருக்கு சாதகமாகப் போய்விடும் எனவே இது எதுவும் அல்லாத ஆங்கிலத்தை, Equal Disadvantage என, வைக்கின்றேன் என்று சொன்னார். அது எல்லோருக்கும் அன்னிய மொழி ஒன்றும் சிக்கல் இல்லை என்று அவர் அப்படி வைத்தார். சீனர்கள் பெரும் பான்மையானவர்கள் எங்கள் மொழியை ஏன் வைக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. பெரும்பான்மையானவர்களுக்கு என்று வைத்தால் மீதி இருக்கும் மக்கள் என்ன ஆவது என்பதுதான் கேள்வி. ஆக இந்தி பேசாத மக்களுக்குத்தான் அதிக பாதிப்பு. குறைவான மக்கள்தான் இந்தி பேசுபவர்கள்; 42 சதவீதம் பேர் என்று வைத்துக்கொண்டாலும், மீதி 58 சதவீதம் பேருக்கு அது அன்னிய மொழியாகப் போய் விடுகிறது. எனவே 42 பேருக்கு சாதகமாக, 58 பேருக்கு பாதகமாக இருக்கின்ற மொழியை ஜனநாயக நாடு ஏற்றுக்கொண்டதே தவறு என்பதுதான் எங்களுடைய கருத்து. இந்தி எதிர்ப்பு என்று பேசுகிற போது ஆங்கில அடிமைத் தனம் என்று சொல்லுகின்றார்கள். ஆனால் இந்த அடிமைத்தனத்தைப் பற்றி பேசுகின்ற இந்துத்துவாவாதிகளில் யார் யாரெல்லாம் ஆங்கில அறிவு பெறாதவர்கள் என்ற பட்டியல் எங்களுக்கு வேண்டும். அத்வானி பெறவில்லையா அல்லது யார்தான் பெறவில்லை என்பதற்கான பட்டியல் வேண்டும். அவர்கள் கற்றுக்கொண்ட ஆங்கிலம்தான் அவர்களுக்குப் பல புதிய சிந்தனைகளைக் கொடுத்திருக்கிறது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததுகூட ஆங்கிலம் படித்ததால் தான். அது எப்படி இருந்தாலும் அறிவியலை கற்பதற்கு ஒரு வேற்று மொழிதான் வேண்டும் என்றால் எல்லோருக்கும் வேற்று மொழியாக இருக்கட்டுமே, எனக்கு மட்டும் ஏன் வேற்று மொழியாக இருக்க வேண்டும் ? என்று சொல்லுகின்றோம். அடுத்து இவர்கள் இந்தியைத் திணிப்பதற்கு அது நோக்கமல்ல. இந்தி என்பது வடவர்களுக்காக செய்வது ஒன்று; இவர்களின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கையான சமஸ் கிருதத்தை கொண்டுவருவதற்கு ஒரு இடைக்கால ஊடகமாகத் தான் இந்தியைப் பார்க்கிறார்கள். ஏற்கனவே கோல்வார்க்கர் தன்னுடைய நூலில் சொல்லியிருக்கிறார்… ‘எங்களுக்கு இறுதியான இலக்கு என்பது சமஸ்கிருதத்தை கொண்டு வருவதுதான்; இடைக்காலமாக இந்தியை விடுகிறோம்’ என்பதாகத்தான் அவர்களின் பார்வை இருக்கின்றது. அதை இவர்கள் இப்போது வெளிப்படுத்தி விட்டார்கள் என்பதாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.
கேள்வி : இந்தியை எதிர்த்தும் தமிழுக்காகவும் பேசுகின்றீர்கள்; ஆனால் உங்கள் தலைவர் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று விமர்சனம் செய்தவர். எனவே உங்களுக்கு தமிழுக்காக குரல் கொடுக்க உரிமை இல்லை; நீங்கள் மெக்காலே புத்திரர்கள்; ஆங்கிலேய சிந்தனையை உள்வாங்கியவர்கள் என்று உங்கள் கொள்கைக்கு விரோதமான அமைப்புகள் சொல்லும் குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
பதில் : பல பேர் பெயரை மட்டும் படித்து செய்தியைப் படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு காரணம். மெக்காலே பற்றிய அவர்களின் புரிதலே தவறானது என்பது தான் எங்கள் கருத்து. அவர் ‘மினிட் ஆன் இண்டியன் எஜுகேசன்’ என்பதில் எழுதியிருக்கிறார். அவர் சொல்வது என்பது… அறிவியல் மனப்பான்மை அற்றவர்களாக இந்தியர்கள் இருக்கின்றார்கள். எடுத்துக்காட்டு ஒன்று சொல்கின்றார்… ‘ஐரோப்பாவில் இருக்கும் தொடக்கப்பள்ளி மாணவனின் புத்தகத்தில் இருக்கும் அறிவியலை, ஒட்டு மொத்த பெர்சிய மொழி (அப்போது பாரசீக மொழியுமிருந்தது) சமஸ்கிருத மொழி நூல்கள் அத்தனையையும் சேர்த்தாலும் கொடுக்காது என்ற அளவுக்கு தான் அறிவியல் இல்லாத மொழியாக இந்திய மொழிகள் இருக்கின்றன என்று பார்த்து தான், அறிவியலைக் கற்றுக் கொள்வதற்கு ஆங்கிலத்தைக் கொண்டு வரவேண்டும்’ என்று அவர் குறிப்பிடுகிறார். அடுத்து அவர் சொல்லுகின்றார்… ‘இதன் வழியாக அறிவியலை நாம் கொடுத்து, அறிவியல் மட்டுமல்லாமல் உலகப் பார்வை பெறவேண்டும், எல்லா தத்துவங்களையும் அறிந்துக் கொள்ள வேண்டும், தோற்றத்தில் இந்தியர்களாக இருந்தாலும், சிந்தனையில் ஐரோப்பியர்கள் அளவுக்கு வளரவேண்டும்’ என்று. இது ஒரு பக்கம், இதை விட்டு விடுவோம். அடுத்து பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்கிறார்கள். தமிழுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்பது, எளிதாக கற்றுக்கொள்ள எளிய எழுத்து முறை வேண்டும் என்று சிந்தித்தவர் இலக்கண அறிவோ, இலக்கிய அறிவோ இல்லாத பெரியார்தான். மக்கள் மீது இருந்த அக்கறை – குழந்தைகள் மீது இருந்த அக்கறை. இதுவரை எந்த தமிழ்ப் புலவரும் இயக்கமும் எடுக்காத முயற்சி; மகாபாரதத்தைத் தமிழில் எழுதினார்கள், இராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பரை புகழ்ந்து கொண் டிருந்தார்களே தவிர, குறள் என்ற உயர்ந்த தமிழ் இலக்கியத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை யாருக்கு இருந்தது? பெரியாருக்குத்தான் இருந்தது. பெரியார்தான் திருக்குறள் மாநாடு கூட்டி, விளக்கி, மக்களிடம் எடுத்துச் சென்றது மட்டுமல்ல தங்கள் இயக்கத்தின் சார்பாக குறளை அச்சிட்டுக் குறைந்த விலையில் விற்று தமிழ்நாடு முழுக்க திருக்குறளைப் பரப்பினார். இது தமிழுக்கு சார்பான பார்வையா அல்லது எதிரான பார்வையா எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு பெற்றோர் அல்லது ஒரு தந்தை தன் மகனையோ, மகளையோ பார்த்து, தறுதலை என்று பேசுவது அவன் தறுதலையாகப் போகவேண்டும் என்ற விருப்பத்தில் அல்ல; உன்னை மாற்றிக் கொள் என்பதற்காக. பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதுகூட, தமிழ் அறிவியல் இல்லாத வெறும் மதமும் காதலும் மட்டுமே கொண்ட மொழியாக இருக்கிறது, அறிவியல் இல்லை என்ற கோபத்தால் வந்ததாக புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் பெரியார் கூட சொன்னார்… ‘யாராவது அறிவியல் சார்ந்த, மக்கள் முன்னேற்றம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வந்தால் என் செலவில் அச்சிட்டு உங்களுக்கு சன்மானமும் கொடுக்க தயாராக இருக்கின்றேன்’ என்று அறிவித்தவர் பெரியார். இறுதியில் 1972 ஆம் ஆண்டில் ஒன்றை சொன்னார்… ‘மொழிப் பற்று என்பது ஒருவனுக்கு வேண்டும் நாட்டுப் பற்று வேண்டுமென்றால் மொழிப் பற்றும் வேண்டும்; ஒற்றுமைக்கு ஒரு மொழி தேவைப்படுகின்றது; சமஸ்கிருதம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டுதான் இந்தியா முழுவதும் இருக்கின்ற பார்ப்பனர்களிடையே ஒற்றுமை நிலவுகிறது. அது தமிழைக் கொண்டு நமக்கு ஏன் வரக்கூடாது’ என்று 1972 ஆம் ஆண்டு பேசியிருக் கிறார். இளம் வயதில் ஆடை அணியாதவரை இறுதி வரை ஆடை அணியாதவர் என்று பேசுவதைப் போல, ஒரு காலத்தில் சொன்ன ஒரு சொல்லை வைத்துக்கொண்டு பேசிக் கொண் டிருக்கிறார்கள். தமிழை மக்களுக்கானதாக ஆக்கவேண்டும் என்று அவர் பார்த்தார்; ஆக்கு வதற்கான சில முயற்சிகளாக எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தார்; தமிழை அழிக்க வந்த இந்தியை எதிர்த்துப் போராடினார்; குறளை முன் வைத்தார். ஆனால் ஏன் இப்படி பேசு கிறார்கள் என்று புரியவில்லை. ஒற்றைச் சொல்லை எடுத்துக் கொண்டு, அதற்கு பின்னால் இருக்கும் எதையும் பார்க்காமல் பேசுபவர் களாகத் தான் இவர்கள் இருக்கிறார்கள்.
கேள்வி : கூடங்குளம் அணு உலை தொடர்பான போராட்டங்களில், அதன் மக்கள் கூட்டியக் கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றீர்கள்; அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான் அணு உலைகள் என்று திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பார்க்கின்றன; பெரியாரே இருந்திருந்தால் இதை வரவேற்று தான் பேசியிருப்பார் என்று சொல்கிறார்கள். நீங்கள் அந்த முதல் இரண்டு அணு உலைகளையும் எதிர்த் தீர்கள், மூன்றாவது நான்காவது அணு உலைகளையும் எதிர்க்கிறீர்கள். இது ஒரு அறிவியல் பார்வைக்கு மாறான போக்காக தெரிய வில்லையா?
பதில் : தொழில்நுட்பம் என்பது வேறு, அதை பயன்படுத்துவது என்பது வேறு. Technology வேறு, Application வேறு. இருக்கின்ற தொழில் நுட்பத்தை எதற்கு பயன்படுத்துகிறார்கள்? அணுவுலையை ஆதரிப்பவர்கள் கூட அணு குண்டை ஏன் எதிர்க்கின்றார்கள்? அது ஆபத் தானது என்கின்றார்கள். அதுவும் விஞ்ஞான வளர்ச்சி தானே, ஏன் எதிர்க்கின்றார்கள்? அது அழிவுக்குக் காரணம் ஆகிவிடும் என்று எதிர்க்கிறார்கள். அதைத் தான் நாங்கள் அணு உலைக்கும் சொல்கிறோம், கட்டுப்படுத்தபட்ட அணுப்பிளவு அணு உலை, கட்டுப்படுத்தப் படாத அணுப்பிளவு அணு குண்டு, தொழில் நுட்பக் கோளாறு, மனிதப் பிழை, எதிரியின் தாக்குதல் போன்றவற்றால் அணு உலை வெடித் தால் மட்டுமல்ல, இயல்பாக இயங்கினாலே என்ன சிக்கல் வரும் என்பதை, கல்பாக்கத்திற்கு அருகே ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களைப் பற்றி அறிக்கைகள் வந்திருக்கின்றன. மஞ்சுளாதத்தா என்பவர் பெரிய அறிக்கையை இந்தியா முழுவதும் உள்ள அணு உலைகளால் ஏற்பட்ட பாதிப்பு களை விட, அங்கு பணியாற்றுபர்களுக்கு ஏற்பட்டிருக்கிற நோய்களைப் பற்றி, இறந்து போன 4900 பேரில் 70 விழுக்காட்டினர் புற்று நோயால் இறந்திருக் கிறார்கள். அதில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான அறிவியல் விஞ்ஞானிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். ஒன்று உளவியல் பாதிப்பு ஏற்படுகின்றது அல்லது புற்று நோய் ஏற்படு கின்றது என்று அவர் அறிக்கை சொல்கிறது. ஆதரிப்பவர்கள் பற்றி சொன்னீர்கள்; இங்கு அணுவுலையை பி.ஜே.பி. ஆதரிக்கின்றது சி.பி.எம், காங்கிரஸ் ஆதரிக்கின்றது. இரண்டு கட்சிகளும் உள்ள கேரளாவில் ஏன் அணு உலையை அனுமதிக்க மறுத்தார்கள்? காங்கிரஸ், பி.ஜே.பி இரண்டு பேர் மட்டுமே இருக்கின்ற கர்நாடகாவில், இங்கு இருக்கின்ற கழிவுகளில் கொஞ்சத்தை (இன்னும் ஆறும் அமைக்கப்பட வில்லை; ஒன்று தான் இயங்குகிறது) மூன்று கி.மீ ஆழத்திற்கு கீழே உள்ள கோலார் சுரங்கத்திற்கு (மூடப்படவிருக்கும் சுரங்கம்) அடியில் போட்டு மூடுவதற்குக் கூட கருநாடகாவில் பெரும் எதிர்ப்பு; உடனே அரசு கைவிட்டு விட்டது. இவ்வளவு ஆபத்தான அணு உலைகளை ஆதரிக்கவேண்டும் என்று எப்படி சொல்கிறார்கள் என்று புரிய வில்லை. அதே போல ஜெய்தாப்பூரில் சி.பி.எம் தலைமையில்தான் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துகிறார்கள். வி.கே.சிங் , பா.ஜ.க அமைச்சராக இப்போது வந்திருக்கும் பழைய தளபதி, அவர் பகுதியில் வந்த அணு உலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் தான். ஆனால் நம்மூரில் மட்டும் அதை ஆதரிக் கிறார்கள் என்பதுதான் வியப்பாக இருக்கின்றது. விஞ்ஞானக் கருத்து முக்கியம் அல்ல; அதன் பயன்பாடு எப்படி இருக்கின்றது? அது எதற்குப் பயன்படுகிறது? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? மக்களுக்காகத் தான் மின்சாரம் தேவை; மக்களை அழித்துவிட்டு – பாதிப்பு கொடுத்து விட்டு மின்சாரம் வந்தால் அது அறிவியல் வளர்ச்சி அல்ல. அது அறிவியல் ஆபத்து என்று பார்க்கின்றோம்.
கேள்வி : தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு வகையில் திராவிட கட்சிகளுடைய செல்வாக்கு தான் இருக்கின்றது; பெரியார் கொள்கைகளை முழுமையாக பின்பற்றுகிறார்களா இல்லையா என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், பெரியாரை எதிர்க்காத அமைப்பு என்று புரிந்துகொண்டாலும் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க ஒரு வகையில் பா.ம.க முதலிய கட்சிகள் தான் 50, 60 சதவீத வாக்குகளை வைத்திருக்கின்ற கட்சிகளாக இருக்கின்றது; ஆனால் பி.ஜே.பி திராவிட கட்சிகளுக்கு மாற்றான சக்தியாக நாங்கள் வளர்ந்து வருகிறோம், திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான், எங்கள் தலைமையில் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவோம் என்று சொல்கிறார்கள். அது பெரியார் இயக்கம் அல்லது திராவிட இயக்கத்தினுடைய இயலாமை அல்லது இயக்கங்களின் தோல்விதான் பி.ஜே.பி யின் செல்வாக்கு வளர்ச்சி என்று பார்க்கின்றீர்களா? அவர்கள் சொல்வது ஒதுக்கிவிடக் கூடிய கருத்தாக தெரியவில்லை ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்கள். தமிழகம் ஒரு மாற்றத்திற்குத் தயாராகிறது என்று பார்க்கின்றீர்களா?
பதில் : எப்படியோ, இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண் டிருக்கிற கோவையில், கிறிஸ்துவத்திற்கு எதிரான வெறுப்பை விதைத் திருக்கின்ற கன்னியாகுமரியில் எப்போதும் இருந்து கொண்டிருந்தவர்கள்தான். தற்போது சற்று கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக் கிறார்கள்; அது கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் தானே தவிர அவர்களுக்குக் கிடைத்த வாக்குகள் அல்ல. இப்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வாக்குகளை வைத்து சொல்கிறார்கள். இரண்டு பேர் மட்டும் பங்கேற்கும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு விட்டு, நான் இரண்டாவதாக வந்துவிட்டேன் என்று சொல்வதைப் போலத்தான் இருக்கின்றது. வேறு யாரும் போட்டியிடவில்லை, அ.தி.மு.க வுக்கு எதிரான அனைவரின் வாக்குகளும் இவர்களுக்கு விழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கோவையைப் பொருத்தவரை சி.பி.எம்-க்கான வாக்குகள் கிடைத்திருக்கின்றன; அங்கு ஏற்கனவே வலுவாக இருக்கின்ற பி.ஜே.பி மட்டுமல்லாமல் அங்கு இருக்கின்ற மற்ற கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க வுக்கு எதிரான கட்சிகள் வேறு வாய்ப்பு இல்லாமல் இவர்களுக்குத்தான் வாக்களித்திருக்க வேண்டிய நிலை இருந்திருக்கிறது. இந்த மாயத் தோற்றத்தை வைத்துக்கொண்டு இவர்கள் தவறாக புரிந்துகொண்டு அறிக்கை விட்டிருக்கிறார்கள் என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காணொளிக்கு இங்கே சொடுக்கவும் பகுதி 1
காணொளிக்கு இங்கே சொடுக்கவும் பகுதி 2
காணொளிக்கு இங்கே சொடுக்கவும் பகுதி 3
காணொளிக்கு இங்கே சொடுக்கவும் பகுதி 4
காணொளிக்கு இங்கே சொடுக்கவும் பகுதி 5
பெரியார் முழக்கம் 06112014 13112014 மற்றும் 20112014 இதழ்