பெரியாருக்குக் காட்டும் நன்றி !
‘அறிவின் வழி’ என்ற மாத இதழ் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பகுத்தறிவு பேசும் இயக்கம் குறித்து எழுதியுள்ள தலையங்கம்
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் உண்மையான தன்மையை பகுத்து அறிந்து கொள்பவன் பகுத்தறிவாளன் ஆகிறான். தமிழ்நாட்டில் பகுத்தறிவு என்ற சொல் கடவுள் மறுப்பு என்பதையே முன்னிலைப்படுத்துகின்றது. பகுத்தறிவாளன் என்றால் நாத்திகன் என்று சொல்லிவிட்டு ஒதுக்கி விடுகிறார்கள் அல்லது ஒதுங்கி விடுகிறார்கள். ‘பகுத்தறிவு’ என்று பேசத் தொடங்கியதுமே அதைத் தட்டிக் கழித்து விட்டு, புறக்கணித்துவிட்டு ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு ஓர் ஒவ்வாமைப் பண்பை வளர்த்திருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் பகுத்தறிவுவாதம் பேசுகிறவர்கள் மூன்று பிரிவாகப் பிரித்துக் கொள்ளலாம். இதில் முதல் பிரிவினர், பகுத்தறிவு என்ற சொல்லைப் பட்டா போட்டு எடுத்துக் கொண்டிருப்பவர்கள். வேறு எவரும் பகுத்தறிவு என்ற சொல்லை பயன்படுத்துவதை அல்லது அந்தப் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்து வதை விரும்பாதவர்கள். அவ்வாறு ஓர் இயக்கம், அமைப்பு தொடங்கப்படுமானால், அதற்கு யாரும் எந்த விதத்திலும் ஆதரவளிக்கக் கூடாது என்று ரகசிய சுற்றறிக்கை அனுப்பிக் கொண்டிருப்பவர்கள்.
இவர்களது பார்வையில் கி.பி.18 ஆம் நூற்றாண்டின் சூழ்நிலைகள் மக்களின் வாழ்க்கைத் தரம் எதுவுமே உயரவில்லை. அன்றைய நிலை இன்றும் தொடருகிறது. அன்றைக்குக் காட்டிய அதே எதிர்ப்பு உணர்ச்சி களை போராட்ட முறையை அப்படியே தொடர வேண்டும் என்று பேசிக் கொண்டிருக் கிறார்கள், எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப் புணர்ச்சியை மறுமலர்ச்சியை அறிந்து கொண்டாலும், அதே ஆண்டான் அடிமைத் தனம் அப்படியே இருக்கிறது என்று சொல்வதன் மூலமே தமதுஅமைப்பு சிதையாமல் இருக்கும் என்று நம்புகிறார்கள்.
அணுகுமுறையை அவர்கள் மாற்றிக் கொள்ள விரும்பாததால் அவர்கள் விரும்பிய மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்புக் கொள்கையில் எவ்வித முன் னேற்றமும் ஏற்பட வில்லை. மாறாக ஆன்மீகம் பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. ஜாதி வெறி, தீண்டாமை பன்மடங்கு வளர்ச்சி அடைந்து தலைவிரித்தாடு கிறது. இந்தத் தவறான அணுகுமுறையை எதிர்த்து அல்லது அரசியல் சார்புக் கொள்கையை எதிர்த்து பலர் வெளியேறி விட்டனர். புதிய இயக்கங்களை தொடங்கி யுள்ளனர். இயங்கிக் கொண்டும் இருக்கின்றனர்.
வழக்கம்போல பிரிந்து சென்றவர்களை வசைபாடி ஒதுக்கிவிட்டு, சுயமரியாதை இயக்கத்தின் உண்மையான வாரிசு நாங்கள்தான் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் புதிதாக எதுவும் சொல்லுவதில்லை. மாறாக பழம் பெருமை பேசியே காலத்தை ஓட்டிக் கொண்டுள்ளார்கள். இயக்கத்திற்காகப் பாடுபட்ட முன்னாள் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி பேசிவிட்டு ‘கொல்லன் தெருவிலே ஊசி விற்று’க் கொண்டிருக் கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலமே மூட நம்பிக்கை ஒழிந்துவிடும் என நம்புகிறார்கள்.
பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும். நாளும் பெருகி வரும் ஆன்மிகக் கூட்டத்திற்குச் சமமாக இல்லாவிடினும் ஓரளவேனும் பிரச்சாரம் செய்யக்கூடிய அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும். மூட நம்பிக்கை, சாதி ஒழிப்புக்காக பாடுபடுகிறவர் களை தட்டிக் கொடுத்து ஆதரவளிக்க வேண்டும் என்றெல்லாம் சிறிதும் சிந்திக்காமல் கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்புக் கொள்கைகளை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டு, அரசியல் மொழி சார்புடைய இயக்கமாக மாறி வருகிறார்கள். இவர்களது தற்போதைய சிந்தனை ஒரு அரசியல் கட்சிக்கு ஊதுகுழலாக இருப்பது, சிலைகள் வைக்க வசூல் செய்வது, நூல்களை வெளியிட்டு வருவாயை பெருக்குவது மட்டுமே.
பகுத்தறிவுவாதிகளின் இரண்டாம் பிரிவினர் மேற்சொன்ன முதற்பிரிவிலிருந்து பிரிந்து வந்தவர்கள். இவர்களது ஆரம்பகால இயக்கங்கள் எப்படியிருப்பினும் இப்போது முழுக்க முழுக்க இனம், மொழி சார்புடை யதாகவே இருக்கும்படி கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்படும் போது, ‘பகுத்தறிவுப் பாசறையில்’ வளர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளத் தயங்குவதே இல்லை. மூடநம்பிக்கைகளைச் சாடுவது, கடவுள் மறுப்புச் சிந்தனைகளைப் பரப்புவது போன்றவற்றை தேவைப்படும்போது ஊறுகாய் போல் அவ்வப்போது தொட்டுக் கொள்வார்கள்.
‘கடவுள் இல்லவே இல்லை’ என்ற குரல் முடங்கிப்போய், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றாகி ஓட்டு வங்கியை நிரப்பியது இவர்கள் காலத்தில்தான். சீரங்கத்து ரங்கநாதரை யும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்று? எனப் பேசியவர்கள், இன்று தம் பழைய கொள்கைகளை பீரங்கி வைத்து தகர்த்துவிட்டு அரசியல், ஆட்சியதி காரம், பதவி சுகம் போன்ற போதையில் மூழ்கி, மனசாட்சியையும் ஒதுக்கிவிட்டு வாழக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் இப்போது ஆன்மிகவாதிகள். இவர்களே மாறிய பிறகு இவர்களது குடும்பம் எப்படி இருக்கும்? இவர்களிலிருந்து பிரிந்த மற்றொரு பிரிவினர் ஆன்மிக மூடத்தனங்கள் அத்தனைக்கும் அடிமைகளாகி, அதே நேரத்தில் திராவிட பாரம்பரியக் கட்சி என்பதை மறக்காமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்புக் கொள்கையில் பெரியார் ஈ.வெ.ரா.வின் சிந்தனைகளை அப்படியே பின்பற்றி வாழும் உண்மையான பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை மூன்றாம் பிரிவினர் எனலாம். இவர்கள் பணத்திற்கோ, பதவிக்கோ அடிபணி யாதவர்கள். தன் சொந்தப் பணத்தைப் போட்டு இயக்கங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்கள்.
இத்தகைய முழுமையான நாத்திகரின் விரோதி ஆன்மிகவாதிகள் என்றா நினைக் கிறீர்கள்? அல்ல! அல்ல! பகுத்தறிவுவாதிகள் என்று நாம் முதலில் குறிப்பிட்ட இரண்டு பிரிவு இயக்கங்களே இவர்களுக்கு எதிரிகள். உண்மையான மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு இயக்கங்களுக்கு இவர்கள் ஆதரவளிக்க வேண்டாம். நல்ல சிந்தனைகள், சீர்திருத்தம் கருத்துகள் மக்களைச் சென்றடைய இவர்கள் இடையூறாக இல்லாமல் இருந்தால் அதுவே இவர்கள் ‘பெரியாருக்கு’க் காட்டும் நன்றியாகும்!
தகவல் : இராம. இளங்கோவன், கோபி
பெரியார் முழக்கம் 08052014 இதழ்