தலையங்கம் புதுமைப் பெண்களே வருக!
“ஆசிரியர் பணிகளுக்கு பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்; அனைத்து கல்வி வேலை வாய்ப்பிலும் 50 சதவீத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்; ஒரு வீட்டில் ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை இருந்தால் பெண் கல்விக்கே முன்னுரிமைத் தரப்பட வேண்டும்; பெண்களுக்கு சொத்து – வாரிசுரிமையில் சம பங்கு தர வேண்டும்” – இப்படி பெண்களின் விடுதலைக்ககாகக் குரல் கொடுத்த தலைவர் பெரியார். கலைஞர் முதல்வராக வந்த பிறகு, ஒவ்வொன்றாக செயல்படுத்தினார். இப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த சாதனை சரித்திரத்தைத் தொடருகிறார்.
6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கும் பெண்களுக்கு அவர்களின் உயர்க் கல்வி வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’ பெண் விடுதலைக்கான பாதையில் மற்றொரு மைல் கல். தி.மு.க. ஆட்சியின் சாதனை மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம். நாட்டில் எங்கும் நிகழ்ந்திடாத சாதனை என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். ‘எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம்’ என்று முதல்வர் உணர்வுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
‘சனாதனத்தின்’ பெண்ணடிமை கோட்பாடுகளை சவக்குழிக்கு அனுப்பியுள்ள திட்டம் இது. ‘சூத்திரர்களுக்கு’ கல்வியைத் தராதே என்று தடைபோட்ட சனாதன தர்மத்தின் நீதி நூலான மனுதர்மம், பெண்கள் அனைவரும் ‘சூத்திரர்’களே என்று எழுதி வைத்தது (“ஸ்திரினாந்த சூத்திர ஜாதினாம்”).
கணவனை இழந்த பெண்கள் உயிர் வாழவே கூடாது; நெருப்பில் எரிக்க வேண்டும் (“சிதா வாரோகணம் பிரம்மச்சர்யம்”) என்று அதே மனுசாஸ்திரம் கூறுகிறது. பெண்களும் சூத்திரர்களும் வேதம் ஓதக் கூடாது (“நாஸ்த்ரீ சூத்ர வேதமாத்யதாம்”) என்று தடை போட்டது. இந்த மனு சாஸ்திரம் இப்போதும் அச்சிட்டு விற்பனையாகிறது. தடை ஏதும் இல்லை. மனுதர்மத்தை எரிப்பது பாவம் என்று பார்ப்பன “மதுவந்திகள்” இப்போதும் சமூக வலைதளங் களில் பேசி வருகிறார்கள். ஒவ்வொரு ‘பார்ப்பனர் பூணூலும்’ நான் மனுதர்மப்படி ‘பிராமணன்’ என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் பாரத தேசத்தின் ‘சனாதனப் பண்பாடு’ என்று பெருமை பேச ஆளுநர்கள் இருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்ட பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று திரைப்படத்தில் சண்டை போட்டு காமிராக்கள் முன் உதை வாங்கும் ஒரு நடிகர் பேசுகிறார்.
இந்த சமூகப் பின்னணியில் பெண் கல்விப் புரட்சியைப் பரிசீலிக்க வேண்டும்.
‘சமூக-கல்வி ரீதியாக’ பின் தங்கியவர்கள் பிற்பபடுத்தப்பட் டோர் என்று நமது ஆசான்கள் சட்டத்தில் சரியான வாசகங்களைப் பதித்து வைத்தனர்.
சமூகமும் கல்வியும் பிரிக்க முடியாத சமூக மாற்றத்தின் அடிப்படைக் கூறுகள். அத்தகையப் பிரிவினரை அறிவியல் பார்வையில் அடையாளம் காட்டும் சமூகக் காரணிகளாக விளங்குவோர் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் பெண்கள். இவர்களில் பார்ப்பனிய மேட்டுக்குடிப் பிரிவினரைக் கண்டுபிடிக்கவே முடியாது.
இத்திட்டத்தில் பயன் பெறக்கூடியவர்கள் யார்? அன்றாடம் வேலை செய்துதான் வாழ்க்கையை ஓட்டியாக வேண்டும் என்ற வாழ் நிலையில் தள்ளப்பட்டுள்ள தாய்மார்கள் பெற்ற பெண்கள்; இந்த மாணவிகள் அரசு வழங்கிய சைக்கிளில் பயணிப்பவர்கள்; அரசு வழங்கிய சீருடை பாட நூல்களோடு பள்ளிக்கு வருகிறவர்கள்; அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்பவர்கள்; சுயமரியாதையுடன் பெருமைகளைச் சுமந்து அவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் வருகிறார்கள். இதற்குப் பெயர் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய சமூக நீதி; சுருக்கமாக ‘திராவிட மாடல்’.
இந்தப் பயன் எப்போது முழுமை பெறும்? கல்லூரிப் படிப்புக்குப் பிறகு இந்தப் பெண்கள் குடும்ப அமைப்புக்குள் சிக்கி குழந்தைகளைப் பெற்றுத் தரும் எந்திரங்களாக மாற்றும் சமூக நிலையை மாற்றியமைக்கப்படும்போது தான் பெண் கல்வி இப்போது பல நடுத்தர மேல் நடுத்தர குடும்பங்களின் ‘அடையாளத்துக்கான பெருமை’யாகவே பார்க்கப்படுகிறது. பெண்கள் இதை மறுத்து தங்கள் படிப்புக்குப் பிறகு அறிவை ஆற்றலை வெளிப்படுத்தும் பதவிகளுக்கு வர வேண்டும். திருமணம் என்பது ஒருதடையாக வந்தால் அதையும் மீறி நிற்கும் துணிவைப் பெற வேண்டும். அத்தகைய துணிவான மாற்றங்கள் இப்போது படித்த பெண்களிடம் வெளிப்படத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.
உயர்கல்வியில் தமிழகம் வளர்ச்சி பெற்றாலும் உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கு குறைந்து வருவதும், அவர்கள் கற்ற கல்வி, குழந்தைகள் பராமரிப்போடு முடங்குவதும் கவலைக்குரிய நிலையாகும். எனவே புதுமைப் பெண்களின் சுயமரியாதைக்கான அடையாளம், அதிகார மய்யங்களில் அமர்வதிலும் நாட்டை வழி நடத்துவதிலும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இத்தகைய மாற்றத்துக்கு முன் வரும் பெண்களை முற்போக்கு சிந்தனையாளர்கள் ஊக்கப்படுத்திட வேண்டும். மாறாக சமூக மனநிலையில் நம்மையும் பொருத்திக் கொண்டு “எப்போது திருமணம்? என்ற கேள்வியையும், திருமணத்துக்குப் பிறகு “எப்போது நல்ல சேதி தரப் போகிறாய்?” என்ற கேள்வியையும் கேட்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ‘புதுமைப் பெண்கள்’ வரலாறு படைக்க வழி திறந்து விட வேண்டும்; புதுமைப் பெண்களின் வெற்றி அதில் தான் அடங்கி இருக்கிறது.
பெரியார் முழக்கம் 08092022 இதழ்