உயர்நீதிமன்ற புதிய நியமினங்களில் மேலும் பார்ப்பனர்களை நியமிக்க முயற்சியா?
சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளுக்கான 60 இடங்களில் தற்போது 43 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 17 பேருக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடக்க இருப்பதாக தெரிகிறது. காலியாக உள்ள 17 நீதிபதிகள் பதவிகளில் பார்ப்பனர்களைக் கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாக அறிகிறோம். ஏற்கெனவே தலைமை நீதிபதி, இரண்டாவதுநிலையில் உள்ள நீதிபதி உள்பட 7 பார்ப்பனர்கள் இருக்கும் நிலையில், மேலும் பார்ப்பனர்களை நியமிப்பது சமூகநீதிக்கு எதிரானதாகும். இதில் பார்ப்பனரல்லாதவர்களை தேர்வு செய்வதற்கு 50 வயதுக்கு மேலும், பார்ப்பனர்களுக்கு மட்டும் 50 வயதுக்கு கீழே உள்ளவர்களாக தேர்வு செய்யவும் ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது. 50 வயதுக்குள்ளே தேர்வு செய்யப்படும் பார்ப்பனர்கள், உச்சநீதிமன்றம் வரை செல்லவும் நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியத்தில்’ இடம் பெறவும் இயலும் என்பதால் இப்படி ஒரு சதி திட்டமிடப்படுகிறது.
சமூக நீதிக்கு இந்தியாவுக்கே வழிகாட்டிய மாநிலம் தமிழகம். எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது இதே போன்று பார்ப்பனர்களை அதிகமாகக் கொண்ட நீதிபதிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது அது ‘தமிழக உளவியலுக்கு’ (Soil Psychology) எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினார்.
உச்சநீதிமன்றம்கூட நீதிபதி நியமனங்களில் பிரதிநிதித்துவம் கிடைக்காத சமூகத்தினருக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று ஒரு வழக்கில் (காந்தி எதிர் இந்திய அரசு) எடுத்துக்கூறி உயர்நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மீனவர், யாதவர், பொற்கொல்லர், குயவர், வண்ணார், முடிதிருத்துவோர், காட்டு நாயக்கர் போன்ற எத்தனையோ சமூகப் பிரிவினர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வர முடியாத நிலையில் இந்த சமுதாயத்தினருக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும். ஏற்கெனவே பார்ப்பனர் பிரதிநிதித்துவம் அதிகமாக உள்ள நிலையில் மேலும் பார்ப்பனர்களை நீதிபதிகளாக்கக் கூடாது; கூடவே கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
பெரியார் முழக்கம் 18122014 இதழ்