கழகத் தலைவர்-தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது
கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகத் தோழர்கள் அருண்குமார், அம்பிகாபதி, கிருட்டிணன் ஆகியோர் மீது தமிழக அரசு பொய்யாக போட்டிருந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் 13.2.2014 அன்று ரத்து செய்தது. இது தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற நீதிதிகள் இராஜேசுவரன், பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் பிப்.12 ஆம் தேதி வந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார்.
அவர் தனது வாதத்தில், “பொது ஒழுங்கு சீர்குலைவு நடக்கும்போது மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இந்த வழக்கில் அப்படி எந்த சீர்குலைவும் நடைபெறாதபோது சட்டம் முறை கேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பது வேறு; பொது ஒழுங்கு சீர்குலைவு என்பது வேறு. காவல்துறையின் குற்றச்சாட்டில்கூட பொது ஒழுங்கு சீர்குலைந்திருக் கிறது என்ற எந்தக் குறிப்பும் இல்லை. குற்றம் சாட்டப் பட்டவர்கள் பிணையில் வெளிவந்து விடக் கூடாது என்பதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறுவது சட்ட மீறலாகும். இந்த நோக்கத்தில் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே பல தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. வருமான வரித் துறை அலுவலகத்தில் விடியற்காலை 4 மணிக்கு ஒரு சாக்குப் பைக்கு நெருப்பூட்டி வளாகத்துக்குள் வீசி எறிந்ததாக சொல்லப்படுகிறது. இந்தச் செயலால் எந்த சேதமும் ஏற்படவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று எதிர்ப்பைத் தெரிவிக்கவே இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது. அந்த காமன்வெல்த் மாநாடும் நடந்து முடிந்துவிட்டது. அதற்குப் பிறகும் 3 மாத காலத்துக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. இது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் சட்ட விரோதமான காவல்” என்று வாதிட்டார். வழக்கறிஞர் வைகை, பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார்.
அன்றைய நாளில் நீதிமன்ற அலுவலக நேரம் முடிந்து விட்டதால், அடுத்த நாள் பிப்.13 அன்று வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். பிப்.13 அன்று வழக்கறிஞர் வைகை முன் வைத்த வாதங்களுக்கு மறுப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக அரசு சார்பில் தாக்கல் செய்யப் பட்டது. அந்த மறுப்பு வாதங்களுக்கு விரிவாக பதிலளித்து, வைகை இரண்டாவது நாளாக வாதிட்டார்.
தொடர்ந்து கழகத் தோழர்கள் மூவருக்கும் வழக்கறிஞர் திருமூர்த்தி வாதிட்டார். அவர் தனது வாதத்தில், “தற்போது கைது செய்யப்பட்ட தோழர்களை அக்.30, 31 தேதிகளில் காவல்துறை அழைத்து விசாரணை நடத்தியது. இந்தத் தோழர்கள் சேலம் வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் சாக்குப் பைக்கு நெருப்பு வைத்து வீசியதை 30ஆம் தேதியே நேரில் பார்த்த சாட்சிகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. அது உண்மையானால், 30 ஆம் தேதியே அவர்களை கைது செய்யாமல் அனுப்பிவிட்டு, அடுத்த நாள் வரச் சொல்லி விசாரணை நடத்த வேண்டிய அவசியமென்ன? இதிலிருந்தே பொய்யாக இந்த வழக்கைப் புனைய வேண்டும் என்று, முடிவெடுத்துச் செயல்பட் டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது.
பிணையில் வெளியே வராமல் தடுப்பதற்கே தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறும் காவல்துறை, ஒரு வழக்கையும் சுட்டிக் காட்டியுள்ளது. இதில் 2013இல் குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவர், 2009இல் பிணையில் சென்றுவிட்டதாக காவல்துறை கூறுகிறது. 2013இல் கைது செய்யப்பட்ட ஒருவர், அதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே பிணை வாங்கிவிட்டார் என்று கூறுவது விசித்திரமாக உள்ளது. காவல்துறை கவனத்தை செலுத்தாமலே பொய்யாக வழக்கை நடத்துகிறது என்பதற்கு இது சான்று” என்று வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் சிரித்து விட்டனர். அரசு வழக்கறிஞரைப் பார்த்து, இதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள் என்று நீதிபதிகள் கேட்க, வழக்கறிஞர் ‘அச்சுப் பிழை’ நேர்ந்துவிட்டது என்று கூறினார். தொடர்ந்து நீதிபதி பிரகாஷ், மற்றொரு கேள்வியை எழுப்பினார். சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறும் காவல்துறையின் சாட்சிக்காரர், சாக்குப் பைக்கு நெருப்பு வைத்து வீசியதை நேரில் பார்த்தேன்; பார்த்துவிட்டு ஒரு டீ கடைக்கு டீ குடிக்கப் போய்விட்டேன் என்கிறார். பொது ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதாகக் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டில் காவல்துறை யின் சாட்சியே சம்பவத்தை நேரில் பார்த்துவிட்டு பதட்டமே இல்லாமல், டீ குடிக்கப் போய்விட்டதாகக் கூறுகிறாரே என்று நீதிபதி கேட்டார்.
நீதிமன்றத்தில் மீண்டும் சிரிப்பொலி! அரசு தரப்பு வாதங்களை ஏற்கவியலாது என்று கூறிய நீதிபதிகள், தேசப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கம் செய்து உத்தர விட்டனர். இதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, அருண் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அன்று மாலையே உயர்நீதிமன்ற ஆணையைப் பெற்று கழகத் தோழர் வழியாக சேலம் அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் பிணை கோரும் மனு பிப்.18 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வர இருந்தது. உயர்நீதிமன்றம் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை பிப்.13 ஆம் தேதியே நீக்கம் செய்து விட்டதால், முன்கூட்டிய விசாரிப்பு மனு ஒன்று அவசரமாக 14.2.2014 அன்று தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், வழக்கறிஞர் கவுதம பூபாலன் ஆகியோர் தோழர்களுக்காக வாதிட்டனர். நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது. ம.தி.மு.க. மாநகர பொறுப்பாளர் வழக்குரைஞர் ஆனந்தராஜ், மனித உரிமை பாதுகாப்பு மய்ய வழக்குரைஞர் மாயன் ஆகியோர் வழக்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். 15.2.2014 சனி காலை 9.15 மணியளவில் கழகத் தலைவரும் தோழர்களும் சிறையிலிருந்து விடுதலையானார்கள்.
ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்காக 2013 அக்டோபர் 2இல் கைது செய்யப்பட்ட தோழர்கள், 2014, பிப்.14 அன்று விடுதலையானார்கள்.