பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் ஆய்வுரை நில உரிமைகளை பறித்தது ஜாதியமே

நிலவுடைமைக்கு எதிரான போராட்டத்தின் வழியாகவே ஜாதியமைப்பை தகர்க்க முடியும் என்று மார்க்சிய லெனினிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சில இடதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நில உரிமையை ஜாதியமைப்பே கட்டமைத்திருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலை பொருளியல் பேராசிரியர் ஜெரோம் சாம்ராஜ் கூறினார். தமிழகத்தில் ஜாதிக்கும் நிலவுரிமைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தியவர் ஜெரோம்.
சென்னை திருவான்மியூரில் பனுவல் நூலக அரங்கில் ‘புதிய தமிழ் ஆய்வுகள்’ என்ற அமைப்பின் நிகழ்வில் ஆக°டு 21ஆம் தேதி மாலை அவர் இது குறித்து விரிவான ஆய்வுரையை முன் வைத்தார். ஒருவரிடம் நிலம் இல்லை என்பதற்கான காரணமாக அவரது வறுமை சொல்லப்படுகிறது. அது உண்மையானால், பார்ப்பனர், வேளாளர் ஜாதி சமூகம் மட்டுமே நிலவுடைமை யாளர்களாக எப்படி மாற முடிந்தது? உண்மையில் வறுமை காரணமாக நில உரிமை கிடைக்காமல் போக வில்லை. நிலஉரிமை மறுக்கப்பட்டதால்தான் பார்ப்பன-வெள்ளாளர் அல்லாத மக்கள் குறிப்பாக தலித் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டார்கள் என்று கூறிய ஜெரோம், ஏராளமான வரலாற்று ஆய்வுகளை முன் வைத்து தனது கருத்தை நிறுவினர். 1965இல் தர்மகுமார் என்பவர் நிலத்துக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்தார். நிலவுடைமை என்ற தத்துவத்தை மார்க்சிய-லெனினியப் பார்வையில் பார்க்காமல், தமிழ் நாட்டின் சமூக வரலாற்றுப் பின்புலத்தி லிருந்துதான் ஆராய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து, விரிவான ஆய்வு கட்டுரையை மிகிர்ஷா – 1987இல் ‘எக்னாமிக்கல் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் எழுதினார்.
நெல்லை மாவட்ட நிலவுடைமை யாளர் குறித்து டேவிட் லிட்டன் நடத்திய ஆய்வு – புதிய வெளிச் சங்களைத் தந்தது. மாhக்சியம் கூறும் உற்பத்தி உறவுமுறைகள் குறித்த பார்வையிலிருந்து மாற்றம் வேண்டும் என்று கூறிய ஜெரோம், தமிழ்நாட்டில் ஜாதிய சமூக உறவுகளை நிர்ணயித்த ‘கலாச்சாரப் பொருளாதாரம்’ பரிசீலிக்கப் பட வேண்டும் என்றார். நில உரிமைக்கும், இங்கே கோயில் களுக்கும் நெருக்கமான உறவுகள் இருந்தன. சங்க காலத்தில் முளைவிடத் தொடங்கிவிட்ட ஜாதி, சோழர் காலத்தில் மிகவும் ‘இறுக்கமான’ கட்டமைப்பாக மாறிப் போனது. தமிழ் நாட்டில், தங்களுக்கு நிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நிலவுரிமைப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. ஏன் அத்தகைய போராட்டங்கள் நடக்கவில்லை? பார்ப்பன – வேளாளர் ஜாதி ஆதிக்கத்தின் கீழ் உழன்று கொண்டிருந்த மக்கள், ஜாதியமைப்பு தங்களுக்கு விதித்த கடமைகளை மட்டுமே செய்யும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
தமிழ்நாட்டில் கிராமிய சமூகத்தின் கட்டமைப்பு ஜாதியத்தால் இறுக்க மாக்கப்பட்டது. இன்னும் அந்த நிலை பெருமளவில் மாறவில்லை. உயர்ஜாதிக் காரர்கள் என்றும் தூய்மைக்குரியவர்கள் என்றும் கருதப்பட்ட பார்ப்பன – வேளாளரி லிருந்து கிராமங்களில் ‘மிராசுதார்கள்’ என்பவர்கள் வந்தனர். அதிகாரம் நிறைந்த அவர்களே கோயில்களின் அதிகாரத்தையும் தங்களிடம் வைத்திருந்தனர். வழிபாட்டுக்குரிய உரிமைகளை நிர்ணயித்த அவர்கள், கோயில் பணிகளில் உடல் உழைப்பு, இழி தொழில்களை செய்வதில் ஒவ்வொரு ஜாதிக்கும் கடமைகளைத் திணித்தார்கள். இதற்கெல்லாம் அடிப்படையான சமூக விதிகளை உருவாக்கித்தந்தது. மனுசா°திரம். சூத்திரர்கள் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமையை மனுசா°திரம் மறுத்தது. பார்ப்பன, சத்திரியர் உள்ளிட்ட மேல் வர்ணத்தார், தனக்குக் கீழான மக்கள் மீது வன்முறைகளை நடத்தும் உரிமையை அது வழங்கியது. எதிர்த்துப் போரிடும் உரிமையற்றவர்களாக ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ ஆக்கப்பட்டனர்.
திப்புசுல்தான் ஆட்சியின்போதுதான் பார்ப்பன வெள்ளாள ஆதிக்க ஜாதி, நெருக்கடியை சந்தித்தது, அவர்கள் நிலங்களை அப்படியே விட்டுவிட்டு இடம் பெயரத் தொடங்கினார்கள். அந்த நிலங்களைத் தான் இடைநிலை ஜாதியினர் கைப்பற்றினர்.
பிரிட்டிஷ் காலனி ஆட்சி ஒரு’ நிர்வாக அமைப்பு முறையைக் கொண்டு வர முயற்சித்தது. ஏற்கெனவே கிராமங்களில் இறுக்கமாகியிருந்த ஜாதிய கட்டமைப்பு நிர்வாகத்துடன் பிரிட்டிஷ் நிர்வாகத்தைப் பொறுத்தும்போது ஏற்கெனவே திப்புசுல்தான் ஆட்சியில் ஓரளவு நிலைகுலைந்து நின்ற கிராமிய ஜாதியமைப்பை மீண்டும் உறுதியாக்கும் நடவடிக்கைகளையே பிரிட்டிஷ் ஆட்சி மேற்கொண்டது.
பார்ப்பன வேளாளர்களுக்கு நில உரிமைகளை மீண்டும் வழங்கி, அவர்களை மறு குடியமர்த்துவதற்கு வருவாய்த் துறைகள் உருவாக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியில் ‘துபாஷ்’ என்ற மொழி பெயர்ப்பாளர்கள் பதவிகளில் பார்ப்பனர்களே இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் அதிகாரம் செலுத்தியவர்கள் பார்ப்பன வேளாளர்களாக இருந்த அதிகாரிகள் வழியாகவே தீண்டப்படாத, பின் தங்கிய ஜாதியினர் தங்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டியிருந்தது. எனவே, பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அந்தக் கோரிக்கைகள் போய்ச் சேராமலேயே தடுக்கப்பட்டன. டேவிட் லிட்டன் தனது ஆய்வில் கிராம ஜாதி ஒழுங்கை மறு கட்டமைப்பு செய்வதற்கு கோயில் திருவிழாக்கள் பயன்படுத்தப்பட்டதை விரிவாக ஆராய்கிறார். கோயிலில் நுழையும் உரிமைகளோடு சமூகப் பொருளாதார உரிமைகள் இணைந்திருந்தன. அப்போது தனிமனித சொத்துரிமை என்று தனியாக எதுவும் கிடையாது. 1892இல் தீண்டப்படாத மக்களுக்கு நிலம் வழங்கும் அரசாணை வந்தது. அதற்குப் பெயர்பஞ்சமி நிலம். பஞ்சமி நிலம் கிடைத்தவர்கள் அங்கே கிணறு வெட்டக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது என்று கூறிய பேராசிரியர் ஜெரோம், பல்வேறு இனக் குழுக்கள், ஜாதிக் கட்டமைப்புக்குள் வந்ததற்குக் காரணம் ஜாதியத்தின் நெகிழ்ச்சிப் போக்கே என்று ரொமிலா தாப்பர் போன்ற ஆய்வாளர்கள் கருத்து சரியானது அல்ல என்றார். ஜாதியக் கட்டமைப்புக்கு வெளியே அவர்கள் வாழ முடியாது என்ற அளவுக்கு அந்த அமைப்பு இறுக்கம் பெற்றிருந்ததே இதற்குக் காரணம் என்றார்.
புதிய தமிழ் ஆய்வுகள் நடத்திய இரண்டாவது கூட்டம் இது. முதல் கூட்டத்தில் விடுதலை இராஜேந்திரன், “தமிழ்நாட்டில் வெகு மக்கள் அரசியலில் பெரியார் இயக்கத்தின் நவீனத்துவ பங்களிப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். “சமகால சமூக-அரசியல்-பொருளாதாரம் குறித்து விரிவான ஆய்வுகளை முன்னெடுப்பதே இந்த அமைப்பின் நோக்கம்” என்பதை அறிமுக உரையாற்றிய வளர்மதி விளக்கினார். – நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 03092015 இதழ்

You may also like...

Leave a Reply