இராமாயண எரிப்பு ஏன்?

இராமாயணத்தை ஆரியர் – திராவிடர் போராட்டம் என்றும்; ‘இராமாயணக் கதை திராவிடரை இழிவுபடுத்துவதற்காகவே ஆரியர்களால் கற்பனை செய்யப்பட்ட கட்டுக்கதை’ என்றும்; ‘இராமாயணக் கதை ஆரியருக்குத் திராவிடர்கள் மீது இருந்த வெறுப்பைக் காட்டுவதற்கென்றே ஆரியரால் (பார்ப்பனரால்) புனையப்பட்ட கதை’ என்றும்; ‘இராமன் ஆரியத் தலைவன் – இராவணன் திராவிட அரசன்’ என்றும்; மற்றும் ‘இராமாயணம் புத்தனுக்குப் பின் கற்பனை செய்து பார்ப்பனரால் எழுதப்பட்டது’ என்றும்; ‘இராமாயணம் நடந்த கதையல்ல, சரித்திரத்தில் பட்டது அல்ல, நீதியும் அல்ல’ என்றும்; ‘இராமாயணம் பார்ப்பனர்கட்கு அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைத் தொகுப்பு’ என்றும் – மற்றும் பலவாறாகச் சரித்திர ஆசிரியர்கள் முதல் ஆய்வாளர்கள் உள்படப் பார்ப்பனராலும், வெளிநாட்டு அறிஞர்களாலும், சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழறிஞர்களாலும் ஆதாரங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றிற்கு ஆதாரங்களும் நம்மிடம் இருக்கின்றன. அவைகட்கு அன்று முதல் இன்று வரை எந்த அறிவாளியும் – தமிழரில் எந்தப் புலவரும் ஆட்சேபணையோ, மறுப்போ கூறியது கிடையாது.
மற்றும், இந்த இராமாயணத்தைப் பற்றி அதில் காணப்படும் ஆபாசங்களுக்கு, ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு, அநீதிகளுக்கு நாளதுவரை எந்தப் புலவரும் மறுப்புக் கூறியதும் கிடையாது.
இப்படிப்பட்ட நிலையிலுள்ள இராமாயணத்தைக் கடவுள் கதையாகப் பாவித்து, பாமர மூட மக்களிடம் புலவர்கள் புகுத்தி, அதில் பயன் பெறுகிறார்கள் என்றால் – இதற்கு எதை ஒப்பிடுவது? இப்புலவர்களுக்கு எதை உதாரணமாக்குவது?
தோழர்களே! சிந்தியுங்கள்! நன்றாய்ச் சிந்தியுங்கள்!
புலவர்களுக்குப் புத்தி, மானம் இல்லாவிட்டாலும் நீங்களாவது கொளுத்துங்கள் கம்ப இராமாயணத்தை!
‘விடுதலை’ – தலையங்கம், 276.10.1972

பெரியார் முழக்கம் 15012015 இதழ்

You may also like...

Leave a Reply