சங்கராபுரத்தில் பறை முழக்கத்துடன் வரவேற்பு ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி கழகம் தயாராகிறது!

திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களின் 3ஆம் கட்டப் பயணம், ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கியது. இந்தப்பயணத்தில் கழகப் பொறுப்பாளர்களுடன் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரனும் பங்கேற்றார்.

தஞ்சை

தஞ்சை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல், ஆக.12ஆம் தேதி பகல் 11 மணியளவில் பட்டுக்கோட்டை ‘அரசு பிளாசா’ அரங்கில் தொடங்கியது. அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கடவுள், ஆத்மா மறுப்புகளைக் கூறி, தொடக்க உரை நிகழ்த்தினார். தோழர்கள் கு.பாரி, சி.த. திருவேங்கடம், அ.கோவிந்தன், மூத்த பெரியார் தொண்டர் ப.வைத்தியலிங்கம், ப.ஜெயச்சந்திரன், வடசேரி சிவசுப்ரமணியன், கார்த்திகேயன், பள்ளத்தூர் நாவலரசன், கரிகாலன், பசு. கவுதமன், பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோரைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” – என்ற முழக்கத்தை முன் வைத்து கழகம் திட்டமிட்டுள்ள பரப்புரை இயக்கத்தை மாவட்டத்தில் நான்கு நாட்கள் நடத்துவதாக தோழர்கள் தெரிவித்தனர்.

நூறு வயதைக் கடந்த மூத்த பெரியார் தொண்டர் வைத்தியலிங்கம், ரூ.10,000-த்துக்கு கழக நூல்களை சொந்தப் பொறுப்பில் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை தோழர்கள் பலரும் வலியுறுத்தினர். குறைந்த செலவில் ஒரு நாள், இரண்டு நாள் பயிற்சி வகுப்புகளை நடத்த தோழர்கள் திட்டமிட்டால், பொறுப்பாளர்கள் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று கழகத் தலைவர் அறிவித்தார்.

மன்னார்குடி

ஆகஸ்டு 12ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் மன்னார்குடி மதர்சா அரங்கில் திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது. கடவுள், ஆத்மா மறுப்பு உறுதி ஏற்பைத் தொடர்ந்து, இரா. காளிதாசு வரவேற்புரையாற்றிட பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து ஆசிரியர் கலைபாரதி, சசிகுமார், கோவில் வேள்ளி செந்தமிழன், முருகன், ஃபிளக்ஸ் முரளி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி உரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். மாவட்டத்தில் பரப்புரைப் பயணத்தை 6 நாள்கள் நடத்துவதாக மாவட்ட கழக சார்பில் காளிதாசு அறிவித்தார். பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். கல்லூரி மாணவர்களிடம் பெரியார் கருத்துகளைக் கொண்டு செல்ல வேண்டும். செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி, பெரியார்- அம்பேத்கர் கொள்கைகளை விளக்க வேண்டும். பெரியார் பிறந்த நாள் விழாவை கொள்கைப் பரப்பும் நாளாக பின்பற்ற வேண்டும் என்ற கருத்துகளை தோழர்கள் வலியுறுத்தினர்.

 

மயிலாடுதுறை

ஆகஸ்டு 13ஆம் தேதி பகல் 11.30 மணியளவில் நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், சின்னகடை வீதியிலுள்ள ஆர்.ஓ.ஏ. கட்டிடத்தில் தொடங்கியது. அன்பு, கடவுள், ஆத்மா மறுப்பு உறுதி மொழிகளைக் கூறினார். மகேஷ் வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பரப்புரைக் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். கழகத் தோழர்கள் மகாலிங்கம், வழக்கறிஞர் இளையராஜா, ‘புத்தகச் சோலை’ விஜி, செந்தில், மாணவர் சுரேஷ், ஜீவன் ராஜ், குவைத் செந்தில்நாதன், யுவராஜ், சரவண குமாரி, பூம்புகார் முருகன், கோவி. அசோகன், உதயகுமார், வழக்கறிஞர் நன்மாறன், இரமேஷ் ஆகியோர் உரையாற்றினர். அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். கீழ்க்கண்ட கருத்துகளை தோழர்கள் முன் வைத்தனர்.

மயிலாடுதுறையில் கழகத்தை வளர்ப்பதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. நாம்தான் அதைப் பயன்படுத்தாமல் இருக்கிறோம். இனியாவது, நமது பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். ஜாதிய உணர்வுகள் வேகமாக பரவத் தொடங்கியிருப்பதால், நமது ஜாதி எதிர்ப்பு இயக்கமும் தீவிரமாக வேண்டும். அவ்வப்போது குறைந்தது இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது துண்டறிக்கைகள் வழியாக கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் இயக்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். வாழ்க்கையோடு இணைந்த ஒரு பகுதிதான் நமது சமூகச் செயல்பாடு.கலை வடிவங்கள் வழியாக பரப்புரைக்கு திட்டமிடல் வேண்டும். இது மக்களிடம் எளிதில் சென்றடைகிறது என்ற கருத்துகளை தோழர்கள் முன் வைத்தனர். பகல் 2 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.

கம்மாபுரம்

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், கம்மாபுரத்தில் ஒரு திருமண கூடத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கியது. கடவுள்-ஆத்மா உறுதி யேற்புக்குப் பிறகு அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். பாரதிதாசன் வரவேற்புரையாற்றினார். இந்த கலந்துரையாடல் கூட்டம். பயிற்சி வகுப்பாகவே நடந்தது. பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத்தின் அடிப்படையான கொள்கைகளை விளக்கிப் பேசினர். கழகத் தோழர்கள் மதன்குமார், பாலகுமாரன், அம்பேத்கர், செந்தில் ராஜா ஆகியோரைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் துரைசாமி பேசினார். இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து புதிதாக கடலூர் மாவட்டத்தில் உருவாக்கியுள்ள அமைப்பு இதுவாகும். சில மாதங்களுக்கு முன் விருத்தாசலத்தில் இந்தத் தோழர்கள் கழகத் தலைவரை அழைத்து சிறப்பான பொதுக் கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும். பரப்பரைப் பயணத்தையும் பயிற்சி முகாமையும் நடத்த தயாராக இருப்பதாக தோழர்கள் தெரிவித்தனர்.

சங்கராபுரம்

ஆகஸ்டு 14ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் பகல் 11.30 மணியளவில் சங்கராபுரத்தில் வாசுகி திருமண மண்டபஅரங்கத்தில் தொடங்கியது. முன்னதாக, கள்ளக்குறிச்சியிலிருந்து புறப்பட்டு, சங்கராபுரம் வந்து சேர்ந்து, கழகப் பொறுப்பாளர்களை நகரத்தின் மய்யப் பகுதியிலிருந்து பறை இசை முழக்கத்தோடு தோழர்கள் வரவேற்று, கூட்டம் நடைபெறும் மண்டபம் வரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த கடை வீதியில் கருஞ்சட்டைத் தோழர்கள் ஊர்வலமாக வந்த காட்சியை பொது மக்கள் பெருமளவில் திரண்டு பார்த்தனர்.

அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கடவுள் ஆத்மா மறுப்புக் கூறி, கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார்-விழுப்புரம் மாவட்டக் கழகம், பல்வேறு உள்ளூர் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து களத்தில் போராடுவதை விளக்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பரப்புரைப் பயணத்தின் நோக்கங்களையும், ஜாதி வெறியூட்டக் கிளம்பியிருக்கும் ஜாதி சங்கத்தின் சுயநலத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து தோழர் வெற்றிவேல், “பெரியார் காலத்துக்குப் பிறகு அவரது கொள்கைக்கு எதிராக உருவாகியுள்ள புதிய ஆபத்துகளை சுட்டிக்காட்டினார். முதலாளித்துவம் வளர்ந்து, மூடநம்பிக்கைகளை பரப்புகிறது. தமிழ் தேசியம் பேசுவோர் ஜாதி தேசியம் பேசுகிறார்கள். சமூக, விடுதலைக்கும் புரட்சிக்கும் வழி காட்டிய பெரியார், சேகுவேரா, மாாக்ஸ், அம்பேத்கர் போன்ற தலைவர்களை இவர்கள் ‘தமிழர்கள் அல்ல’ என்று கூறி ஒதுக்கி வள்ளுவரும், வள்ளலாரும்தான் ஜாதி எதிர்ப்பைப் பேசியதாகக் கூறுகிறார்கள். நாமும் இவர்களை மதிக்கிறோம். வள்ளுவர் தனது கருத்துகளை எழுத்தில் வடித்தார். வள்ளலார், தான் வாழ்ந்த இடத்துக்கு மக்களை அழைத்துப் பேசினார். ஆனால், மக்களிடம் சென்று, எதிர் நீச்சல்போட்டு இயக்கங்களை நடத்தியது இல்லை. இந்தத் தலைவர்கள் வாழ்ந்த காலத்தைவிட, பெரியார் வாழ்ந்த காலம் அறிவியல் வளர்ந்த காலம். எனவே சமுதாய மாற்றத்துக்கு அறிவியலைப் பயன்படுத்த வேண்டும் என்ற பார்வை பெரியாருக்கு இருந்தது. அதனால்தான், தமிழ் அறிவியல் மொழியாக்கப்பட வேண்டும் என்ற கவலையில் தமிழ்மொழி பற்றிய தனது கருத்துகளை துணிவுடன் வெளியிட்டார். இதற்காக பெரியாரை தமிழின் எதிரியாக சித்தரிக்கிறார்கள். கோயில்களில் இப்போது ஏராளமான புதிய சடங்குகளை உருவாக்கி விட்டார்கள். சடங்குகள் வழியாக மக்களிடையே கடவுள் நம்பிக்கையை தீவிரமாகப் பரப்புகிறார்கள். கோயில் வழிபாட்டு முறைகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவந்து விட்டார்கள். இந்த மாற்றங்களையும் சடங்குகளையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

செஞ்சி சாக்ரட்டீஸ் பேசுகையில்: “மாணவர்கள், இளைஞர்களிடையே பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும். பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து தோழர்கள் நாவாப்பிள்ளை, பெரியார் வெங்கட், மதியழகன், தமிழ்க் குமரன், இராமன், பொருளாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி பொறுப்பாளர்களை அறிவித்தார். வெங்கடேசன் நன்றி கூற, பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது. அடுத்தக் கட்ட மாவட்டக் கலந்துரையாடல் ஆகஸ்டு 18இல் சிவகங்கையிலிருந்து தொடங்குகிறது.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 20082015 இதழ்

You may also like...

Leave a Reply