பார்ப்பன பல்லக்கு சவாரி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் கோயிலில் இப்போதும் பார்ப்பன பல்லக்குச் சவாரி நடக்கிறது. வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரைக் கோயிலில் இருந்து அவரவர்களின் வீட்டுக்கு ‘சூத்திரர்’கள் பல்லக்கில் சுமந்து செல்ல வேண்டுமாம். ‘சொர்க்க வாசல்’ திறப்புக்குப் பிறகு ஆண்டுதோறும் ‘பிரம்ம ரத மரியாதை’ என்ற பெயரில் இது நடக்கிறது. சீமான் தாங்கி என்றும் இதற்குப் பெயர் உண்டாம். சூத்திர பக்தர்களுக்கு ‘சொர்க்க வாசலை’ திறக்கும் இந்த பார்ப்பனர்கள், தாங்கள் மட்டும் சொகுசாக பல்லக்கில் சொந்த ‘வீடு’ போய்ச் சேர்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் அறநிலையத் துறை இதை தடை செய்தது. அதை எதிர்த்து ஸ்ரீரங்கம் அர்ச்சகப் பார்ப் பனர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கு தொடர்ந்த பார்ப்பனர்களைக் கண்டித்து வழக்கையும் தள்ளுபடி செய்தது.
மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பார்ப்பன ‘பல்லக்கு சவாரி’, இந்த ஆண்டு நீதிமன்றத் தடையையும் மீறி நடத்தப்பட்டுள்ளது. 24.11.2012இல் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பல்லக்கில் சுமக்க விதித்தத் தடையை பார்ப்பனர்கள் இந்த ஆண்டு மீறும்போது அறநிலையத் துறை தட்டிக் கேட்காமல் வேடிக்கைப் பார்க்கிறது. தி.வி.க., த.பெ.தி.க., தி.க., ம.க.இ.க. அமைப்புகள் இதைப் எதிர்த்து மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறது. பார்ப்பனர்களை ‘சூத்திரர்கள்’ தோளில் சுமக்கும் இழிவு இப்போதும் தொடரு கிறது. ஊடகங்களும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரத் தயாராக இல்லை. ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்று கூப்பாடு போடும் பா.ஜ.க. பரிவாரங்கள், ‘சூத்திர’ இந்துக்கள், ‘பார்ப்பன’ இந்துக் களை தூக்கிச் சுமப்பதைக் கண்டிக்கவும் தயாராக இல்லை.
கருநாடகத்தில் ‘சுடுகாடு பேதம்’ ஒழிப்பு
கருநாடக அரசு ‘சுடுகாட்டில்’ ஜாதி பேத்தை ஒழிக்க முன் வந்திருக்கிறது. மாநிலத்தில் கிராமங்களிலுள்ள சுடுகாடுகள் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்று கருநாடக வருவாய்த் துறை அமைச்சர் வி. சிறீனிவா° பிரசாத் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு தேவையான உத்தரவுகளை துணை ஆணையர்களுக்கு பிறப்பித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இது, பாராட்டி வரவேற்க வேண்டிய நடவடிக்கை. ஏற்கெனவே கருநாடக அமைச்சர் ஒருவர், பேய், மூட நம்பிக்கைகளை எதிர்த்து இரவு முழுவதும் சுடுகாட்டில் படுத்துக் காட்டினார். கருநாடக அரசு ‘பகுத்தறிவு நாள்’ கடைபிடிக்கும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அண்மையில் வெளியிட்டுள்ளார். அனைத்தும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்.
திருப்பயணமா? ஓட்டுப் பயணமா?
‘திருவள்ளுவர் திருப்பயணம்’ என்ற பெயரில் ‘தருண் விஜய்’ என்ற வடநாட்டு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்கிறார். தமிழ் நாட்டில் பா.ஜ.க. ஓட்டு வங்கிக்கு திருவள்ளுவரைப் பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தோடு இந்தப் பயணத்துக்கு ஏற்பாடுகளை செய்தார்கள். ஆர்.எ°.எ°. மற்றும் அகில இந்திய வித்யாதி பரிஷத் அமைப்புகள் இதற்கான பயணத் திட்டங்களை வகுத்தன. இதற்கான பொறுப்பு – வானதி சீனிவாசன், சடகோபன், சாம்பமூர்த்தி, பக்தவத்சலம் ஆகியோரிடம் ஒப்படைக்கப் பட்டதாம். இந்தப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி ஜன. 15 ஆம் தேதி மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தருண் விஜய், “திருவள்ளுவர் ‘வள்ளுவர்’ ஜாதியில் பிறந்தவர்” என்று கூறிக் கொண்டு, அந்த ஜாதிப் பிரிவினரை அழைத்துப் பேசினாராம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்று கூறிய வள்ளுவரையும் ஜாதி அடையாளத்துக்குள் திணிக்கவே இவர்கள் விரும்புகிறார்கள். தருண் விஜய் என்பவர், “சம°கிருதம்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்” என்று ‘டைம்° ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு பேட்டி அளித்தவர். ஆர்.எ°.எ°. ஏட்டுக்கு ஆசிரியராக இருந்தவர். கவிஞர் வைரமுத்து போன்ற கடவுள் மத எதிர்ப்பாளர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்கிறவர்கள்கூட, தருண் விஜய்க்கு ஆதரவு காட்டுவது வியப்புக்குரியது. தமிழ் வளர்த்த ஜி.யு. போப், வீரமா முனிவர் மீதுகூட மதத்தைப் பரப்ப வந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டதாக கூறி வைரமுத்து தருண் விஜய்க்காக வாதாடுகிறார். ஜி.யு. போப், வீரமா முனிவரோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு ‘தருண் விஜய்’ உயர்ந்து நிற்கிறாரா? தமிழ்நாட்டுக்குள் ‘திருக்குறளை’ பரப்ப ‘தருண் விஜய்’ என்ற வடநாட்டுக்காரர் தான் வர வேண்டுமா? ‘திருக்குறள்’ கூறும் கருத்துகளில் உண்மையிலேயே தருண் விஜய்க்கு நம்பிக்கை இருந்தால் ‘மனு தர்ம’த்தை எதிர்க்க வேண்டுமே! ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனுதர்மக் கூட்டம், அதற்கு நேர் எதிராக எழுதிய திருவள்ளுவரை ஏன் கையில் எடுக்கிறது? அதன் அரசியல் நோக்கம் என்ன என்பதை வைரமுத்து போன்றவர்கள் சிந்திக்க வேண்டாமா?
பெரியார் முழக்கம் 22012015 இதழ்