பாஜகவை மகிழ்விக்க குரியன் ஜோசப் ஆணையம் கலைப்பா?

மாநில உரிமைகள் குறித்து ஆராய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட குரியன் நீதிபதி ஜோசப் குழுவைக் கலைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மிகவும் அற்பத்தனமான நடவடிக்கையாகும். இது வன்மையானக் கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக மாநில உரிமைகளே தங்களுக்குத் தேவை இல்லை என்று காட்டுவது போல ஒன்றிய ஆட்சியை மகிழ்விக்கும் இந்த முடிவை தவெக ஆட்சி எடுத்திருக்கிறது.
இந்தக் குழுவைக் கலைப்பதற்கு காரணம் கண்டுபிடித்திருக்கிற ‘அறிவாளிகளுக்’கு நோபல் பரிசுதான் தரவேண்டும். அதாவது இந்த குழுவுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று கூறி, தமிழ்நாடு அரசின் சட்ட ஆணையத்திடம் குழுவின் பரிந்துரைகளை ஒப்படைத்திருக்கிறார்கள். அந்தச் சட்ட ஆணையமே சட்ட அங்கீகாரம் பெற்றதில்லை என்பது கூட இந்த அதிமேதாவி ஆட்சிக்குத் தெரியவில்லை.

ஒன்றிய பாஜக ஆட்சி மாநில உரிமைகளைப் படிப்படியாக பறித்து ஒற்றை ஆட்சி நோக்கி நாட்டைக் கொண்டுபோகும் நிலையில் இந்த ஆணையத்தின் செயல்பாடு எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அரசியல் பக்குவம் வேண்டும்‌. இந்த ஆட்சியிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

தமிழ்நாட்டில் சமூக நீதி ஆய்வு மையம் ஒன்றை அமைக்கப் போவதாக கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த ஆய்வையும் சட்ட ஆணையத்திடமே ஒப்படைத்திருக்கலாமே; எதற்காக வேறு ஒரு ஆணையம்? இதிலிருந்து இவர்கள் இந்தக் குழுவைக் கலைப்பதற்குக் காரணம் அப்பட்டமான கட்சி அரசியல் என்பது பச்சையாகத் தெரிகிறது. சமூக நீதிக்குக் குழிபறிக்கும் ஒன்றிய ஆட்சியின் அண்மைக்காலச் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் விஜய் ஆட்சி குறட்டை விட்டுத் தூங்குகிறது.

மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமிலேயர் என்ற வருமான வரம்பை 1993ல் அறிமுகப்படுத்திய போது பெற்றோரின் மாத ஊதியம் மற்றும் விவசாயம் மூலம் வரும் வரவு ஆகியவற்றை வருமான வரம்பில் சேர்க்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஒன்றிய ஆட்சி கிரிமிலேயரில் மாத ஊதியத்தையும் விவசாய வருமானத்தையும் சேர்க்க வேண்டும் என்று சமூக நீதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாதாடியது. நவ.7, உச்சநீதிமன்றம் ஒன்றிய ஆட்சியின் வாதத்தை நிராகரித்திருக்கிறது.

இதே போல் பல்கலைக் கழகங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக இழைக்கப்படும் பாகுபாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என்று பல்கலைக்கழக மானியக் குழு விதிகளைத் திருத்தியது. பார்ப்பன மாணவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்து வட மாநிலங்களில் வீதிகளில் இறங்கி போராடியதோடு தங்களுக்கு எதிராகவும் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற பச்சைப் பொய்யைக் கூறி இந்த விதியை நீக்க வேண்டும் என்றார்கள். இப்போது பார்ப்பன உயர் ஜாதி பிரிவினரைத் திருப்திப்படுத்த இந்த விதியைத் திரும்பப் பெற ஒன்றிய ஆட்சி முடிவெடுத்திருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சி நடந்திருக்கும் என்று சொன்னால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதற்கான கண்டனக் குரலை எழுப்பியிருந்திருப்பார் என்பதை கடந்தகால வரலாறுகள் உணர்த்துகின்றன. ஆனால் இன்றைய ஆட்சி இதற்கெல்லாம் வாய்த் திறந்து ஒரு கண்டனத்தையும் தெரிவிப்பதில்லை. அதே நேரத்தில் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை கலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய அரசியல் சூழலில் மாநிலங்களுக்கான உரிமை முழக்கம் இந்துத்துவ எதிர்ப்பையும் சமூக நீதி பாதுகாப்பையும் உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் முடிவுகளை சில சோதிடர்களும் ஒன்றிய ஆட்சியின் கைப்பாவையான சில அதிகாரிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி மாநில உரிமைகளுக்கான குழுவை கலைத்திருப்பதன் வழியாக மாநில உரிமைகளைக் கலைத்துப் போட்டிருக்கிறது. – விடுதலை இராசேந்திரன்
பெரியார் முழக்கம் இதழ் 12112026

You may also like...