திராவிடர்களை அவமதிக்கும் ‘ராமலீலா’

நவராத்திரி பண்டிகையில் டெல்லியில் ராவணன் உருவத்தைத் தீ வைத்து எரித்துக் கொண்டாட்டம் போடுவது திராவிடர்களை அவமதிப்பது அல்லவா?

வேத காலங்களில் பிராமணர்களின் அட்டூழியங்களை எதிர்த்தவர்களை எல்லாம் அசுரர்கள் என்ற முத்திரை குத்தி அவர்களை அழிப்பதற்காக அவதாரம் எடுத்து வந்தவர்கள் எல்லாம் இப்போது கடவுளாக மாற்றப்பட்டு விட்டார்கள். இப்போது எரிப்புப் பட்டியலில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியையும் சேர்த்து இருக்கிறார்கள் என்ற செய்திகள் வருகின்றன. ராமராஜ்ய ஆட்சியைக் கேள்வி கேட்பதால் இவர்களையும் அரக்கர் பட்டியலில் சேர்த்து விட்டார்கள்.

பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்து வேதங்களையும் யாகங்களையும் நடத்தி, உணவுப் பொருள்களையும் விவசாயக் கருவிகளான கால்நடைகளையும் நெருப்பில் போட்டு எரித்ததை எதிர்த்து கேள்வி கேட்டவர்களை அசுரர்கள் என்றார்கள்; அதாவது பிராமணர்கள் அன்று குடித்து வந்த டாஸ்மாக் சரக்கான `சுரா’ பானத்தைக் குடிக்காதவர்கள் அசுரர்கள் குடித்துக் கும்மாளம் போட்டவர்கள் சூரர்கள், அதாவது தேவர்கள். எப்படி இருக்கிறது கதை?

ராமாயண காலத்தில் இந்து மதமோ கோயில்களோ சடங்குகளோ இல்லை. பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வர்ணாஸ்ரமம் மட்டுமே இருந்தது. அதைக் காப்பாற்றுவதற்காக ராமன் வந்தான் என்று ராமாயண கதைகளே கூறுகின்றன. வனவாசம் போவதற்கு முன் வேத பிராமணர்களை மட்டும் அழைத்து அவர்களுக்குச் செல்வங்களை வாரி வழங்குகிறான். இராமன் காட்டில் தன்னைச் சந்திக்க வந்த பரதனிடம் பிராமணர்கள் மனம் வருந்தாமல் நடந்துகொள் என்று எச்சரிக்கிறான். மீண்டும் ஆட்சிக்கு வந்து அரசனான பிறகு சூத்திரன், சம்பூகன் பிராமணர்களுக்கே உரிய தவத்தைச் செய்தான் என்பதற்காக பிராமணர்களின் முறையீடுகளை ஏற்று சம்பூகனுக்கு விசாரணை ஏதும் நடத்தாமலே மரண தண்டனை வழங்குகிறான். அவனது ஆட்சியின் முதல் சாதனையே இதுதான்!

வால்மீகியின் முதல் இராமாயணம் ராமனை கடவுளாகவே கூறவில்லை; சாதாரண மனிதன் என்றுதான் கூறுகிறது. இந்துத்துவவாதிகள் கொண்டாடும் விவேகானந்தரும், ராமன் ஒரு கடவுள் அல்ல என்ற கருத்தைத்தான் கூறியிருக்கிறார். பிற்காலத்தில் எழுதப்பட்ட ராமாயணங்கள்தான் ராமனை கடவுளாக உயர்த்தின. இராவணனை தெய்வமாகக் கொண்டாடும் மக்கள் இப்போதும் பல மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ அல்ல! இராவணன் உருவத்தை எரிப்பது அவர்கள் மனதைப் புண்படுத்தாதா?

திராவிடர் இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ராமாயணக் கதை என்பது ஆரிய திராவிடப் போராட்டம் என்று மக்களிடையே எடுத்துக் கூறி தன்மான உணர்வைத் தட்டி எழுப்பினார்கள். நேரு உள்ளிட்ட ஆய்வாளர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தினர். பார்ப்பனர்களின் தலைவர் ராஜாஜி `கல்கி’ வாரப் பத்திரிக்கையில் `சக்கரவர்த்தி திருமகன்’ என்ற தலைப்பில் ராமன் பெருமைகளைத் தொடராக எழுதியபோது கலைஞர் முரசொலியில் `மூக்காஜி’ என்ற பெயரில் ஒவ்வொரு வாரமும் அதற்கு பதிலடி தந்தார்.

1955 மார்ச்-14ஆம் தேதி தொடர்களாக இந்த மறுப்புக் கட்டுரைகள் வெளிவந்தன. அதில் வடநாட்டில் ராமலீலாக்கள் தொடர்ந்தால் தென்னாட்டில் ராமனை எரிக்கும் ராவணலீலாக்கள் நடக்கும் என்று எச்சரித்தார். 1974 ஆம் ஆண்டு பெரியாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் பெரியார் திடலில் ராவணலீலா நடத்தி ராமன், லட்சுமணன், சீதை உருவப் பொம்மைகளை எரித்து வடநாட்டுக்கும் பார்ப்பனர்களுக்கும் பதிலடி தந்தார். தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகம் மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் பதிலடியாக ராவண லீலாக்களை நடத்தியது; தோழர்கள் கைதானார்கள்.

எதிரிகளை அழித்து ஒழிப்பது என்ற பயங்கரவாதத்தை கொண்டாடுகிறவர்கள் தான் ஜனநாயகப் போராளிகளை `அர்பன் நக்சல்கள்’ என்று தேசவிரோத முத்திரை குத்துகிறார்கள். சூழ்ச்சிகரமாக படுகொலை நடத்திய புராண பயங்கரவாதிகளை அவதாரங்கள் என்று புனிதப்படுத்துகிறார்கள். திராவிடர்களையும் இதைச் சிந்திக்க விடாமல் சிந்தனையில் திணித்து கொண்டாட வைத்திருப்பதுதான் பார்ப்பனியத்தின் உலக மகா சூழ்ச்சி! – விடுதலை இராசேந்திரன்
பெரியார் முழக்கம் இதழ் 29102026

You may also like...