நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு * ஈழத்தமிழர் உரிமைக்கு அய்.நா.வில் குரல் கொடுத்தவர் * மனித உரிமைப் போராட்டத்தில் தமிழருக்குக் கிடைத்தப் பெருமை.

நவி பிள்ளை என்கிற நவநீதம் பிள்ளை 1941 செப்டம்பர் 23ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் நடால் மாகாணம் டர்பன் நகரத்தில் தமிழ் வம்சாவழிக் குடும்பத்தில் பிறந்தார். அவரது மூதாதையர்கள் தமிழ்நாட்டில் பிறந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறிவர்கள்.அவர் தந்தை பேருந்து ஓட்டுனர். 1965-ல் சட்டத்தில் பட்டம் பெற்றார். 1988ல் `ஆர்வட்’ கல்லூரியில் பயின்று முதல் தென்னாப்பிரிக்கராகச் சட்டப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
1967இல் நடால் மாகாணத்தின் வெள்ளையரல்லாத முதல் பெண் வழக்குரைஞரானார். அது `இனஒதுக்கல்’ காலம் என்பதால் நீதிபதி அறைகளுக்குள் நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை. அவர் வழக்குரைஞராகப் பணியாற்றிய 28 ஆண்டுக் காலத்தில் ’இனஒதுக்கலுக்கு’ எதிராகத் தொடர்ந்து போராடினார். ’இனஒதுக்கல்’ சட்டங்களால் சிறைப்படுத்தப்பட்ட பலருக்காகவும் வாதாடினார். பெரும் போராட்டங்கள் நடத்தி ராபன் தீவில் சிறைப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பலருக்கும் வழக்குரைஞரைச் சந்திக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தார். குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கெனப் பாதுகாப்பு இல்லங்கள் நடத்தினார். ஈக்வாலிட்டி நவ் (இப்போதே சமத்துவம்) என்னும் பன்னாட்டுப் பெண்கள் அமைப்பை 1992இல் நிறுவினார்.
1995இல் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நெல்சன் மண்டேலா இவரைத் தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில் வெள்ளையரல்லாத முதல் பெண் நீதிபதியாக்கினார். அப்போதுதான் முதன் முதலாக அவருக்கு நீதிபதி அறைக்குள் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு சிலகாலம் பணியாற்றிய உடனேயே, அவர் ருவாண்டாவுக்கான பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக அய்.நா பொது அவையால் அமர்த்தப்பட்டார். அப்போதுதான் ஜீன்பால் அக்கேசு என்னும் வழக்கில் பாலியல் வல்லுறவும் வன்கொடுமையும் இனக்கொலையே என்ற வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த தீர்ப்பை அளித்தார். அப்போது நவநீதம் பிள்ளை கூறினார்: “காலங்காலமாகவே பாலியல் வல்லுறவு என்பது போர் வெற்றியாகவே கருதப்பட்டு வருகிறது. இப்போது அது போர்க் குற்றமாகக் கருதப்படும். நாம் இதன் மூலமாகத் தெரிவிக்க விரும்பும் அழுத்தமான செய்தி என்னவென்றால், வன்புணர்வை இனியும் போர் வெற்றிக்குக் கிடைத்த ஒரு விருதாகக் கருத முடியாது.”
2003 பிப்ரவரியில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிமன்றக் குழுவில் அமர்த்தப்பட்டார். 2008 சூலை 24ஆம் நாள் அய்.நா மனித உரிமைகள் அமைப்பின் உயர் ஆணையர் ஆனார். 2009 இல் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு முடிந்த நாள் தொட்டு இலங்கை உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்களையும் பிற மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்துவதிலும் அவற்றுக்கான நீதி கிடைக்கச் செய்வதிலும் அவர் ஆற்றிய அறிவார்ந்த, துணிவார்ந்த பங்கை உலகத் தமிழினம் மட்டுமல்ல, மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் மதித்துப் போற்றுவர். அவர் அய்.நாவின் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தபோது தான் போர்குற்ற விசாரணையை அய்.நா ஏற்றது. சிங்களத்தின் எதிர்ப்பையும் மீறி நவிபிள்ளை ஈழம் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து துணிவோடு கொழும்புவில் பேட்டியும் அளித்தார். 2014 ஆண்டு பிப்-24ம் தேதி நவி பிள்ளை தலைமையிலான அய்.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் இலங்கை தொடர்பான முக்கிய அறிக்கை வெளியிட்டது. அதே ஆண்டு மார்ச் மாதம் அய்.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. விசாரணை நடத்தும் அதிகாரம் அய்.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துக்குத் தரப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகள் மூலமாக இதைத் தடுக்க முயற்சித்தது இலங்கை. ஆனால் அதை மீறி செயல்பட்டார் நவநீதம் பிள்ளை.
இப்போது அய்.நா மனித உரிமை மன்றத்தின் சார்பில் தொடங்கப் பெற்றுள்ள பன்னாட்டுப் புலனாய்வுப் பொறியமைவைத் தக்கவாறு ஏற்படுத்துவதில் நவநீதம் பிள்ளை வகித்த பங்கு வரலாற்றில் என்றும் நினைக்கப்படும். தென்னாப்பிரிக்க நீதியியலாளரான நவி பிள்ளைக்கு 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதன் மூலம், நார்வே நோபல் குழு தனது நம்பகத்தன்மையை மீட்டெடுக்க முயன்றுள்ளது. அண்மைக் காலங்களில் சர்ச்சைக்குரிய முடிவுகளால் அதன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டிருந்தது என்று `இந்து’ நாளேடு (ஆக-12) தலையங்கம் தீட்டியுள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 15102026

You may also like...