‘மநு’வுக்கு சவால் விடும் பன்றிகள்

உலகிலேயே முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்கு பொருத்தும் மருத்துவப் புரட்சி அமெரிக்காவில் மாசூசெட்ஸ் மருத்துவமனையில் நடந்து இருக்கிறது. டீம் ஆண்ட்ரூஸ் என்ற 66 வயது அமெரிக்கருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டு, 271 நாள் அவர் டயாலிசிஸ் சிகிச்சை இல்லாமல் உயிர் வாழ்ந்திருக்கிறார். உலகின் முதல் சாதனை இது என்று பிரபல ‘லேண்ட்செட்’ ஆராய்ச்சி‌ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.‌

கடந்த ஜனவரி-25,2025 பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்டவுடன் ஆண்ட்ரூஸ் உடல் அதை ஏற்றுக் கொண்டது. 14 வது நாளில் உடல் ஏற்க மறுத்தபோது மருத்துவர்கள் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். 6 மாதம் வரை சிறுநீரகம் நன்றாகவே வேலை செய்தது. டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படவே இல்லை. திடீரென்று உடலில் நோய் தொற்று ஏற்பட்டது. இது பன்றி சிறுநீரகத்தால் ஏற்பட்டது அல்ல. மருத்துவர்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை செய்தனர். ஆனாலும் சிறுநீரகத்தை உடலுடன் இணைக்கும் ரத்த நாளங்கள் செயலிழந்தது. இதனால் பன்றியின் சிறுநீரகம் வேலை செய்வதை நிறுத்திக் கொண்டது. இதற்குப் பிறகு பன்றியின் சிறுநீரகத்தை எடுத்து விட்டு மனித சிறுநீரகத்தை பொருத்தி நோயாளியை மருத்துவர்கள் காப்பாற்றி விட்டனர்.

பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் ஆய்வுகள் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகின்றன. இது முதல் கட்ட சாதனை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். உறுப்பு மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உறுப்புகள் கிடைப்பது அரிதாக இருக்கிறது.
இந்தியாவில் சிறுநீரக மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். ஆனால் 14 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே உறுப்புகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் உயிரைக் காப்பாற்ற அவசரமாக உறுப்புகள் தேவைப்படுபவருக்கு உடனடியாக பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி மாற்று சிறுநீரகம் கிடைக்கும் வரை உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் இந்த மருத்துவப் புரட்சியின் வெற்றி. பன்றியின் சிறுநீரக அளவு, அமைப்பு, தோற்றம் மனித சிறுநீரகம் போலவே இருக்கிறது என்பதால் பன்றியின் சிறுநீரகம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தலையில் இருந்து `பிராமணர்’களையும் காலிலிருந்து `பிராமணர்’களின் அடிமைகளான `சூத்திரர்’களையும் ‘பிரம்மா’வே படைத்தார் என்று மநு சாஸ்திரத்தை இங்கே பார்ப்பனர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த நான்கு வர்ணத்தையும் தானே படைத்ததாக கிருஷ்ண பகவான் கூறுவதாக பகவத் கீதையில் எழுதி வைத்துள்ளனர். மனித உறுப்புகளுக்கு வர்ணாசிரமப் பாகுபாடு கற்பித்த கூட்டம் உடலுக்கும் ஜாதிப் பாகுபாடுகளை திணித்தது. ’தீண்டப்படாத’ உடல்களை உருவாக்கியது. பெண்களுக்கான உடல்களை அடிமைப் பட்டியலில் சேர்த்தது. இப்போதும் பூணூல் அடையாளத்துடனான பார்ப்பன உடல் தான் கருவறைக்குள் நுழைகிறது. குடமுழுக்கு நடத்துகிறது. யாகசாலையில் வேத மந்திரம் ஓதுகிறது.
ஆனால் தலையில் பிறந்த உடலுக்கும், காலில் பிறந்த உடலுக்கும் நோய் உண்டு; பசி உண்டு; மனைவி உண்டு; குடும்பம் உண்டு; குழந்தைகள் உண்டு; ஏன், மரணமும் உண்டு.
`பிரம்மா’ உருவாக்கிய உடல்களைக் காப்பாற்ற இப்போது பன்றிகள் தான் உயிர்ப்பிச்சை தருகின்றன. எந்த ஒரு ஜாதிக்காரனும் தங்கள் குடும்பத்தினரின் உயிர் காக்க உறுப்புகளுக்காகக் காத்திருக்கும் போது ஜாதியைக் கேட்பதில்லை. உறுப்புகள் கிடைத்தால் போதும் ஜாதி வேண்டாம்; மதம் வேண்டாம் என்கிறார்கள்.
பெரியார் கேட்டார்;
“மனிதனிடம் தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும், அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன். மனிதனால் எண்ணப்படும், பேசப்படும், செய்யப்படும் காரியங்களில் எதிலாவது மற்ற ஜீவன்களை விட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா?என்று பார்த்தால் அவற்றில் மற்ற ஜீவன்களைவிடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றேனும் காண முடியவில்லை” என்றார்.
எந்த விலங்குகளும் ஜாதி பார்ப்பதில்லை; எந்தப் பறவைகளுக்கும் தீண்டாமை தெரியாது. மதங்களையோ, மத அடையாளங்களையோ ஏற்பதில்லை. ஆனால் `பகவான்’ படைத்தாகக் கூறும் வர்ணாஸ்ரம, ஜாதிய மனித உடல்களைக் காப்பாற்ற பன்றிகள் தான் தேவைப்படுகின்றன. ஆம் பகவத்கீதைக்கும் `மநு’வுக்கும் பன்றிகள் சவால் விடுகின்றன.
பெரியார் முழக்கம் இதழ் 24092026

You may also like...