பாரிஸில் பெண்களை அவமதித்த இந்து சாமியார்களுக்குக் கடும் எதிர்ப்பு

செப்டம்பரில் பாரிஸ் அருகே பிரான்சின் முதல் பெரிய இந்து ஆலயம் திறக்கப்படவுள்ளது என்று கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. பாரிஸ் அருகிலுள்ள புஸ்ஸி செயின்ட் ஜார்ஜஸ் பகுதியில் அமைந்துள்ள போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS)வின் சுவாமிநாராயண் இந்துக் கோயில் திறக்கப்படுவதையொட்டி, 2026 செப்டம்பர் 2 முதல் 14 வரை, 13 நாள் ‘கலாச்சாரத் திருவிழா’வுடன் கொண்டாட்டங்கள் இருப்பதாகவும் பெரிதாக விளம்பரப்படுத்தினார்கள். அதன் ஒரு பகுதியாக செப்டம்பர்-3 அன்று பாரிஸில் உள்ள செய்ன் நதியில் நடைபெறவிருந்த படகு ஊர்வலத்திற்கு முன்னதாக, ஈபிள் கோபுரத்திற்கு முன்பாக நடைபெற்ற மதச் சடங்கில் அந்த அமைப்பைச் சேர்ந்த துறவிகள் பங்கேற்றனர். பிறகு செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் சென்றனர். அப்போது அந்தக் கோபுரத்தை நிர்வகித்துவரும் ஈபிள் கோபுர நிர்வாக நிறுவனத்தாரிடம் அங்கு பணியில் உள்ள பெண்களை, இந்தத் துறவிகளின் கண்களில் படாமல் ஒதுங்கியிருக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அந்த நிறுவனமும் ஒப்புக் கொள்ளவே, பல பெண்கள், ஈபிள் கோபுரத்தின் பல பணிகளில் இருந்தும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பெண்களை மாற்றுப் பணிகளுக்கு அனுப்பியும், ஓய்வுக்கு அனுப்பியும் அலைக்கழிக்கப்பட்டனர்.
தங்கள் பணியிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அவமதிப்பைக் கண்டு ஈபிள் கோபுரப் பணியாளர்கள் சங்கத்தினர் கொதித்தெழுந்தனர். ஒரு நாள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டதால், ஈபிள் கோபுரம் ஒரு நாள் மூடப்படும் நிலை உருவானது. இது பிரான்சில் பலத்த எதிர்ப்பலையைத் தோற்றுவித்துள்ளது. பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பணியாளர் சங்கப் பிரதிநிதியான டயானா டெய்வோன் “இது ஊழியர்களிடமும், குறிப்பாகப் பெண்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது; நடந்த சம்பவங்களாலும், சிலர் நடத்தப்பட்ட விதத்தாலும் அவர்கள் அனைவரும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார். “இந்த அதிர்ச்சியான செய்தி, கண்டனத்திற்குரியது” என்று பாரிஸ் நகர மேயரும், ஈபிள் கோபுர நிறுவனத்தின் தலைவருமான ஏரியல் வீல் தெரிவித்துள்ளார்.
இது குறித்துக் கண்டனம் எழுந்ததும், “எங்களது சாதுக்களுக்கு எட்டடுக்கு பிரம்மச்சரிய ஒழுக்கம் உள்ளது. அதில் பெண்களுடன் பேசுதல், தொடர்பு கொள்ளுதல், அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவையாகக் குறிப்பிடப்படுகின்றன. இது பெண்களை இழிவுபடுத்துவதற்கான கொள்கை அல்ல; சாதுக்களின் ஆன்மிக ஒழுக்கம் என்று போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா கருதுகிறது” என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள் அந்தக் குழுவினர். ”யாரும் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்” என்று அறிவிப்பும் செய்திருக்கிறார்களாம்.
பாரிஸில் இந்தக் கோயிலைத் திறந்து வைத்தவர் பிரதமர் மோடி. பெண்களைப் பார்த்தாலே தீட்டு என்று கருதக்கூடிய ஒரு பார்ப்பன அமைப்புக்கு பிரதமர் குஜராத்திக்காரர் என்பதற்காக ஆதரவு தருகிறார்.
உலகப் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தில் இந்து தர்மத்தின் ‘பெண்கள் தீண்டாமையைத்’ திணிக்க முயல்வது வெட்கக்கேடானது. அதில் பணியாற்றும் பெண்கள் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர் ஒருநாள் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
பெரியார் முழக்கம் இதழ் 17092026

You may also like...