நீதித்துறையில் பார்ப்பன ஆதிக்கம் முன்னாள் நீதிபதி மனம் திறக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தீபக் குப்தா இணையதளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில், ‘‘அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உயர் ஜாதியினராகவே உள்ளனர். நீதிபதிகளாக நியமிக்க மற்ற ஜாதிகளிலும் மதங்களிலும் திறமையானவர்கள் இல்லையா? நான் நியமனங்கள் குறித்து சந்தேகம் கிளப்ப விரும்பவில்லை; ஆனால், நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து சமூக மக்களின் பிரதிநிதித்துவமும் இருப்பது அவசியம்.
நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறை எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. நீதித்துறையில் நேர்மையற்ற ‘கருப்பு ஆடுகளின்’ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘‘ஜாமீன்தான் விதி, சிறை என்பது விதிவிலக்கு” என்ற அடிப்படை சட்டக் கோட்பாடு இன்று முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது.
உமர் காலித் போன்றவர்கள் எவ்வித விசாரணையும் இன்றி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், சோனம் வாங்சுக் விவகாரத்தில் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் கையாண்ட விதமும் தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. அனைத்து மட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்கள் பெரும்பான்மை வாதத்தை நோக்கி நகர்ந்து வருவது ஜனநாயகத்திற்கு விடப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். ஞானவாபி மசூதி வழக்கில் தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி அளித்ததும், கங்கை நதியில் அசைவம் சாப்பிட்ட சிறுபான்மையினருக்கு பல மாதங்களாக ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அதே நதியில் மது அருந்திய பெரும்பான்மையினருக்குச் சில மணிநேரங்களில் ஜாமீன் வழங்கப்பட்டதும் நீதிமன்றங்களின் பாரபட்சத்தைக் காட்டுகிறது. அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்படும்போது நீதிமன்றங்கள் வெறும் மவுனப் பார்வையாளர்களாக மாறிவிட்டன. நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவது ஜனநாயகக் கட்டமைப்பிற்கே சாவுமணியாக அமையும் இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
பெரியார் முழக்கம் இதழ் 17092026

You may also like...