பரப்புரைக்கு தயாராவீர்

தமிழ்நாட்டில் சமூகத்திலும் வாழ்க்கையிலும் மாற்றங்கள் வந்தாலும் ஜாதி கட்டமைப்பு குலைந்துவிடவில்லை. பல்வேறு புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஜாதிக் குழுவும் தனக்கான பெருமைகளைப் பேசுகிறது. ஜாதிச் சங்கங்களை அமைக்கிறார்கள்; ஒவ்வொரு ஜாதிக்கும் திருமணத்திற்கு வரன் தேடித்தரும் அமைப்புகள் வந்துவிட்டன; தொலைக்காட்சிகளிலும் அவை விளம்பரம் செய்கின்றன.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே ஜாதி குறித்து ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்திய போது அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. பள்ளி கல்லூரி மாணவர்களிடையே 50% விழுக்காட்டிற்கும் மேல் ஜாதி உணர்வு இருப்பதையும் சமூக வலைதளங்களில் அவர்கள் ஜாதிப் பெருமைகளை பதிவு செய்து வருவதையும் அந்த ஆய்வு கூறுகிறது.

தமிழ்நாட்டில் பாஜக தனது `இந்துத்துவா’ அரசியலை வளர்ப்பதற்கு ஜாதிச் சங்கங்களை பெருமளவில் பயன்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் சமுதாயத்தில் ஜாதிக் கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்று கவலைப்படவே இல்லை. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் அடக்கம். அரசியலுக்குள் நுழைந்த தலித் அமைப்புகள் ஜாதிக் கலவரம், ஆணவப் படுகொலை நடக்கும் போது கண்டனம் ஆர்ப்பாட்டங்களோடு தங்கள் ஜாதி எதிர்ப்பு கடமைகளை முடித்துக் கொள்கின்றனர். அம்பேத்கரின் ஜாதி எதிர்ப்பு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் இயக்கங்களை நடத்துவது இல்லை; அவர்கள் நடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்!

திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து ஜாதி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தி வருகிறது. ஜாதி வாழ்வியல் எதிர்ப்புப் பயணம், அகமண முறை எதிர்ப்பு பரப்புரை, இரட்டை குவளை உடைப்பு போராட்டம், ஆணவப் படுகொலைகள் எதிர்ப்பு இயக்கம் என்று தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் களமாடி வருகிறது. சுயஜாதி அடையாளங்களில் இருந்து விடுவித்துக் கொண்டு சுயஜாதி மறுப்பாளர்களாக ஜாதி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தி வருவதுதான் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தனித்துவம்!

தமிழ்நாட்டில் ஜாதிக் கலவரங்கள் நடக்கும்போதும், ஆணவப் படுகொலை நடக்கும்போதும் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் தனது கண்டனங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறது. அதை நாம் பட்டியலிட முடியும்! உதாரணத்திற்கு சில:

பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சங்கரும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த கவுசல்யாவும் ஒருவரை ஒருவர் விரும்பி ஜாதி கடந்து வாழ விரும்பினர். அதற்காக பட்டப்பகலில் 2016 மார்ச்-13, அன்று உடுமலைபேட்டையில் கவுசல்யா கண்முன்னே சங்கர் படுகொலை செய்யப்பட்டார். திராவிடர் விடுதலைக் கழகம் நாடு முழுதும் கண்டன இயக்கங்களை நடத்தியது. கவுசல்யாவுக்கு உறுதியான ஆதரவைக் காட்டியது. ஒரு பெரியாரிய பெண்ணாக கவுசல்யா மாறினார்.

ஜாதி கடந்து வாழ விரும்பிய திவ்யா-இளவரசன் இணையர்களை ஜாதிவெறியர்கள் பிரித்தார்கள். காவல்துறை பாதுகாப்போடு திருமணம் செய்து 45 நாட்கள் வாழ்க்கையை நடத்திய பிறகு, வன்னியர் சங்கம் களத்தில் இறங்கி கலவரத்தை உருவாக்கி கடைசியில் இளவரசன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கதையோடு முடித்துவிட்டார்கள். திராவிடர் விடுதலைக் கழகம் இந்த ஜாதி வெறிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியது.

கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற ஜாதி சங்கத் தலைவன் யுவராஜ், ஜாதிமறுப்பு காதலர்களை மிரட்டி பிரிப்பதை தொழிலாக கொண்டவன். கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் படுகொலையில் கைது செய்யப்பட்டார். அப்போது கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்குப் பிறகுதான் அடுத்த இரண்டு நாட்களில் காவல்துறை அவனது சொத்துக்களை முடக்கியது.

பா.ம.க நிறுவனர் மருத்துவர். ராமதாஸ் தலித் அல்லாதோர் கூட்டணி ஒன்றை உருவாக்கி, தலித் எதிர்ப்பு இயக்கம் நடத்திய போது அந்த கூட்டங்கள் நடந்த ஊர்களில் எதிர்ப்பு கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

வைக்கம் நூற்றாண்டில் வெற்றிவிழா கொண்டாடவில்லை. மாறாக திராவிடர் விடுதலைக் கழகம் கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பின்பற்றப்படும் தீண்டாமைகளை நேரில் களஆய்வு செய்து பட்டியல் தாயாரித்து, தமிழ்நாடு அரசின் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஆணையத்திடம் வழங்கியது. இதனால் தீண்டாமையை பின்பற்றிய தேனீர் கடைகள் மூடப்பட்டன.

கோவை மாவட்டம் கெம்பனூர் கிராமத்தில் அருந்ததியர் பகுதிக்கு வராத பேருந்துகள் கழகத்தின் தொடர் போராட்டம் காரணமாக ஊருக்குள் நுழைந்தன. இப்படி நீண்ட பட்டியலிட முடியும்.

இப்போதும் ஜாதி வெறியர்கள் எதிர்ப்புகளை எதிர் கொண்டு ஜாதி மறுப்பு இணையர்களுக்கு கழகத் தோழர்கள் திருமணங்களை நடத்துகிறார்கள். குறிப்பாக மேட்டூர் அருகே உள்ள காவலாண்டியூர் திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு புகலிடமாக இருக்கிறது. கழகத் தோழர் காவலாண்டியூர் ஈஸ்வரன் ஜாதிவெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளானார்.

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகம் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களின் பாதுகாப்பு மய்யமாகி ஏராளமான ஜாதிமறுப்பு திருமணங்களை நடத்தி வருகிறது. இப்படி ஜாதி எதிர்ப்பை உதட்டளவில் பேசாமல் களத்தில் செயல்படும் திராவிடர் விடுதலைக் கழகம் தான் இப்போது ஜாதியத் தடைகளை உடைப்போம் என்ற முழக்கத்தோடு மக்களை சந்திக்க வருகிறது.

பரப்புரை வழியாக நிகழ்ந்த மக்கள் இயக்கங்கள்தான் வரலாறுகளை மாற்றியுள்ளன. தேர்தல் அரசியல் பக்கம் திரும்பாத பெரியார் நாள்தோறும் நிகழ்த்திய மேடைப் பேச்சுகள் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது என்பது வரலாறு. அந்த வரலாற்றுத் தொடர்ச்சியாக தான் இப்போது இந்த பயணம் புறப்படுகிறது. பயணத்தில் பங்கேற்கும் தோழர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது!
தடைகளைத் தகர்ப்போம்!
தயாராவீர் தோழர்களே!..
பெரியார் முழக்கம் இதழ் 23072026

You may also like...