சேலத்தில் ஆணவப் படுகொலைக்கு கண்டனம்!
மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலையைத் தடுக்கும் சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டம் 07.07.2026 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) சார்பில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அவர் தன் உரையில் “இந்தியா முழுவதும் ஜாதி மீறி காதலிக்கும் ஒரே காரணத்திற்காக ஜாதி கௌரவம் என்னும் பெயரில் காதலர்கள் காதல் இணையர்கள் கொடூரமாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 4 ஆணவக் கொலைகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஜாதி ஆணவக் கொலைகள் நடந்து இருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஒரே காரணம் மனு சாஸ்திரத்தை இந்து மதத்தவர்கள் படிக்காமல் இருக்கலாம்; ஆனால் அவற்றின் இதிகாசபுராணக் கதைகள் ஆகியவை அவற்றை நம் ஆழ்மனதில் பதிய வைத்திருக்கிறது. இவற்றை வளர்த்தெடுப்பதற்காகவே இந்த ஜாதிய வேறுபாடு ஜாதிய ஆணவப் படுகொலைகளை செய்கிறார்கள்”என்று குறிப்பிட்டார்.
பெரியார் முழக்கம் இதழ் 16072026
