தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம் தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு: எடப்பாடி ஆட்சியும் திமுக ஆட்சியும் ஓர் ஒப்பீடு
தேர்தல் களம்; மக்களிடம் கூறுவோம்
தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு:
எடப்பாடி ஆட்சியும் திமுக ஆட்சியும் ஓர் ஒப்பீடு
கடந்த 2016–21, அ.தி.மு.க. ஆட்சியில், தொழில் முதலீட்டிற்காகப் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு தெரியுமா? 471. இதுவே நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஆயிரத்து 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம்! கடந்த கால அ.திமு.க. ஆட்சியில் ஈர்த்த முதலீடு – நான்கு இலட்சத்து 13 ஆயிரத்து 414 கோடி ரூபாய்தான். ஆனால், நம்முடைய ஆட்சிக் காலத்தில், 12 இலட்சத்து 54 ஆயிரத்து 133 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்! மூன்று மடங்கு அதிகம்!
2016–21–இல் அ.தி.மு.க. ஆட்சியில், புதிதாக நான்கே நான்கு சிப்காட் தொழிற்பூங்காக்களைதான் தொடங்கினார்கள். ஆனால், நாம் 33 புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களைத் தொடங்கி இருக்கிறோம்!
ஸ்டார்ட்–அப் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், 2021 வரைக்கும் இருந்த எண்ணிக்கை: 2 ஆயிரத்தி 45. இப்போது 13,500–க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் நம்முடைய ஆட்சியில் இருக்கிறது!
அடுத்து வேளாண் துறை, 2016–21–இல், 57.26 இலட்சம் ஹெக்டேராக இருந்த மொத்த சாகுபடிப் பரப்பை, இப்போது 62.32 லட்சம் ஹெக்டேராக உயர்த்தி இருக்கிறோம்! ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் ஹெக்டேர் உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஒரு இலட்சம் விவசாயிகளுக்குத் தான் இலவச வேளாண் மின் இணைப்பு கொடுத்தார்கள். ஆனால், நம்முடைய ஆட்சியில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இலவச வேளாண் மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம்.
2016–21–இல், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இரண்டே இரண்டு பேர்தான்! ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் 386 மாணவர்களுக்கு, 160 கோடி ரூபாய் உதவித்தொகை கொடுத்து படிக்கிறார்கள்!
அதேபோன்று, ஆதிதிராவிட மகளிர் நன்னிலம் நில உடைமைத் திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பயனடைந்த பெண்கள் 40 பேர்! 40 இலட்சம் ரூபாய் கொடுத்தார்கள்! அதுவே நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் 1,026 பெண்களுக்கு, சுமார் 50 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறோம்! எவ்வளவு பெரிய வித்தியாசம்?
அடுத்து, விளையாட்டில் நம்முடைய இளைஞர்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் சாதிக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன? விளையாட்டுத் துறைக்கு 800 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீட்டை, நம்முடைய ஆட்சியில், 2 ஆயிரத்து 268 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம்!
அதுமட்டுமல்ல, 2016–21–இல் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் எத்தனை பேர்? மூன்றே மூன்று பேர்தான்! ஆனால், நம்முடைய அரசில், 301 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம்! இப்படி எல்லா துறையிலும் லிஸ்ட் இருக்கிறது!
மக்கள் பெரும் சுமையாகக் கருதும் மருத்துவச் செலவுகள், சென்ற ஆட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், 49 லட்சமாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கையை நம்முடைய ஆட்சியில் 90 இலட்சமாக உயர்த்தி இருக்கிறோம். அதற்குக் காரணம். நம்முடைய அரசில் 72 ஆயிரமாக இருந்த வருமான வரம்பை, ஒரு இலட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி கொடுத்தோம்.
இப்படி எல்லாவற்றிலும் இரண்டு மடங்கு மூன்று மடங்கு, ஏன், பல மடங்கு சாதனைகள் படைத்திருக்கிறோம்! இதுதான் வளர்ச்சி! அதனால் தான்., வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 14 ஆண்டுகள் கழித்து, நம்முடைய ஆட்சியில் 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை நம்முடைய மாநிலம் அடைந்திருக்கிறது! நானும் தொடர்ந்து ஒவ்வொரு மேடையிலும் நம்முடைய சாதனை களை எல்லாம் டேட்டாவுடன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். செய்ததைக் கூட, நம்மால் முழுதாகச் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய பட்டியல் இருக்கிறது.
– (மார்ச்-9-ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் எடப்பாடி ஆட்சியோடு தமிழ்நாடு அரசின் சாதனைகளை ஒப்பிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரை).
பெரியார் முழக்கம் இதழ் 12032026
