அறிஞர்களை உருவாக்கிய பகுத்தறிவு ஆசிரியர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர்.

உடையார்பாளையத்தை, சிற்பி போல செதுக்கி, கல்வி – வேலைவாய்ப்பில் முன்னேற்றமடைய பாடுபட்ட பகுத்தறிவு ஆசிரியர் வேலாயுதத்தைப் போலவே, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செந்துறையை அடுத்த கீழமாளிகையைச் சேர்ந்தவர் மற்றொரு ஆசிரியர். பழுத்த ஆன்மிகவாதியாக இருந்த அந்த ஆசிரியரை, பகுத்தறிவு ஆசிரியராக மாற்றியது பெரியாரின் `குடி அரசு’ இதழ். பெரியாரியவாதியாக மாறிய பின்னர், கருப்புச்சட்டையோடுதான் பள்ளிக்குச் செல்வார். பெரியாரின் பகுத்தறிவைத் துணைகொள்வதற்கு முன்பே, மறைமலை அடிகளாரின் மொழியியல் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.

1926-31 வரையில் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பின்போது, மறைமலை அடிகளின் மகன் மறை. திருநாவுக்கரசுவும் பொன்னம்பலனாரும் ஒரே அறையில் தங்கிப் படித்தனர். அவர்கள் இருவரின் நட்பின் காரணமாக, கோடை விடுமுறையில் மறைமலை அடிகளார் இல்லம் சென்று, அங்கேயே இருந்து இலக்கணமும் இலக்கியமும் கற்றார். அதனால் விளைந்த தனித்தமிழ்ப்பற்றின் காரணமாக `கனகசபை’ என்ற வடமொழிப்பெயரை `பொன்னம்பலம்’ என மாற்றிக்கொண்டார். படித்து முடித்த பின்னர், இன்றைய நாமக்கல் மாவட்டம். பரமத்தி வேலூரில் உள்ள `கந்தசாமிக் கண்டர் அறக்கட்டளை இந்து உயர்நிலைப் பள்ளி’யில் 1931 – 1946 வரை தமிழாசிரியராகப் பணியாற்றினார். அப்போது அந்தப் பள்ளியின் பெயர் வேலூர் இந்து செகண்டரி பாடசாலை என்றிருந்தது. பெருமுயற்சி எடுத்து அந்தப் பெயரை 1936-இல் `கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப் பள்ளி’ என மாற்றினார். பாவேந்தர் பாரதிதாசன் மூத்த மருமகன் கண்ணப்பனும் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தன் மருமகனைக் காண்பதற்காக பாரதிதாசன் அங்கு வரும்போதெல்லாம், பொன்னம்பலனார் சந்தித்து உரையாடுவது வழக்கம். இருவருக்கும் இடையிலான அப்போதைய உரையாடல்களால் பாரதிதாசன் வடமொழிக் கலப்பினைக் கைவிட்டு, தனித்தமிழில் எழுதத் தொடங்கினார்.

அதேசமயம் பொன்னம்பலனாரிடம் பெரியாரைக் கொண்டு சேர்த்தார் பாரதிதாசன். அதன்பிறகு, `குடிஅரசு’ இதழை வாசிக்க ஆரம்பித்து `தேவாரம்’, `திருவாசகம்’ பாடுவதை நிறுத்தினார். 1938-இல் ராஜாஜி ஆட்சிக்காலத்தில் இந்தி திணிக்கப்பட்டபோது பெரியார், மறைமலை அடிகளார், திரு.வி.க. உள்ளிட்டோர் இணைந்து எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒவ்வொரு வகுப்பாகச் சென்று, மாணவர்களிடம் பேசி, இந்தித் திணிப்புக்கு எதிரான எதிர்ப்புக் கனலை மூட்டி, மாணவர்களைப் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தார். கந்தசாமி கண்டர் பள்ளியில் பணியாற்றிய காலத்தில், பள்ளி ஆண்டு விழாவுக்கு பெரியாரை அழைத்து வந்து, `நவீன நந்தனார்’ நாடகத்தை நடத்தினார். கோவில்களைவிட, பள்ளிகளே முக்கியம் என்ற கருத்தை மாணவர்கள் மத்தியில் ஆழமாக விதைத்து, பல மாணவர்களைப் பகுத்தறிவாளர்களாக்கியது இந்த நாடகம்.

1942 – 1946 வரையிலான அந்தக் கால கட்டத்தில், கந்தசாமிக் கண்டர் பள்ளியில் பொன்னம்பலனாரிடம் கல்வி பயின்றவர்தான் பின்னாளில் பெரியாரியல் பேரறிஞராகத் திகழ்ந்த வே.ஆனைமுத்து. அதன்பிறகு 1947-இல் சேலம் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் பொன்னம்பலனார் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அவரிடம் பயின்றவர்தான் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இப்படியாகச் சென்ற ஊர்களில் எல்லாம் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமைக்குரிய பகுத்தறிவு ஆசிரியர் பொன்னம்பலனார் தன் சொந்த ஊரையும் பெரியாரியப் பாதையில் பீடுநடை போட வைத்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 18062026

You may also like...