சுவீடனில் ரத்த உறவு திருமணங்களுக்கு தடை!

சுவீடன் நாடாளுமன்றத்தில் மே-26, 2026 அன்று ரத்த உறவு திருமணங்களைத் தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

எதைத் தடை செய்கிறது? முதல் உறவினர் திருமணம், அதாவது அத்தை/மாமா/சித்தப்பா/பெரியப்பா மகன்–மகள் போன்ற உறவுகளுக்கிடையிலான திருமணம் தடை. அதேபோல், ஒருவரின் சகோதரர் அல்லது சகோதரியின் நேரடி சந்ததியினருடன் திருமணம் செய்வதும் தடை செய்யப்படுகிறது.

ஏன் இந்தச் சட்டம்? ஸ்வீடன் அரசு இதை இரண்டு கோணங்களில் பார்க்கிறது: நெருங்கிய உறவினர் திருமணங்களில் குழந்தைகளுக்கு மரபணு சார்ந்த உடல்நல ஆபத்துகள் அதிகரிக்கும் என்ற சுகாதாரக் கவலை; மேலும் சில சமூகங்களில் குடும்ப அழுத்தம், கட்டாயத் திருமணம், ஆணாதிக்கக் கட்டுப்பாடு போன்றவற்றைத் தடுக்க வேண்டும் என்ற சமூகநீதி காரணம். வெளிநாட்டில் நடந்த இப்படிப்பட்ட திருமணங்களையும் பொதுவாக ஸ்வீடன் அங்கீகரிக்காது என்று சட்டம் கூறுகிறது. ஏற்கனவே நடந்த திருமணங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. சட்டம் அமலுக்கு வந்த பிறகான திருமணங்களைத் தடுக்கிறது; இந்தியாவில் பல சமூகங்களில் அத்தை மகள், மாமன் மகள், மச்சான்–மச்சினி போன்ற உறவினர் திருமணங்கள் வழக்கமாக உள்ளன. ஆனால் ஸ்வீடன் போன்ற நாடுகள் இதை தனிநபர் உரிமை மட்டும் அல்லாமல், குழந்தை நலம், கட்டாயத் திருமணத் தடுப்பு, பெண்களின் சுவாதீனம் ஆகிய கோணங்களில் சட்டரீதியாக கட்டுப்படுத்துகின்றன.

இங்கே ஜாதிமறுப்பு திருமணம் செய்தால் ஆணவப் படுகொலை நடக்கிறது. சுவீடனில் குடும்ப உறவுக்குள் நடக்கும் திருமணம் தடைசெய்யப்படுகிறது.
பெரியார் முழக்கம் இதழ் 18062026

You may also like...