“வாழ்” குறும்பட சிறப்புக்காட்சி பார்வையிடல்!
கழகத் தலைவர் கொளத்தூர் மணி 29.03.2026 அன்று சென்னை, அண்ணாமலை காலனி, சத்தியமூர்த்தி தெருவில் உள்ள டிவி ஸ்டுடியோவில் “வாழ்” குறும்படத்தின் சிறப்புக் காட்சியை பார்வையிட்டு குறும்பட குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
தாய் தந்தை தமிழ் படைப்பகம் மற்றும் JOKERKING’S PRODUCTION – NILOFER NISHA இணைந்து வழங்கும் “வாழ்” குறும்படம், இயக்குநர் ஆர். சமீர் அவர்களின் சிந்தனையிலும் சமூகப் பொறுப்புணர்விலும் உருவான ஓர் அர்த்தமிக்க படைப்பு. இந்த குறும்படத்தின் உருவாக்கத்தில் பங்களித்த கலைஞர்கள்: ஒளிப்பதிவாளர் சித்தார்த் தமிழ் செல்வன், இசை அமைப்பாளர் அபிஷேக் வாசகன், படத்தொகுப்பாளர் அசோக் சார்லஸ், வசனம் அருணகிரி மற்றும் இயக்குநர் சமீர்.
“சாவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும்போது, வாழ்வதற்கு ஒரு வழியும் இல்லையா?” என்ற தாக்கமிக்க வசனம், இந்த குறும்படத்தை கண்ட ஒவ்வொருவரின் மனதையும் உலுக்கியது. சமூக அவலங்களையும் மனஅழுத்தங்களையும் எதிர்கொள்ளும் இன்றைய தலைமுறைக்கு உரியவர்களிடம் உரையாடலே தீர்வாக அமையும் என்ற அழகான செய்தியை இக்குறும்படம் வலியுறுத்துகிறது. இயக்குநர் ஆர். சமீர் சமூகத்தை தொலைநோக்குப் பார்வையில் அணுகி, தற்கொலை என்பது தீர்வு அல்ல; உரையாடலே தீர்வு என்ற வலுவான கருத்தை முன்வைத்துள்ளார். இதுவே இக்குறும்படத்தின் மைய நோக்கமாக திகழ்கிறது. இது ஒரு குறும்படம் மட்டுமல்ல! வாழ்வை தேர்வு செய்ய அழைக்கும் சமூகப் பொறுப்புள்ள குரல்!
பெரியார் முழக்கம் இதழ் 30042026
