1973-ல் தஞ்சையில் பெரியாருக்கு கார் வழங்கும் விழாவில் நடந்தது என்ன?

1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தஞ்சையில் பெரியாருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது. மேடையில் ஏறுவதற்கு பெரியாருக்கு ஏற்பட்ட இடையூறுகளை தவிர்த்து பிரச்சாரத்திற்கான மேடையை காரின் ஒரு பகுதியாக இணைத்து இந்தக் கார் தயாரிக்கப்பட்டது. இந்தக் காரை 5 மாதங்கள் மட்டுமே பெரியார் பயன்படுத்தினார். தியாகராய நகரில் பெரியாரின் இறுதி உரையை இந்தக் காரில் இணைக்கப்பட்ட மேடையில் தான் ஆற்றினார்.

பெரியாரின் அந்தக் கார் திருச்சி உறையூரில் உள்ள பெரியார் மாளிகையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஏப்ரல்-19) படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழகம் திட்டமிட்டு வரும் ‘பெரியார் உலகத்தில்’ இந்த வேன் காட்சிப் பொருளாக இடம்பெறப்போவதாக செய்தி கூறுகிறது.

இந்தக் கார் வழங்கும் விழா, 1973 ஆக-19-ல் தஞ்சையில் எழுச்சியுடன் மாநாடு போல் நடந்தது. அந்த நிகழ்வுகள் குறித்து சில செய்திகளை இளையதலைமுறையின் கவனத்துக் கொண்டு வருகிறோம்.

தஞ்சை மாவட்டத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கில் தோழர்கள் திரண்டனர்.
தமிழ்நாடு முதல்வர் கலைஞர் பெரியாருக்கு கார் வழங்கினார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் விழாவிற்கு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ப.உ. சண்முகம், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி (சென்னை பகுத்தறிவாளர் கழக தலைவர்), ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சி.டி நடராசன், விடுதலை ஆசிரியர் கீ.வீரமணி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். தஞ்சை கருஞ்சட்டைக் கடலாக காட்சியளித்தது. குடும்பம் குடும்பமாக பல்லாயிரக்கணக்கான தோழர்கள் திரண்டனர்.
பெரியாரின் உடல் நலனைக் காத்த பெரியாரின் நம்பிக்கைக்குரிய மருத்துவர்கள் விழாவில் பங்கேற்றனர். வேலூர் சி.எம்.சி மருத்துவமனை டாக்டர் பட், சென்னை பொது மருத்துவமனை தலைமை அதிகாரி டாக்டர் ராமச்சந்திரா, வேலூர் டாக்டர் ஜான்சன் ஆகியோர் விழாவிற்கு வந்திருந்தனர். கலைஞர் மருத்துவர்களுக்கு ஆடை போற்றி கவுரவித்தார்.

மாலை 6 மணி அளவில் மோரீஸ் கார்னர் பகுதியிலிருந்து கருஞ்சட்டை படை ஊர்வலம் புறப்பட்டது. கழகத் தோழர் சாமிநாதன் யானையின் மீது கம்பீரமாக கழகக்கொடியுடன் அமர்ந்து சென்றார்.

பாண்டு வாத்தியத்துடன் தாரை தப்பட்டை மேள தாளங்களோடு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகளுடன் ஊர்வலம் நிகழ்ந்தது. பல்லக்கு போல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெரியார் அமர்ந்து வந்தார்.

ஊர்வலம் மாநாட்டு மேடையை வந்தடைந்த நேரம் இரவு 9 மணி, வழிநெடுக மக்கள் வெள்ளம், கருஞ்சட்டை படை ஆர்பபரித்து அணிவகுத்தது. தமிழக முதல்வர் கலைஞர் பேசுவதற்கு முன்பு தஞ்சை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டாக்டர் சின்னதுரை வழங்கிய காருக்கான தங்கச் சாவியை கலைஞர் பெரியாரிடம் பலத்த கரவொலிகளுக்கிடையே வழங்கினார்.

கலைஞர் பேச எழுந்தபோது “தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. மாநாட்டு மேடைக்கு முன்பு லட்சத்துக்கும் அதிகமான கருஞ்சட்டை தோழர்கள் திரண்டிருந்தனர்.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பெரியாருக்கு விழாக் குழு சார்பில் ஒரு கடிகாரத்தையும், அமைச்சர் மன்னை நாராயணசாமி ஒரு “டேப் ரெக்கார்டரை”யும் பரிசாக வழங்கினர். விழாக் குழு சார்பில் ரூ.50,000 பணத்தை கலைஞர் பெரியாரிடம் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.

வேன் வழங்கும் திட்டத்தை முன்னின்று செயல்படுத்திய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கீ.வீரமணி அவர்களுக்கு கலைஞர் மோதிரம் அணிவித்து பாராட்டினார்.

கலைஞர் உரை உருக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது. “புத்தரால் சாதிக்க முடியாததை தந்தை பெரியார்தான் சாதித்துக் காட்டியுள்ளார். இந்த மண்ணில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரே ஜீவன் பெரியார் மட்டுமே. அவருக்கு இங்கே பரிசுகளை வழங்கினார்கள். நாம் அவருக்கு தர வேண்டிய உண்மையான பரிசு மாநிலங்களின் உண்மையான சுயாட்சி தான். அந்த சுயாட்சியை பெரியாரிடம் பரிசாக வழங்குவோம். அந்த வெற்றிப் பரிசை ஈட்டும் வரை பெரியார் வாழ வேண்டும்” என்றார் கலைஞர்.

மேடையில் பெரியார் அமர்வதற்கு அமைக்கப்பட்டிருந்த வெள்ளி சிம்மாசனத்தில் பெரியார் அமர மறுத்து; கலைஞரை கைப்பிடித்து அதில் அமர வைத்தார். கூட்டம் பலத்த கரவொலியால் அதிர்ந்தது.

தஞ்சை மாவட்டக் கழக சார்பில் கலைஞருக்கு பெரியார் பட்டாடை போர்த்தி கவுரவித்தார். பெரியாருக்கு வழங்கப்பட்ட காருக்கு வாகன வரியிலிருந்து வரிவிலக்கு தந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஏற்கனவே காஞ்சி சீனியர் சங்கரச்சாரிகளுக்கு இதேபோல் விலக்கு அளிக்கப்பட்டதை முன் உதாரணமாகக் கொண்டு இந்த விலக்கு அளிக்கப்பட்டது. போக்குவரத்துத் துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதற்கான முயற்சிகளை எடுத்தார்.

வேன் வாங்குவதற்காக கழகத் தோழர்கள் மக்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டினார்கள்.
கரூரில் உள்ள பிரபல பேருந்து தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி பாலகிருஷ்ணன் அண்ட் பிரதர்ஸ்”நிறுவனம் மிகவும் கவலை எடுத்து வாகனத்தை தயாரித்தது.
தஞ்சை கழகத் தலைவர் க.மா.குப்புசாமி, செயலாளர் ராஜகோபால், சா.மி நாகராஜன், க.மா.கோவிந்தராஜன் உள்ளிட்ட தோழர்கள் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கீ.வீரமணி தலைமையில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி மற்றும் ஜாதி ஒழிப்பு போராளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

பெரியார் முழக்கம் இதழ் 23042026

You may also like...