தேர்தல் களத்தில் பார்ப்பனர்கள்!
1967-ல் ஆட்சிக்கு வந்த அண்ணா அமைத்த அமைச்சரவையில் ஒரு பார்ப்பனர் கூட இடம்பெறவில்லை. பார்ப்பனர் அல்லாத அமைச்சரவை என்று பெரியார் பாராட்டினார். இப்போது களத்தில் நிற்கும் திமுகவும் அதிமுகவும் ஒரு பார்ப்பன வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் பார்ப்பனர் இல்லை.
விஜய் கட்சியான தவெகவில் 2 பார்ப்பனர்கள். பார்ப்பனக் கோடாரிக்காம்பு சீமான் கட்சியில் மட்டும் 6 பார்ப்பனர்கள் நாம் தமிழர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். இரண்டு கட்சிகளும் பார்ப்பனர்கள் நிறைந்த பகுதிகளான ரீரங்கம், மயிலாப்பூர் தொகுதிகளில் பார்ப்பன வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனாலும் பாஜக வேட்பாளர் பட்டியலிலும் பார்ப்பனர்கள் இடம்பெறவில்லை.
பார்ப்பனர்களை அமைச்சரவையில் சேர்த்தவர் எம்.ஜி.ஆர்தான். 1980,1986 ஆண்டுகளில் எச்.வி ஹண்டேவை மருத்துவத்துறை அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இரா.ராமநாதன் என்ற உச்சிக்குடுமி அடையாளத்துடன் வலம் வந்தவரை குடந்தை தொகுதியில் வேட்பாளராக்கினார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 2016-ல் ஜெயலலிதா நடராஜ் என்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியை வேட்பாளராக்கினார். மயிலாப்பூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். 2002, 2007,2013 ஆண்டுகளில் மைத்ரேயன் என்ற பார்ப்பனர் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் பாஜகவில் இருந்து அஇஅதிமுகவில் சேர்ந்தவர். இப்போது திமுகவில் சங்கமம் ஆகி உள்ளார். அமைச்சரவையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெயலலிதாவும் பார்ப்பனர்தான். சட்டமன்றத்திலேயே “நான் ஒரு பாப்பாத்திதான்” என்று பெருமையோடு அறிவித்துக் கொண்டவர்.
அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது பார்ப்பனர்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் கட்சி வளர்க்க முடியாது என்று முடிவு செய்து கே.டி.ராகவன், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற பார்ப்பனர்களை கட்சியிலிருந்து ஓரம் கட்டினார். இப்போது தொலைக்காட்சி விவாதங்களில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் விவாதிக்கும் ரவீந்திரன் துரைசாமி என்பவர் சீமானின் தீவிர ஆதரவாளர். சீமானையும் ரஜினிகாந்தையும் சந்திக்க வைப்பதில் இவர்தான் இடைத்தரகராக செயல்பட்டார். இப்போது “பிராமணர்களுக்கு” அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று புலம்பியுள்ளார்.
பார்ப்பனர்கள் வேட்பாளராக இடம்பெறாவிட்டாலும் பார்ப்பனியத்தைக் காப்பாற்றவே பாஜகவும் அஇஅதிமுகவும் துடித்துக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை!
பெரியார் முழக்கம் இதழ் 09042026
