வேதமத மரபு திணிப்புகளை முறியடிக்க தமிழ்நாடு அரசின் திட்டங்கள்
திமுக தேர்தல் அறிக்கையில் சமூக நீதி மற்றும் தமிழ் மொழி காத்தல் என்ற இரண்டு தலைப்புகளில் வெளிவந்த கருத்துக்களை சுட்டிக்காட்ட வேண்டும். “சமூக நீதி என்பது உயர்ந்தவர்களை கீழே இறக்கி விடுவது அல்ல; மாறாக பள்ளத்தை சமப்படுத்தி மேடாக்குவது தான்” என்ற பெரியார் விளக்கத்தோடு துவங்குகிறது தேர்தல் அறிக்கை. இரண்டு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
ஜாதி வாரி கணக்கெடுப்பின் தரவுகள் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ.20 இலட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் உயர் பதவிகளில், ஆதிதிராவிடர்; பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை அமர்த்துவதற்கான திட்டமொன்றை தேர்தல் அறிக்கை முன்வைத்திருக்கிறது.
அதாவது இப்படி வாய்ப்பு அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அரசே மானியங்களாகமுதலீடு செய்வதோடு ,வேறு பல சலுகைகளையும் வழங்கும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. தனியார் நிறுவனங்களின் உயர் அதிகார மையங்கள் விளிம்பு நிலை மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படுகின்றன; இதை மாற்றி அமைக்க திராவிட மாடல் ஆட்சி முன் வைத்துள்ள திட்டம் இது. இப்படி ஒரு திட்டத்தை சிந்தனையை வேறு எந்த மாநிலத்திலாவது பார்க்க முடியுமா? தமிழ் வளர்ச்சி எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்துகளும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை.
“பாரதிய பாஷா பரிவார்” என்ற அமைப்பை உருவாக்கியுள்ள ஒன்றிய ஆட்சி; இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி சமஸ்கிருதம் தான் என்று நிறுவ முயல்வதை அறிக்கை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது.
இதை முறியடித்து திராவிட மொழிகளின் தனித்துவத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபடும் என்ற உறுதியை இந்த அறிக்கை தருகிறது. அதற்காக அரசு மேற்கொள்ள இருக்கும் விரிவான திட்டங்களை அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
தமிழ் மொழியின் பல்வேறு வட்டார வழக்குகள், பண்பாடுகள் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து செயற்கை நுண்ணறிவு அறிவியல் உதவியுடன் களஞ்சியம் ஒன்றை தயாரித்தல்.
பல்வேறு துறைகள் குறித்து பன்னாட்டு இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை தமிழாக்கம் செய்தல்; அதற்கேற்ற தமிழ் கலைச் சொற்களை உருவாக்குதல்;
தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாடுகளை சிறப்பாக காட்சிப்படுத்தும் திரைப்படங்களுக்கு கலைஞர் பெயரில் விருது வழங்குதல்;
தமிழ்நாடு மற்றும் தமிழர் தொடர்பான அனைத்து கல்வெட்டுகளையும் சேகரித்து டிஜிட்டல் மயமாக்குதல்; கல்வெட்டுகளின் பெரும் களஞ்சியமாக நூல் தொகுப்பை உருவாக்குதல் என்று பல்வேறு திட்டங்களை முன்வைக்கிறது தேர்தல் அறிக்கை.
வேத மத பண்பாடுகளுடன் தமிழையும் தமிழரையும் இணைக்க நடக்கும் அத்தனை சதிகளையும் முறியடிப்பதற்கான திட்டங்களாக இவை முன்வைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் எந்த ஒரு கட்சி சார்பான பிரச்சனை அல்ல; மாறாக தமிழ்நாட்டின் ஒருமித்த பிரச்சனை. அதனால்தான் இந்த தேர்தல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு கூட்டங்களிலும் வலியுறுத்துகிறார். வாக்குரிமையோடு நாட்டுரிமையையும் இணைத்து நடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது!
கங்கைச் சமவெளி நாகரிகத்திற்கு பிந்தியதே கீழடி தமிழர் நாகரிக ஆய்வுகள் என்று வரலாற்றைத் திருத்தி காலத்தை மாற்றச் சொல்லி ஒப்புதல் தர மறுக்கிறது ஒன்றிய ஆட்சி. தமிழர் நாகரிகத்தை இருட்டடிக்கும் இந்த துரோகத்தைக் கூட கண்டிக்க எடப்பாடி தயாராக இல்லை. அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து எந்த கண்டனமும் இல்லை . இது தமிழர்களுக்கு இழைக்கும் மகத்தான துரோகம்அல்லவா?
மீட்போம் நாட்டுரிமையை! வீழ்த்துவோம் துரோகிகளை!
பெரியார் முழக்கம் இதழ் 09042026
