மோடி ஆட்சியின் சமூகநீதி துரோகம்!
சமூக மற்றும் கல்வி அடிப்படையில் தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் பின்தாங்கினார்களே தவிர பொருளாதார காரணங்களால் அல்ல என்று அரசியல் சட்டம் தெளிவாக கூறியது. பின்தங்கியதற்கான காரணம் அவர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்ததுதான்; பொருளாதார வசதிகள் இருந்தாலும் கூட பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பொருளாதார வசதிகளே இல்லாத பார்ப்பனர்களிடமும் உயர் ஜாதியினரிடமும் கீழ்ப்படியும் நிலையே நீடித்தது. மனுதர்மத்தை காப்பாற்றத் துடிக்கும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கம் பறிபோய்விடும் என்பதால் இந்த இட ஒதுக்கீடுகளை பொருளாதார அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
1992-ல் இந்திரா-சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் “கிரிமிலேயர்” என்ற பொருளாதார வரம்பை புகுத்தியது. இந்தக் “கிரிமிலேயர்” குடும்பத்தில் பொருளாதார வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயம் செய்தது. இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். இப்போது உச்ச நீதிமன்றம் இந்த “கிரிமிலேயர்” வடிகட்டுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வழக்கு இதுதான்: பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தைச் சார்ந்த 60 மாணவர்கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எப்.எஸ் மற்றும் அய்.ஆர்.எஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் அவர்கள் பதவி ஏற்க முடியவில்லை. காரணம் இவர்கள் பெற்றோர் வருமானத்தை கணக்கில் எடுத்து “கிரிமிலேயர்” பட்டியலுக்குள் கொண்டு வந்து நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட 60 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 10 ஆண்டுகளாக நடந்தது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு முன் கடந்த மார்ச் 12-ல் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பெற்றோர்கள் வருமானத்தை “கிரிமிலேயர்” அளவுகோலில் கொண்டு வரக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர். ஏ மற்றும் பி நிலையில் பொதுத்துறை மற்றும் தனியார் துறையில் பெற்றோர்கள் பணியாற்றினால் இட ஒதுக்கீடு உரிமை அவர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு முற்றாக மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் சி மற்றும் டி பிரிவுகளில் வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு உரிமைகள் கிடைக்கின்றன என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இப்படி இருவேறு பிரிவினர்களுக்கு இடையே பாகுபாடு ஏன் என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியது.
1993-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட ஆணையில் “கிரிமிலேயர்” எனும் பொருளாதார வரம்பில் பெற்றோர்களின் வருமானம் மற்றும் விவசாய வருமானத்தை சேர்க்கக் கூடாது என்று தெளிவாக வரையறுக்கப்பட்டது. இந்த வருமானத்தை சேர்த்தால் ஆண்டுக்கு ரூ.8,00,00 என்ற வருமான வரம்பைத் தாண்டி விடுகிறது. இந்த நிலையில் பெற்றோர்கள் ஊதியத்தை சேர்க்க கூடாது என்ற அரசு ஆணையை சுட்டிக்காட்டித் தான் இந்த வழக்கு தொடரப்பட்டது. தேர்ச்சி பெற்ற 2பேர் 2014-ம் ஆண்டு அரசு தீர்ப்பாயத்தில் (CAT) நீதி கேட்டு முறையிட்டனர். தீர்ப்பாயம் கோரிக்கையை ஏற்று பணிநியமனம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் ஒன்றிய பாஜக ஆட்சி இதை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து 2017-ல் சென்னை உயர்நீதிமன்றமும், 2018-ல் டெல்லி உயர்நீதிமன்றமும், ஒன்றிய அரசின் மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்தது. ஒன்றிய அரசின் மேல்முறையீட்டை நீதிமன்றங்கள் கண்டித்தன. “வெறுப்பை உருவாக்கும் பாகுபாடு” (Hostile Descrimination) என்ற சொல்லை நீதிமன்றம் பயன்படுத்தியது. அதற்குப் பிறகும் ஒன்றிய பாஜக ஆட்சி விடவில்லை. 2018-ல் உச்ச நீதிமன்றத்தை அணுகி உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு தடை கோரியது.
2020-ஆம் ஆண்டு மோடியின் சமூக நீதி அமைச்சரகம் வருமான வரம்பில் பெற்றோர்களின் ஊதியத்தையும் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தது. இந்த முடிவை பாஜகவின் பிற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் ஏற்கவில்லை. தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தார்கள். ஆனாலும் அமைச்சரவை இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளியது. 12 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு 60 பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இதில் மற்றொரு திடுக்கிடும் செய்தியும் உண்டு. பெற்றோரின் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை பொருளாதார வரம்பில் இணைக்கக் கூடாது என்று காங்கிரஸ் ஆட்சியில் பிறப்பித்த ஆணைக்கு முற்றிலும் முரணாக அவற்றையும் சேர்க்க வேண்டும் என்று ஒரு கடிதம் 2004-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வெளிவந்தது. இப்படி ஒரு கடிதம் எங்கிருந்து வந்தது? எந்த துறையில் வெளியிடப்பட்டது? என்பது கண்டறிய முடியாத மர்மமாகவே இருக்கிறது. இதை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையில் இந்தக் கடிதம் மூலம் மர்மமாக இருக்கிறது என்பதை பதிவு செய்துள்ளதை நீதிபதிகள் எடுத்துக்காட்டியுள்ளனர். அரசியல் சட்டத்தின் 162-வது பிரிவின் கீழ் 1993-ல் வெளியிடப்பட்ட ஒரு அரசாணையை முற்றாக மறுத்து அரசு சார்பில் வெளியிட்ட ஒரு கடிதம்’ ‘அநாமதேயம்’புறந்தள்ளி இருப்பதை நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். 1951-இல் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது. அப்போது இட ஒதுக்கீட்டினால் தனக்கு மருத்துவக் கல்லூரி அனுமதி கிடைக்கவில்லை என்று செண்பகம் துரைராஜ் என்ற ஒரு பார்ப்பன பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்ற விசாரணையில் அந்தப் பெண் மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடவில்லை என்ற அதிர்ச்சியான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
அரசு நிர்வாகத்தில் உயர் பதவிகளை ஆக்கிரமித்து இருக்கும் பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரங்களை எவ்வளவு முறைகேடாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இவை சான்றுகள். ஒரே ஒரு ’அனாமதேய’ கடிதத்தின் வழியாக பல நூற்றுக்கணக்கான பிற்படுத்தப்பட்டவருடைய உரிமையை 10 ஆண்டு காலத்திற்கு மேலாக பறித்து வைத்திருந்த சமூக அநீதி ஒன்றிய மோடி ஆட்சியில் நடந்து முடிந்திருக்கிறது.
பெரியார் முழக்கம் இதழ் 19032026
