டெல்லி ஏ.அய் மாநாட்டில் தலைகுனிவு!
டெல்லியில் நடைபெறும் ஏ.அய் (AI) மாநாட்டில் ஏற்பட்ட பல குழப்பங்கள் உலக அரங்கில், இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் ஏற்பாடுகளில் சரியான திட்டமிடல் இல்லாமல், சர்வதேச அழைப்பாளர்கள் அலைச்சலைச் சந்தித்தனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உணவு, குடிநீர் பற்றாக்குறை, பொருட்கள் திருட்டு ஆகியவற்றால் பார்வையாளர்கள் சிரமங்களைச் சந்தித்துள்ளனர்.
அதைவிடவும் முக்கியமாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் (Galgotias University), சீன நிறுவனத்தின் ரோபோ நாய் (Orion) இயந்திரத்தைத் தங்களது தயாரிப்பு என விளம்பரப்படுத்தி, விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. இந்தத் தகவல்கள் வெளியாகி சீன ஊடகங்களால் கேலிக்கு ஆளாகியுள்ளது இந்த ஏ.ஐ (AI) மாநாடு. இந்த உண்மை தெரிந்ததும் அந்தப் பல்கலைக்கழகம் அமைத்திருந்த அரங்கை, அதிகாரிகள் மூடியுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி, இந்திய கல்வி நிறுவனங்களின் பெருமை என இந்த ரோபோவின் வீடியோவைத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்ததுடன், சர்ச்சை உருவானதும் அதை நீக்கியுள்ளார்.
தொழில்நுட்ப தேசியவாதம் என்ற பெயரில், வெளிநாட்டுத் தயாரிப்பை ‘இந்திய சாதனை’ என மேடையில் காட்டும் மனநிலை, அறிவியல் வளர்ச்சிக்கு ஆபத்தானது, வெட்கக்கேடானது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியை விளம்பரமாக அல்ல, அடிப்படை முதலீடாகக் கருதி ஊக்குவிக்க வேண்டும். போலி தேசியவாதத்தின் மூலம் மக்களை ஏமாற்ற முடியும் என நினைத்தவர்களுக்கு டெல்லி ஏ.ஐ (AI) மாநாடு பாடம் கற்பித்துள்ளது.
பெரியார் முழக்கம் இதழ்27022026
