தமிழக அரசின் அலட்சியம்: கொளத்தூர் மணி கண்டனம்

முற்றுகைப் போராட்டத்தின் நோக்கம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திராவில் 20 தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதில் தமிழக அரசின் அலட்சியத்தைக் கண்டித்தே இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறோம். திருவண்ணாமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 12 பேரில் 10 பேர் உடல்களை நேரில் பார்த்தபோது, உடல் முழுதும் தீக்காயங்களாகவே இருந்தன. கை, கால்கள் வெட்டப்பட்டும், துண்டிக்கப்பட்டும், ஒருவருக்கு இரண்டு கால் வெட்டப்பட்டும், ஒருவரின் ஆண்குறி துண்டிக்கப்பட்டும், ஒருவருக்கு பற்கள் பிடுங்கப்பட்டும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் அந்த உடல்கள் காணப்பட்டன. படுகொலைகளை நியாயப்படுத்தும் ஆந்திர அரசையும் வாய் திறக்காமல் அமைதி காக்கும் மத்திய அரசையும் வன்மையாகக் கண்டித்து, போராட்டங்கள் நடக்கின்றன. அது நியாயமானதுதான். ஆனால், தமிழக அரசு காட்டும் அலட்சியத்தைக் கண்டிக்காமல், ஒதுங்கி நிற்க முடியாது. சடங்குக்காக ஒரு கடிதத்தை மட்டும் பிரதமருக்கு எழுதி, தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது. கண்துடைப்பு நடவடிக்கையாக வேலூரிலிருந்து மஞ்சுநாத் என்ற காவல்துறை அதிகாரியை மட்டும் ஆந்திராவுக்கு தமிழக அரசுஅனுப்பியது. அவர் அங்கே போய் சேருவதற்குள் பிரேதப் பரிசோதனைகள் எல்லாம் முடிவடைந்துவிட்டதால் அவர் ஊர் திரும்பி விட்டார்
சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்தபோது, அதில் உயிரிழந்தவர்கள் ஆந்திர தொழிலாளிகள் என்பதால் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உடனே அமைச்சர்கள் அதிகாரிகளுடன் தமிழகம் வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை நேரில் போய் பார்த்து மருத்துவமனை யிலிருந்து அவர்கள் ஊர் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டுத்தான் திரும்பினார்.
மகாராஷ்டிரத்தில் பீகார் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று ‘நவநிர்மான் சேனா’ என்ற அமைப்பு, பீகார் ஓட்டுநர்ஒருவரை உயிருடன் எரித்துக் கொன்றவுடன், அம்மாநில முதல்வர் நித்திஷ்குமார், முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் ஆகியோர் உடனே பிரதமர் மோடியைச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்களா? அல்லது கொலை செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்களா? என்பது தெரியாத நிலையில் கொடூரமான இந்தக் கொலை குறித்து எந்த பதைப்பையும் காட்டாத தமிழக அரசை வன்மையாகக் கண்டிருக்கிறோம்” என்றார் கொளத்தூர் மணி.

பெரியார் முழக்கம் 23042015 இதழ்

You may also like...

Leave a Reply