ஏன் இந்த பரப்புரைப் பயணம்?
தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக தமிழர் நலனுக்காக அரை நூற்றாண்டுக்கு மேலாக ஓயாது உழைத்தவர் பெரியார்.
ஜாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத, பாலினப் பாகுபாடு இல்லாத ஒரு சமத்துவ சமூகம் மலர வேண்டும் என்று தன் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பாடுபட்டவர் பெரியார்.
மக்கள் ஆதரிப்பதைப் பேசி, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக மக்கள் பின்பற்றிய மூடத்தனங்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார்.
தன் மீது கல், முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டபோது கூட ஓடி ஒளிந்து கொள்ளாமல், தனக்கு சரியெனப்பட்டதை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார்.
குடலிறக்க வலியோடும், மூத்திரச் சட்டியோடும் வாழ்நாளின் கடைசிவரை தமிழ் மக்களின் தன்மானத்திற்காகப் பேசியவர் பெரியார்.
கல்வி எட்டாக்கனியாக இருந்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி ஒரு நூற்றாண்டில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு உருவாகக் காரணம் பெரியார்.
எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதைச் சிந்தனையைத் தமிழர்களுக்குக் கடத்தியவர் தந்தை பெரியார்.
ஆனால் இன்றைக்குப் பெரியாரைக் கொச்சைப்படுத்த ஆரியத்தின் கைக்கூலிகளாக ஒரு கூட்டம் தமிழ்தேசியத்தின் பெயரால் கிளம்பியிருக்கிறது.
ஜாதி இழிவைத் தமிழர்கள் மீது திணித்தப் பார்ப்பனர்களை சமத்துவம் போதித்தவர்கள் என்று நா கூசாமல் பேசுகிறது அந்தக் கூட்டம்.
புலவர்களிடையே முடங்கிக் கிடந்த திருக்குறளைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பியப் பெரியாரைப் பார்த்து திருக்குறளை இழிவுபடுத்தியவர் என்கிறது அந்த கூட்டம்.
பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தை தமிழ்நாடு மட்டும் விட்டொழித்ததற்கு காரணமான பெரியாரைப் பார்த்து ஜாதியவாதி எனப் பழிக்கிறது அந்த கூட்டம்.
பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் ஆரியப் பகைவர்கள் வைத்த அதே வசைச்சொற்களைத்தான் இன்று தமிழ்தேசியத்தின் பெயராலும் சிலரால் வைக்கப்படுகிறது.
அவர்கள் முன்வைப்பது தமிழ்தேசியமும் அல்ல; தமிழர்கள் நலனுக்கானதும் அல்ல; திராவிடத்திற்கு நேரெதிரான ஆரியத்திற்குத் துணைபோகும் சந்தர்ப்பவாதம் அவை.
நீட்டைத் திணித்து, புதிய கல்விக்கொள்கையைத் திணித்து, மும்மொழிக் கொள்கையைத் திணித்து தமிழர்களின் கல்வி உரிமையைப் பறிப்போரைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
இந்தித் திணிப்பால் ஏற்படப்போகும் தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டு அழிப்பைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
ஜிஎஸ்டியைத் திணித்து, மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டிருக்கும் பாஜகவின் நாசகர செயலைப்பற்றி அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு என்றொரு மாநிலத்தையே இல்லாமல் செய்யத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களைப் பற்றிப் பேச மறுப்பார்கள் அவர்கள்.
வட மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தென்மாநிலங்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசின் முயற்சி குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை.
ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்களை நோக்கி உரிமைக்குரல் எழுப்பினால், அவர்களின் ஏவல் நாய்கள் போல இங்கே திராவிடத்திற்கு எதிராக கூச்சலிடுவதுதான் இவர்களின் வாடிக்கை
அதனால் சமீப காலமாக பெரியாரைக் கடித்துக் குதறி, அவர் மீது தமிழர்கள் கொண்டிருக்கிற பிம்பத்தை உடைத்துவிடலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்
இந்துத்துவ மதவெறியை எதிர்த்து தமிழ்நாட்டின் நலன்களுக்கு அரணாக நிற்கும் திராவிட இயக்கங்கள் தமிழர்களுக்கு எதிரானதாம்!
தமிழினத் தலைவர் பெரியாரைத் தூற்றிப்பேசி, அம்பலப்பட்டு நிற்கும் இந்த போலித் தமிழ்த்தேசிய கும்பலின் முகத்திரையையும் அவர்கள் ஆரிய முதலாளிகளையும் தோலுரிக்கவே இந்த பயணம்.
பெரியாரும் திராவிடமும் இந்த மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? ஆரியம் செய்துகொண்டிருக்கும் அழிவுகள் என்ன என்பதை இந்த பரப்புரையின் வாயிலாக விளக்குகிறது திராவிடர் விடுதலைக் கழகம்!
அனைவரும் வாரீர்!…. ஆதரவு தாரீர்!!…
பெரியார் முழக்கம் 27022025 இதழ்
