பெரியார் பற்றிய சரியான புரிதலுக்கு அவரது மூலநூல்களைப் படிக்க வேண்டும் – கொளத்தூர் மணி

குடிஅரசு தொகுப்புகளை வெளியிட்ட பதிப்பாசிரியர் கொளத்தூர் மணிக்கு சிறந்த பதிப்பாளர் விருதை சீர் வாசகர் வட்டம் வழங்கியது.விருது ஏற்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை; கடந்த இதழின் தொடர்ச்சி.

பெரியார் பட்டத்தை யார் கொடுத்தது என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பெரியார் பட்டத்தை யாரும் கொடுக்கவில்லை. 1929-ல் செங்கல்பட்டு மாநாட்டில் கடைசி தீர்மானம், இந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டி எழுப்பி இதை நடத்திக் கொண்டிருக்கிற ராமசாமி பெரியார் என்பவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

1938-ல் பெரியார் என்ற பட்டம் வழங்கவில்லை. பெண்கள் நடத்திய அந்த மாநாட்டில் ஈ.வெ.ராமசாமியை எழுத்திலும், பேச்சிலும் ‘பெரியார்’ என்று குறிப்பிட வேண்டும் என்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் என்ற பட்டம் வழங்கப்படவில்லை.

தியாகராய நகர் மாதர் முன்னேற்றக் கழகம் செயலாளராக இருந்த டாக்டர் தர்மாம்பாள் தீர்மானங்களை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை 11.11.1938-ல் விடுதலை இதழில் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த தீர்மானத்தில் பெரியார் என்ற சிறப்புப் பெயரால் மட்டுமே அழைக்க வேண்டும் என்று இருக்கிறது. குடிஅரசு இதழ்களை படிக்கும் போது தான் இது போன்ற செய்திகளை அறிய முடிகிறது.

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லியதாக செய்தி. ஆனால் பெரியார் என்ன சொல்கிறார்? என்றால் உன்னுடைய மொழி அதாவது தற்காலிக தமிழ் “யாயும் யாயும் யாராகியனரோ, யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பேசுகிற தமிழாகவா இருக்கிறது? காட்டுமிராண்டி தமிழாக அல்லவா இருக்கிறது? என்றுதான் கூறினார். இந்த வரிகளை எல்லாம் விட்டுவிட்டு பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று மட்டுமே பேசி வருகிறார்கள். இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறிய போது பெரியார் மறுக்கவில்லை. “ஆமாம் நான் சொன்னேன்” என்றார். எப்போதும் அவர் மறுக்கவே இல்லை.

ராமன் படத்தை செருப்பல் அடித்ததாக குற்றச்சாட்டு வந்தபோது, பெரியாரிடம் கேட்டார்கள்; பெரியார் ஆமாம் அடித்தேன் என்று சொன்னேன். ஆமாம் இன்னும் அடிக்க வேண்டிய சாமிகள் நிறைய இருக்கிறது. அடிக்க வேண்டிய ஆசாமிகளும் இருக்கிறார்கள்; படிப்படியாக முன்னேறுவோம் என்று பெரியார் சொல்லியிருக்கிறார்.

பெரியாரை மூலத்தில் படிக்க வேண்டும். பிரம்ம சூத்திரத்துக்கு மூன்று நபர்கள் உரை எழுதினார்கள் மூன்று பேரும் வெவ்வேறு விதத்தில் உரை எழுதினார்கள். ஒரே நூலுக்கு மூன்று நபர்கள் எழுதிய உரை மூன்று மதப் பிரிவாக மாறுகிறது. ஆகவே பெரியாருக்கு அப்படி ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது. நாமே பெரியாரைத் தெரிந்து கொள்வோம். எழுத்தை மூலத்தில் படிப்போம்; அவர் சொன்னதை கேட்போம் என்று தான் நாங்கள் குடி அரசு தொகுப்புப் பணியை செய்யத் துவங்கினோம்.

1949 வரை பிறகு எந்தவித சிரமமும் இல்லாமல் திராவிடர் கழகம் குடி அரசு தொகுப்பை வெளியிட்டுள்ளது. எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. வரவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம். விடுதலையும் அப்படித்தான் வர வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

பெரியாரே, சொல்லுவார் நான் பல தவறுகளை இழைத்து இருக்கலாம். அது என் அறிவுக் குறைவு காரணமாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால் எந்த ஒன்றையும் ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டு மாற்றிக் கொண்டிருப்பேனே தவிர இதனால் எனக்கு ஆபத்து வரும் என்ற அச்சத்தினாலோ ஆதாயம் வரும் என்ற மகிழ்ச்சியினாலோ செய்திருக்க மாட்டேன் என்றார். லட்சியத்தையும் அவர்தான் கொடுத்தார்; வேலை திட்டமும் அவர்தான் கொடுத்தார். இரண்டுக்கும் உள்ள முரண்பாடுகள் இயல்பாகவே வரும். சென்னைக்குப் போவது லட்சியம் என்று சொல்லிவிட்டால் என்னை நீங்கள் சேலத்தில் நிறுத்தி கேட்கக் கூடாது. நீ சென்னைக்குப் போகிறாய், சேலத்தில் என்ன வேலை என்று கேட்க முடியாது அப்படித்தான். பெரியார் ஒவ்வொரு படியாக சமுதாயத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். லட்சியத்தை சொல்லிவிட்டு அவர் போகவில்லை. தன் காலகட்டத்தில் வேலைத் திட்டங்களில் நிறைவேற்ற முயற்சித்தார்; முழுமையாக நிறைவேறாமல் இருக்கலாம் பயணம் தொடருகிறது.

இப்போது சில தற்குறித் தலைவர்கள் எல்லாம் வந்து விட்டார்கள். பெரியார் எத்தனை ஜாதிகளை ஒழித்தார்? என்று கேட்பார்கள். ஜாதி என்ன மனிதனா ஒவ்வொருவராக கொலை செய்துவிட்டுப் போவதற்கு? எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஜாதிய சிந்தனைகளை அழித்தால் தான் அது அழியும். ஒவ்வொரு ஜாதியாக ஒழித்து விட்டா போக முடியும்? இப்படி சில முட்டாள்கள் இருக்கிறார்கள். இப்போது தலைவராகி விட்டார்கள். அதுவும் தமிழ்த் தேசியம் பேசுகிற தலைவர்களாக கேள்வி கேட்கிறார்கள்.

இந்த விருது என்பது எனக்கு மட்டுமல்ல; என்னோடு சேர்ந்து உழைத்த அத்தனை தோழர்களுக்கும் ஒவ்வொருவரும் போய்ச் சேர்ந்ததாக கருத வேண்டும். ஆத்தூரில் இருந்து ஒரு இஸ்லாமிய தோழர் தன்னிடம் குடிஅரசு இருக்கிறது என்று என்னிடம் தகவல் சொல்கிறார். உடனே கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்லி கொடுத்து அனுப்பினார். அவரிடமிருந்தது வெறும் ஐந்து தாள்கள் தான்; அதை பத்திரமாக வைத்திருந்து எங்களிடம் கொடுத்தார். நாங்கள் என்ன செய்தோம் என்றால் அவர் கொடுத்த அந்த ஐந்து குடி அரசு தாள்களையும் லேமினேட் செய்து அவரிடம் திருப்பிக் கொடுத்தோம்.

ஒவ்வொருவராக தோழர் என்னிடம் இருக்கிறது, என்னிடம் இருக்கிறது என்று தகவல் சொன்னார்கள். தோழர் சாலமன் பாப்பையா வைத்திருந்தார் வைத்திருப்போம் என்று யாராவது எதிர்பார்த்து இருப்போமா? அவர் வைத்திருந்தார். ஒரு பழைய புத்தகக் கடையில் குடி அரசு இருந்தது, அதை
உடனே வாங்கி வந்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார் சாலமன் பாப்பையா.
யாதவர் கல்லூரியில் இருந்து வாங்கி இருக்கிறோம். நாங்கள் குடிஅரசு தொகுப்பை அச்சிட்டுக் கொடுத்த போது கூட அவர்கள் பணம் கொடுத்து தான் அதை வாங்கிக் கொண்டார்கள். ‘குடிஅரசு’ இதழை எடுத்து நூலாக்கம் செய்த தோழர்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சொல்ல முடியாது. ஒரு பெரிய கூட்டமே இதில் வேலை செய்திருக்கிறது. தோழர் குரிசில் வேலை செய்து இருக்கிறார். மின்வாரியத்தில் வேதியியல் ஆய்வாளராக இருந்தவர். பணிநிமித்தமாக அவர் வட மாநிலங்களுக்கு போனார். குடி அரசு திருத்தங்களை அங்கிருந்து கொண்டு செய்தார். இரவு பகலாக தோழர் தாமரைக் கண்ணன் தட்டச்சு பணிகளை மேற்கொண்டார். இப்படி நிறைய தோழர்கள் குடிஅரசு நூலாக்கம் பெறுவதில் உழைத்திருக்கிறார்கள். சமூகத்தைப் புரட்டிப் போடுகிற ஒரு தலைவருடைய சிந்தனைகள் எழுத்துக்கள், அது சமுதாயத்திடம் போய்ச் சேரவேண்டும் என்று அக்கறையில் செய்திருக்கிறார்கள். நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம்.

இப்போது கூட சிலர் குடிஅரசை நாங்களும் வெளியிடலாமா? என்று கேட்கிறார்கள்; தாராளமாக வெளியிடுங்கள் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

50 ஆண்டுகளுக்குப் பின்னால் வரும் இளைஞர்கள் என்னை பிற்போக்குவாதி என்று கூறுவார்கள். அந்த நிலையை நோக்கி சமுதாயம் வளர வேண்டும் என்றார் பெரியார்.

“தன்னை மகான் என்றோ, மகாத்மா என்றோ புகழாதீர்கள் என்னை அயோக்கியன் என்று சொல்லுங்கள்; அயோக்கியன் என்று சொன்னால்தான் என்னுடைய வார்த்தையை கூர்மையாக மக்கள் கவனிப்பார்கள். அப்போதுதான் என்னுடைய கருத்து அவர்களிடம் போய்ச் சேரும் என்றார் பெரியார். வேறு எந்த தலைவராவது இப்படி சொல்லி இருப்பார்களா? இதைப் படிக்கும் போதெல்லாம் வியப்பாக உள்ளது.

நீ ஜாதி இல்லை என்று சொல்கிறாயே உன்னுடைய மகளை பறையர் சமூகத்திடம் கொடுப்பியா? என்று கேட்டார்கள். இது அறிவீனமான கேள்வி அல்லது அயோக்கியத்தனமான கேள்வி. என் மகளை அவர் விரும்பியவருக்கே திருமணம் செய்து கொடுப்பேனே தவிர, தூக்கித் தருவதற்கு பண்டம் அல்ல அது மனித உயிர் என்று 1930-களில் பெரியார் சொன்னார். 1930 -1960 வரை ஒரே சிந்தனையில் பெரியார் பேசி இருக்கிறார். இப்படி பல செய்திகளை நாங்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர் தம்பிக்கு நன்றி சொல்ல வேண்டும். எங்களுக்கு முதல் அறிமுகமே ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலின் வழியாகத்தான்.

நாம் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய தமிழ்நாட்டை சமத்துவமான ஜாதி பேதமற்ற, ஜாதி வெறியர்கள் இல்லாத ஒரு சமூகத்தை படைப்பதற்கு உழைப்போம். பெரியார் 1931-ல எழுதுகிறார்; உயர்ஜாதி, கீழ்ஜாதி என்கிற வர்ண பேதம் முடிய வேண்டும்; ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு ஒழிய வேண்டும்; ஏழை பணக்காரன் என்ற பொருளியல் பேதம் ஒழிய வேண்டும்; இதுவே நம்முடைய கொள்கையாக இருக்கட்டும் என்று அவர் சொல்கிறார். அந்த சமுதாயத்தை படைப்பதற்கு நாம் அனைவரும் நம்மால் ஆன வழிகளில் நம்மால் ஆன முயற்சிகளில் ஈடுபடுவோம் ஈடுபட வேண்டும் என்றார் கொளத்தூர் மணி.
பெரியார் முழக்கம் இதழ் 25092025

You may also like...