செப்-17-ல் சென்னையில் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டம் ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி திரளும் இளைஞர்கள்
“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், செப்-17 அன்று, மாலை 5 மணிக்கு, திவிக திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத் தலைமையில், சென்னை இராயப்பேட்டை வி.எம் தெருவில் நடைபெற்றது. கழக இளைஞரணி மற்றும் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் இணைந்து பொதுக்கூட்ட வேலைகளை சிறப்பாக செய்திருந்தனர்.
பகுத்தறிவுப் பாடல்களை, “புதுவை விடுதலைக் குரல்” தோழர்கள் எழுச்சியுடன் பாடினார்கள். ராப் பாடலை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு பாடினார். திவிக மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – பொன்ராஜ் ஆகியோரின் சமூக அரசியல் நையாண்டி நிகழ்ச்சி, மக்களின் கவனத்தைப் பெற்றது.
உச்சபட்ச ஆதிக்கத்தை செலுத்தும் பார்ப்பனர்களை எதிர்க்காமல் இருப்பதற்காக, பிற்படுத்தப்பட்டவர்களையும் பட்டியலினத்தவரையும் தங்களுக்குள் மோதிக்கொள்ளச் செய்யும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் விதமாக, புராண இதிகாசங்களை மேற்கோள் காட்டி, பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புதுவை தீனா உரையாற்றினார்.
ஜாதி ஒழிப்பில் சமரசமின்றி திராவிடர் விடுதலைக் கழகம் இயங்குவதாகக் கூறிய மக்கள் வழக்கறிஞர் ப.பா.மோகன், திவிக உடனான அவருடைய களஅனுபவங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். கார்ல் மார்க்ஸ் இந்தியாவில் பிறந்திருந்தால், அவர் பெரியாராகத் தான் வாழ்ந்திருப்பார் என்று அவர் கூறிய கருத்து, பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஜாதியால் ஒரு பயனும் இல்லை என்பதை, தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம், நகைச்சுவையாக விளக்கினார் இனமுரசு சத்தியராஜ். நான் ஒரு பெரியாரிஸ்ட், நான் நடித்தபடங்களிலேயே பெருமையாக கருதுவது ‘பெரியார்’ படம் தான் என்றார்.
நிறைவாக சிறப்புரையாற்றிய பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், இன்னும் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்கிறீர்கள்? என்பதற்கு வரலாற்றிலிருந்தும், சமகால நிகழ்வுகளிலிருந்தும் எடுத்துக்காட்டுகளை சுட்டிக்காட்டினார்.
இளைஞர் படையின் ஜாதி ஒழிப்புப் பரப்புரையை வெகுவாகப் பாராட்டினார். ஜாதி ஒழிப்புச் செயல்திட்டத்தில், கிராமக் கட்டமைப்பு உடைப்பையும், ஜாதிச் சங்கங்களை சேர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் ஜாதி மறுத்து – சடங்கு மறுத்து, திருமணம் செய்துகொண்ட கழகத் தோழர்களை பாராட்டும் வகையில், 20க்கும் மேற்பட்ட இணையர்களுக்கு இனமுரசு சத்யராஜ் வழங்கினார்.
இளைய தலைமுறையினரை பெரிதும் கவர்ந்த ஜாதி எதிர்ப்பு பரப்புரையில் 6 தோழர்கள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். 10 நாட்கள் தொடர் பரப்புரையில் பங்கேற்ற 30-க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு நினைவுப்பரிசாக கருப்புச்சட்டைகளை இனமுரசு சத்யராஜ் வழங்கினார். கருத்துரையாற்றிய இனமுரசு சத்யராஜ், மக்கள் வழக்கறிஞர் ப.பா மோகன் அவ்ர்களுக்கு கழக வெளியீடுகளை குமார், கோபி ஆகியோர் வழங்கினார்கள்.
கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக, திருவல்லிக்கேணி பகுதிக் கழகத்தின் சார்பில் யாழினி ரூ.5000 கழக பொதுச் செயலாளரிடம் வழங்கினார்.
தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், தென்சென்னை மாவட்டச் துணை செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வ. வேலு, தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி, திருவல்லிக்கேணி பகுதி பொறுப்பாளர்கள் சூர்யா, சே. ராஜேஷ், IT WING தோழர்கள் தேன்மொழி, எழில், வீரா, அசோக், ஏசுகுமார், ராஜன், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கழகச் செயல் வீரர்களும், தோழமை கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
செய்தி- ம.கி. எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்)
பெரியார் முழக்கம் இதழ் 25092025
